றவூப் ஸெய்ன்
சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக ஆதிக்கத்தை தன்கையில் எடுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் புதிய உலக ஒழுங்கு ஒன்றை (New World Oder) அறிமுகம் செய்தார். 1993 இல் இஸ்ரேலின் சிமோன் பெரஸ் Aryenoar உடன் சேர்ந்து இப்புதிய ஒழுங்கை ஒரு நூலாகவும் வெளியிட்டார்.
பின்னர் அமுலுக்கு வந்த புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின் (PNAC) அடிப்படையில் கிளின்டனும் அவரைத் தொடர்ந்து புஷ்ஷும் மத்திய கிழக்கு அறபு நாடுகளை இராணுவ மயமாக்குவதில் வெறியோடு ஈடுபட்டனர். புஷ்ஷின் இராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் மத்திய கிழக்கை "ஒரு புதிய மத்திய கிழக்கு" என்று வர்ணித்தார். அவரது கால உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் உரைகளிலும் இந்தச் சொல்லாடல் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்கின்ற, அதன் தீர்மானங்களுக்கு அடிபணிகின்ற, அதன் வெளிநாட்டுக் கொள்கைகளை முரண்டு பிடித்து எதிர்க்கின்ற எந்த நாடும் இல்லாத ஒட்டுமொத்த மத்திய கிழக்கையே கொண்டு; தனது வார்த்தைகளால் வெளிப்படுத்தி வந்தார். அதற்காகவே ஆப்கான், ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு, பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடு, அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் உருவாக்கப்பட்டன. வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 45% மானவை மத்திய கிழக்கு அறபு நாடுகளை இராணுவ ரீதியில் ஆக்கிரமிப்பதற்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், இன்று கொண்ட லீசாவின் புதிய மத்திய கிழக்கு வேறொரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பெரும் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியத்தால் புருவம் உயர்த்தும் ஒபாமா, இதற்கு மேலும் இராணுவத் தளங்களைப் பராமரிக்க முடியாமல் அறபு நாடுகளிலிருந்து முழுத் தோல்வியுடன் வெளியேறி வருகின்றார்.
அமெரிக்காவின் இந்த இராணுவத் தோல்வி ராஜதந்திரத் தோல்வியாகமாறி, இப்போது ஒட்டுமொத்த அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது. எதிர்பாராத விதத்தில் நடந்த அறபு வசந்தம் அமெரிக்காவின் புதிய மத்திய கிழக்குக் கனவை சிதைத்து விட்டுள்ளது.
2020 இற்குள் மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்கள் அமெரிக்க சியோனிஸத் திட்டங்களை மொத்தமாகவே கிடப்பில் போட்டு விடும். எகிப்து, தூனிஸியா, மொரோக்கோ,லிபியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய உலகைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. அதிலும்7 கோடி மக்களைக் கொண்டுள்ள எகிப்தின் புவியரசியல் அறபு-இஸ்லாமிய உலகின் பெரும் பலமாக விளங்குகின்றது.
சிரியா, மொரிட்டானியா, யெமன் ஆகிய நாடுகளிலும் இஸ்லாமியவாதிகளே அதிகாரத்தை கையேற்கப் போகின்றனர். இந்த மாற்றங்கள் இன்று இஸ்ரேலியத் தரப்பில் ஏற்படுத்தியுள்ள குலைநடுக்கம் மூடி மறைக்கப்படுகின்றது. அச்சமில்லாததைப் போன்று காட்டிக் கொள்வதுதான் வீரம் என்று யாரோ சொன்னது போன்றுதான் இன்றைய இஸ்ரேலின் நிலை.
மலரும் இன்றைய புதிய மத்திய கிழக்கு கிளின்டனும் கொண்டோலிஸாவும் மனப்பால் குடிந்த மத்திய கிழக்கு அல்ல. அதற்கு முற்றிலும் எதிரானது. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அடிபணிய வைக்கும் ஆற்றல் அதற்குள்ளது. பணிய மறுக்கும் இஸ்லாமியப் பண்பாட்டின் ஊற்றாக அது இருக்கப் போகின்றது.
முஸ்லிம் உலகின் பொருளாதார வளங்களை ஒன்றுகுவித்து, பலமான பொருளாதார, இராணுவ,அரசியல் கூட்டுக்களை அது உருவாக்கப் போகின்றது. மன்னர்களினதும் மதச்சார்பற்ற மாபியாக்களினதும் காலடிகளில் மண்டியிட்டுக் கிடந்த மத்திய கிழக்கின் கதை முடிந்து விட்டது.
இந்த மாற்றம் 400 மில்லியன் அறபு மக்களுக்கு மத்தியில் அவர்களது வாசற்படியில் கொலை வெறித் துப்பாக்கிகளோடு எழுந்து நிற்கும் சியோனிஸ சக்திகளை கண்டிப்பாக எதிர்கொண்டே ஆகும். ஒடுக்கப்பட்டு வரும் பலஸ்தீன மக்களின் கனவுகளை நனவாக்க மலரும் இப்புதிய மத்திய கிழக்கு பலமாக மிகவும் இருக்கும்.
யூத, சியோனிஸ கனவு உடைபடும் இந்த மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இருப்புக் குறித்த அவநம்பிக்கைகள் இப்போதே எழத் தொடங்கிவிட்டன. இதனால்தான் வழமையான தொகைக்கு மேலதிகமாக பல மில்லியன் டொலர்களை ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ளது.
நவம்பர் தேர்தலில் அமெரிக்காவில் வாழும்5 மில்லியன் யூதர்களின் அத்தனை வாக்குகளையும் அள்ளிச் சுருட்ட வேண்டும் என்பதுதான் ஒபாமாவின் ஒதுக்கீட்டுக்குப் பின்னாலுள்ள அரசியல். ஆனாலும், இது இன்றைய இஸ்ரேலுக்கு அவசியமாகியுள்ளது.
கேம் டேவிட் ஒப்பந்தத்தை முர்ஸியின் தலைமையிலான புதிய எகிப்திய அரசாங்கம் தொடர்ந்தும் பேணுமா? 1967 எல்லைப் புறங்களுடன் கூடிய பலஸ்தீனை விட்டுக் கொடுக்குமா?இஸ்ரேலுக்கான இயற்கை எரிவாயு மற்றும் ஏனைய ஏற்றுமதி குறித்து புதிய அரசாங்கம் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன? சினாய் பாலைவனம் குறித்து முர்ஸியின் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ரபா எல்லைப்புறம் பலஸ்தீன மக்களின் நலன்களுக்காக எந்தளவுக்குப் பயன்படுத்தப்படும்? இதுபோன்ற கேள்விகளே இன்று இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாஹுவின் சிந்தனையைக் குடைந்து கொண்டிருக்கிறது.
எகிப்திய தேர்தலில் முர்ஸியை எப்படியும் தோல்விகாணச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஷபீக்கை களமிறக்கிய அமெரிக்க சியோனிஸ சக்திகள், அதிலடைந்த தோல்வியினால் மூக்குடைந்தன. தேர்தல் நடை பெற்றபோது வெள்ளை மாளிகையின் பேச்சாளர் நெடன்யாஹுவை தொலைபேசியில் அழைத்து ஷபீகை வெற்றிபெறச் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் உள்ளூர் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்படுவதாக ஆறுதலளித்துக் கொண்டிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை தூக்கம் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த நெடன்யாஹுவுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
எகிப்தில் புரட்சி தொடங்கியபோது சியோனிஸத்தின் உற்ற நண்பனான முபாரக்கை காப்பாற்றுவதற்கும் அதிகாரத்தில் நீடிக்கச் செய்வதற்கும் சியோனிஸம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்தே, ஷபீக்கை ஆதரிக்க முடிவு செய்தனர். அஹ்மத் ஷபீக்கும் முபாரக் போன்று சியோனிஸத்தின் உற்ற நண்பராகவும் அமெரிக்காவின் மீது விசுவாசமுள்ளவராகவும் பிராந்தியத்தில் இஸ்ரேலிய நலன்களைக்காக்கும் முகவராகவுமே முபாரக்கின் ஆட்சியில் செயல்பட்டார்.
இந்த முயற்சிகளிலெல்லாம் தோல்விகண்ட இஸ்ரேல், இப்போது அதன் ராஜதந்திர சமன்பாடுகளை மாற்றத் தொடங்கியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல்களையும் அதன் முடிவுகளையும் தாம் மதிப்பதாக நெடன்யாஹு அறிக்கை விட்டமை மிகவும் வேடிக்கையானது. இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரும் ஜனநாயக அடிப்படையிலான அரசியல் மாற்றத்தை இஸ்ரேல் வரவேற்கின்றது என்று கூறியிருந்தார்.
வேறுவழியின்றி முர்ஸியின் தலைமையிலான எகிப்தின் இஸ்லாமிய அரசாங்கத்தை வெளிப்படையில் ஆதரிக்கும் நிலைப்பாட்டை சியோனிஸ சக்திகள் வெளிப்படுத்தினாலும் எகிப்து இஸ்ரேலை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற அச்சமே அவர்களுக்கிடையில் மேலெழுந்துள்ளது.
முன்னாள் பலஸ்தீன போராளியும் ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவருமான ஷஹீத் அஹ்மத் யாஸின்,இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் வழங்கிய நேர்காணலொன்றில், "எதிர்வரும் காலம் பலஸ்தீனர்களுக்கு வெற்றியையும் விமோசனத்தையும் தரும் காலமே. 2020 ஆம் ஆண்டிற்குள் மத்திய கிழக்கில் பாரிய மாற்றமொன்று ஏற்படும். அது பலஸ்தீனர்களின் விடுதலைக்கான மாற்றமாக இருக்கும். அல்லாஹ் ஒரு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த 40 ஆண்டுகள் எடுக்கின்றான். இந்த வரலாற்று நியதியின்படி எதிர்வரும் 20 ஆண்டுக்குள் பலஸ்தீனர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். குர்ஆனிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் ஆதாரங்களைப் படித்தே நான் இதனைக் கூறுகின்றேன்" எனத் தெரிவித்திருந்தமையை இன்றைய பலஸ்தீனர்கள் நினைவுகூர்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு அடிபணியும் மத்திய கிழக்குக் கனவு கலைந்து,இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியையும் விமோசனத்தையும் தரும் ஒரு புதிய மத்திய கிழக்கு மலர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்;அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். ஆனால், சூழ்ச்சிக்காரர்களில் மிகப் பெரும் சூழ்ச்சிகாரன் அல்லாஹ்வே" என்ற அல்குர்ஆனின் உண்மையை இஸ்லாத்தின் எதிரிகள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இஸ்ரேலிய சிறையிலிருந்து வெளியான அப்துல் அஸீஸ் துவைக், "இதற்கு மேலும் சியோனிஸ சமன்பாடு செயற்படப் போவதில்லை. சியோனிஸம் ஊனமுற்று வருகின்றது. அதன் ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்து போவதை எந்த ஆதரவு சக்திகளாலும் தடுத்து நிறுத்த முடியாது" எனக் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை.
thanks;.meelparvai.net.
No comments:
Post a Comment