தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

20 September 2012

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம்: உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லிம்கள்

செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். ஆம், இவ்வருடமும் செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த சம்பவம் அது.யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன.
வழமையாக லிபியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தேர்ந்தெடுக்கும் பெங்காஸி நகரில் தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனாலும் இம்முறை ஆர்ப்பாட்டம் செய்த குறித்த இடம் பாதுகாப்பு பிரதேசத்துக்குட்பட்டது. நூற்றுக் கணக்கானவர்கள் ஏவுகணைகள், கைக்குண்டுகள், துப்பாக்கிகள் சகிதம் பெங்காஸியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உணர்வுகள் உச்சத்தைத் தொட கையிலிருந்த கைக்குண்டுகளும், ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் தூதரக வளாகத்தைப் பதம்பார்த்தன. கம்பத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கொடி கீழிறக்கப்பட்டு கிழித்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. தூதரகம் தீயில் கருகியது. இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தூதரகத்தை தீயிலிருந்து மீட்பதற்குள் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீபன் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் 4 பேர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரைப் பலிகொடுத்தனர். இது இவ்வாறிருக்க குறித்த அதே நேரத்தில் எகிப்திலும் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அமெரிக்க தூதரக வளாகம் இம்முறை தஹ்ரீர் சதுக்கம் செய்யும் பணியினை செய்தது என்றால் கூட பிழையிருக்காது. அரைக் கம்பத்தில் சோகையிழந்து அசைந்து கொண்டிருந்த அமெரிக்க தேசியக் கொடிக்கு பதிலாக கறுப்புக் நிற கொடி ஏற்றப்பட்டு அமெரிக்க தேசிய கொடி தீயில் போடப்பட்டது. உடனடியாக உஷாரானது எகிப்திய காவல்துறை. கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுத்து நிறுத்தி தூதுவர் உள்ளிட்டோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஏன் எதற்கு இந்த கொலைவெறிப் போராட்டம்? ஒருவரின் உணர்வுகளோடு விளையாடும் போது இப்படித்தான் வெளிப்பாடுகள் இருக்கும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராகவே இத்தனை ஆர்ப்பாட்டங்கள். முஹம்மத் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் இவ்வாறான திரைப்படங்களும் கேலிச்சித்திரங்களும் ஒன்றும் புதிதல்ல. எனினும் காத்திரமான நடவடிக்கைகள் இல்லாததால் இவ்வாறான இழிவான நடவடிக்கைகள் முஸ்லிம்களை துரத்திய வண்ணமுள்ளன. உண்மையில் இத்திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பான சந்தேகமும் இருக்குமல்லவா? இஸ்லாத்துக்கெதிரான குறித்த திரைப்படம் தொடர்பில் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம். 55 வயதான இஸ்ரேலிய அடிப்படையைக் கொண்ட தலைவர் நகவ்லா பாசிலி நகவ்லா. இவர் தான் இப்படத்தினுடைய தயாரிப்பாளர். இத்திரைப்படத்தினை தயாரிக்க அவருக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது. இந்த நிதித் தொகையானது சுமார் 100 இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து திரட்டப்பட்டிருப்பதாக மிக நம்பகமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சாம் பாசிலி இஸ்லாம் ஒரு புற்றுநோய் இதனை வளரவிடக்கூடாது என கூறிய வார்த்தைகளும் ஊடகங்களில் பதிவாகியிருந்தது. 2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தயாரான இந்த இரு மணித்தியால திரைப்படம் முஸ்லிம்கள் மனதை வெகுவாக புண்படுத்தியுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் செரிடோஸில் வசிக்கும் இவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏ.எப்.பி.சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. காசோலை மோசடி வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து விடுதலையான இந்த பாசிலி பாலைவன போர் வீரன் (Desert Warrior) என்ற ஒரு திரைப்படத்தை எடுப்பதாகக் கூறியே இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார். முஸ்லிமின் அப்பாவித்தனம் (Innocence Of Muslim) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்புத் திரைப்படத்தை இயக்கியவர் பிரபல ஹொலிவூட் இயக்குனரான எலன் ரொபர்ட்ஸ். எனினும் பாலைவன போர் வீரன் (Desert Warrior) என்ற படத்தின் இயக்குனராகவே இவரது பெயர் பதிவாகியுள்ளது. எனினும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தாம் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்னரான போர் வீரனின் கதை என்று கூறி தங்களை இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் இது மத நிந்தனைகளைக் குறித்தான படம் என்பது தமக்குத் தெரியாது எனவும் நடிப்புக்குப் பின்னர் கதாப்பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் போன்றன மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அங்கலாய்க்கின்றனர். அனா குர்ஜி இத்திரைப்படத்தில் முக்கிய கதாநாயகி. ஜோர்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளம் மனைவியாக நடித்துள்ளார் இவர். இந்த ஜோர்ஜ் என்ற பாத்திரமே பின்னர் முஹம்மத் என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ள குர்ஜிக்கு இத்திரைப்படத்தில் நடிக்க கொடுக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 75 டொலர்கள். இவை தான் நடந்தவை. அடிதடி மசாலா படமாக விளக்கம் கொடுக்கப்பட்டு பின்னர் நடித்தவர்களுக்கே தெரியாமல் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையானது இஸ்லாத்துக்கெதிராக மிகத்திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு செயற்பாடே. முஸ்லிம்கள் இத்திரைப்படம் குறித்து விழித்துக் கொள்ள அல்லது போராட்டங்களை முன்னெடுக்க அவர்களது உணர்வினை தூண்டியது குறிப்பாக யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களில் "The Real Life Of Muhammed, Muhammed Movie' என்ற பெயர்களில் வெளியான 14 நிமிட முன்னோட்டங்களே (Trailers). ஜூலை மாதம் சாம் பாசிலி என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள குறித்த முன்னோட்டத்தை சுமார் 450,000 பேர் பார்வையிட்டுள்ளனர். அத்துடன் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி குறித்த அதே பயனரினால் அதன் அரபு வடிவம் உள்ளிட்ட மேலும் சில முன்னோட்டங்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இதனையும் பார்வையிட்டுள்ளனர். குறித்த முன்னோட்டங்களிலேயே நபியையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்தும் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த முன்னோட்டங்களை தனது பக்கங்களிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளமை கவலைக்குரியதே. திரைப்படத்தை பொறுத்தவரை கேவலமான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு மேலதிகமாக, 2010 ஆம் ஆண்டு குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாரான டெரி ஜோன்ஸின் கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தை விட எகிப்து தேவாலயமொன்றில் காண்பிக்கப்பட்ட ""குருடனாக இருந்தேன் விழித்துக் கொண்டேன்'' என்ற அல்குர்ஆனையும் நபியையும் இழிவுபடுத்தும் நாடகமொன்றுக்கு எதிராகவும் எகிப்தியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலகளவில் இன்று தொடரும் ஆர்ப்பாட்டங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இத்திரைப்படத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன் இவ்வாறான திரைப்படங்களின் பின்னணியில் இரத்தக் களறியை தூண்டும் இனவாதிகள் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். லிபியாவின் பெங்காஸி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு தமது உயிரை இழந்த அமெரிக்கத் தூதுவரின் இழப்புக்கு பின்னால் அமெரிக்காவும் இது விடயத்தில் விழித்துக் கொண்டதெனலாம். வெள்ளை மாளிகை பேச்சாளர் குறித்த மத நிந்தனையை திரைப்படக் குழுவினர் மீது சுமத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படு வருவதாக தெரிவித்ததிலிருந்து அதனை உறுதிப்படுத்த முடிகிறது. இதற்கு மேலதிகமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லிபியாவின் கடற் பிராந்தியத்துக்கு 2 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளார். மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான 95 கம்பனிகளிலிருந்தே விசேட திறன் கொண்ட இவ்விரு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கொல்லப்பட்டாரா அல்லது புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் இறந்தாரா என்பதிலும் சர்ச்சை நீடிக்கிறது. எவ்வாறாயினும் இதற்குரிய பொறுப்பை Innocence of Muslim திரைப்படக் குழுவினரே ஏற்க வேண்டும். உலக அளவில் லிபியா, எகிப்து, யெமன் என ஆரம்பித்த போராட்டங்கள் சூடான், கட்டார் மொரோக்கோ, அவுஸ்திரேலியா, இந்தியா, சிரியா பலஸ்தீன், மலேசியா என நீண்டு கொண்டே செல்கின்றன. எமது இலங்கைத் திருநாட்டிலும் போராட்டங்கள் இடம்பெற்றன. இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன நாளையும் இடம்பெறவுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கெதிரான போராட்டத்துக்கும் தூதுவராலயங்கள் மீதான தாக்குதலுக்கும் அல் கைதா அழைப்பு விடுத்துள்ள நிலையில் தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ளப் போவதில்லையென ஒபாமா குமுறியுள்ளார். இதற்கு மேலதிகமாக நாளைய தினம் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி அழைப்பு விடுத்துள்ளதுடன் இஸ்லாமிய மத நிந்தனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு சர்வதேச சட்டமொன்றின் அவசியத்தை சவூதி அரேபியாவின் பிரபல முப்தியொருவரும் துருக்கியின் பிரதமரான அர்துகானும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் (இத்திரைப்படத்துக்கு எதிராக) காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி எகிப்து ஜனாதிபதி முஹம்மது முர்ஸியும் தனது அமெரிக்க விஜயத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி உணர்வுகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் வித்திட்ட இந்தத் திரைப்படத்துக்கும் அதன் குழுவினருக்கும் நடவடிக்கை எடுப்பதை விடுத்து மக்களின் உணர்வுகளோடு விளையாட அமெரிக்கா தயாராவது கவலைக்குரியது. ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு இதன் பின்னர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டால் மட்டுமே முற்றுகையிடப்பட்ட அமெரிக்கத் தூதரகங்களுக்கும் தூதுவர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க முடியும். மத நிந்தனை செய்யும் இவ்வாறான திரைப்படங்கள் திரையிடப்படுவதனூடாகவும் அவை தொடர்பில் வெளிப்படுத்தப்படவதனூடாகவும் ஆத்திரம் ஊட்டப்பட்டு அமெரிக்காவுக்கெதிரான வெறுப்பும் கொள்கைகளும் வளருமே தவிர முஸ்லிம்களிடத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை ஒருபோதும் உயர்த்தாது என்பது மட்டும் திண்ணம். -எம்.எப்.எம்.பஸீர்
 THANKS;VIRAKESARI.LK

No comments:

Post a Comment