ஜனாதிபதி செயலகத்தில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்
நேற்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பின்
போது சில சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதங்களை வழங்கும் ஏற்பாடுகளை
செய்துகொண்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும்
அதிகாரி ஒருவர் அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடங்கிய அனைத்து
கோப்புக்களையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி ஜனாதிபதி
செயலாளரிடம் கொண்டுவந்தார்.
அப் போது கதிரை திடீரென சாய்ந்துவிட்டது. இதனால் கோப்புக்கள் அனைத்தும்
கீழே விழுந்தன. இதனை ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களாக பதவியேற்க
காத்திருந்தவர்களும் அவதானித்தனர்.
பின்னர் குறித்து அதிகாரி உடன டியாக கோப்புக்களை சரி செய்து ஏற்பாடுகளை
முன்னெடுத்தார். முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிடல் மற்றும்
பொருளா தார அலுவல்கள் அமைச்சராக பத வியேற்றார்.
அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய ஜனாதிபதி அனைவருக்கும்
நியமனக் கடிதங்களை வழங்கிவிட்டு கைகூப்பி மரியாதை செய்தார். ஆனால்
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீன் மற்றும் கபிர் ஹஷீம்
ஆகியோருக்கு ஜனாதிபதி கைலாகு கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.
நியமனக் கடிதங்களில் உள்ள வாசகத்தை வாசித்து சத்திய பிரமாணம்
செய்துவிட்டு அதில் கையொப்பம் இடுவதற்கு இரண்டு பேனைகளை ஜனாதிபதி
செயலாளர் அபேகோன் அங்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சராக பொறுப்பேற்ற சஜித் பிரேமதாச
நியமனக் கடிதத்தில் தனது பேனையை எடுத்தே கையொப்பம் இட்டார். அதன் பின்னர்
பல அமைச்சர்கள் இவ்வாறு செய்தனர்.
எம்.கே.டி.எஸ். குணவர்த்தன காணி அமைச்சராக பொறுப்பேற்ற போது
ஜனாதிபதியின் பக்கம் திரும்பி நின்றுகொண்டு கையொப்பம் இட முயற்சித்தார்.
அப்போது ஜனாதிபதி அவரை மறுபக்கம் அதாவது செயலாளர் பக்கம் திரும்பி
கையொப்பம் இடுமாறு கூறினார்.
சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற ராஜித சேனாரட்ன சத்தியப் பிரமாணத்தை
வாசிக்கும் முன்னர் கையொப்பம் இட்டதையும் அவதானிக்க முடிந்தது. கையொப்பம்
இட்ட பின்னர் அவர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக பொறுப்பேற்ற லக்ஷ்மன் கிரியெல்லவும்
சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நவீன் திசாநாயக்கவும்
சத்தியப்பிரமாணத்தை செய்துவிட்டு ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை
வாங்காமல் வந்துவிட்டனர். பின்னர் ஜனாதிபதி அழைத்து அவர்களுக்கு நியமனக்
கடிதங்களை வழங்கினார்.
மேலும் பிரதியமைச்சராக பதவியேற்ற விஜயகலா மகேஸ்வரனும் இராஜாங்க அமைச்சராக
பொறுப்பேற்ற இராதாகிருஷ்ணனும் கபினெற் அமைச்சரான ப. திகாம்பரமும் தமிழ்
மொழியில் சத்தியபிரமாணம் செய்தனர். இதன்போது விஜயகலா சத்தியப்பிரமாணத்தை
வாசிக்கையில் தடுமாறியதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவி
கருணாநாயக்கவுடன் நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார். மேலும் சந்திராணி
பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன்
கலந்துரையாடினார்.
அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் பைசர் முஸ்தபாவுடனும் அர்ஜுன ரணதுங்கவுடனும்
சொற்பநேரம் கலந்துரையாடினார். வீடமைப்பு அமைச்சராக பதவியேற்ற சஜித்
பிரேமதாச நிகழ்வு ஆரம்பிக்க சற்று நேரத்துக்கு முன்னரே சபைக்குள்
வந்தார்.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பாரியார் ஹேமா
பிரேமதாசவும் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இராஜாங்க
அமைச்சர்களின் உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thanks:lankasiri
No comments:
Post a Comment