சுமார் 13 மணித்தியாலயங்கள் கடலில் தத்தளித்த சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தமது உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கிக் காப்பாற்றிய கூட மதிக்காமல் எம்.ஆர்.எம். இர்சாத் என்ற (28 வயதுடைய) கடற்றொழிலாளரை அனைவரும் பாராட்டுகின்றனர். 17 படகுகளையும் 34 மீனவர்களையும் காப்பாற்ற இவர் மேற்கொண்ட முயற்சியை சிங்கள
மீனவர்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். புயல் காற்று வீசி அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் கடலுக்குச் சென்ற மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அவர்களது
குடும்பத்தினர்கள்
கதறி அழுதவாறு கடற்கரையை நோக்கி அணிதிரண்டனர். மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. கும்மிருட்டில் என்ன செய்வதென்று அறியாது மக்கள் கடலை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர். மீன்பிடிப் படகுகளில் மின் வெளிச்சம் காணப்படவில்லை.
இவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பேசிக் கொண்டனர். காலை நேரம் வந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் மருதானைப் பகுதிக்கு படையெடுத்தனர். பொலிஸாரும் கடற்படையினரும் விரைந்து வந்து படகுகளில் எத்தனை பேர் சென்றனர். எத்தனை படகுகள் சென்றன என விசாரித்தனர். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்ற எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என எம்மிடம் கேட்டனர் என
எம்.ஆர்.எம். இர்சாத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நான் கடல் கொந்தளிப்பு நிலை, காற்று, மழை எல்லாவற்றையும் பொருட்படுத்தாது கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை காப்பாற்ற கடலில் பாய்ந்து நீந்திச் சென்றேன். கவிழ்ந்த படகுகளையும் பெரல்களையும் பிடித்து தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றினேன். இவர்களுள் கூடுதலான மீனவர்கள்
சிங்களவர்களாவர். என்னோடு கடற்படையினரும் இணைந்து கொண்டனர். காலை 8 மணி முதல் 12 மணிவரை கடலில் நீந்தி நீந்தி தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினேன். கரைக்குக் கொண்டு வந்த மீனவர்களுள் இருவர் மரணமாகி இருந்ததை பின்னர் அறிந்து கொண்டேன். படகு உரிமையாளரான மொரகல்ல பகுதியைச் சேர்ந்த செம்ஸன் குணசேகர கருத்துத் தெரிவித்தபோது, அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் காலை நேரம் மருதானை
பகுதியில் 3000 க்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டேன். இங்கு கூடுதலான முஸ்லிம் மீனவர்கள் இரவு நேர கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். எனது வாழ்க்கையில் முதல் தடவையாக இப்படியானதொரு சுழல் காற்று வீசுகின்றது. எனது கண் முன்னே பல படகுகள் கவிழ்வதைக் கண்டேன். கடலில் தத்தளிக்கும் உயிர்களைக் காப்பாற்ற தனது உயிரைக்கூட மதிக்காமல் துணிவோடு கடலில் குதித்து நீந்திச்
சென்று சக மீனவர்களைக் காப்பாற்றிய எம்.ஆர்.எம். இர்சாதையும் பாராட்டாமல் இருக்க முடியாது. தாய், தந்தையர்கள் தமது பிள்ளைகளை காப்பாற்றுவது போல் முஸ்லிம் மீனவர்கள் சிங்கள மீனவர்களை மீட்டு அவர்களது வாகனங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச் சென்றதை ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த அனர்த்தத்தின்போது எவ்வித இன, மத,மொழி பேதமும் பார்க்கவில்லை. உயிர்களை காப்பாற்ற
வேண்டும் என்ற நல்ல உள்ளம் முஸ்லிம் மீனவர்களிடம் இருந்தது. சிங்கள- முஸ்லிம் சமூகங்களின் சக்திமிக்க இன உறவை பேருவளை முஸ்லிம் மீனவர்கள் முழு நாட்டிற்கும் வெளிப்படுத்தினார்கள். 13 மணித்தியாலயங்கள் கடலில் தத்தளித்து கரை வந்து சேர்ந்த முஹம்மத் புவாத் முஹம்மத் மலிக் கருத்து தெரிவித்தபோது, ஒரு படகில் நானும் சக மீனவர் எம்.எஸ்.எம். இக்பாலும் 7 ஆம் திகதி மாலை
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோம். அதிகாலை 1.30- மணியளவில் கடும் மழையுடன் காற்று வீசியது. சில நிமிடங்களில் படகு கவிழ்ந்தது. நாம் இருவரும் அந்த படகை பிடித்துக் கொண்டு திசை தெரியாது தடுமாறினோம். கடல் நீரைக் குடித்து காலை நேரம் வரும்வரை அல்லாஹ்விடம் எம்மைக் காப்பாற்றுமாறு வேண்டி துஆ கேட்டோம். நாம் உயிர் தப்புவோம் என கனவில் கூட நினைக்கவில்லை. அல்லாஹ்வை திக்ரு,
செய்தவனாக, ஸலவாத் ஓதியவனாக, பாவ மன்னிப்புக் கேட்டவனாக, எனது குடும்பப் பொறுப்பை அல்லாஹ் பொறுப்பேற்கட்டும் என துஆப் பிரார்த்தனை செய்தவனாக கடலில் அங்கும் இங்குமாக நீந்தினேன். பொழுது விடிந்ததும் பேருவளை வெளிச்ச வீடு (லைட் ஹவுஸ்) பக்கமாக நீந்தி வந்தோம். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்ற ஹெலிகொப்டர்கள் அங்கும் இங்குமாக சுற்றுவதையும் கண்டேன். கடும்
காற்று கடல் கொந்தளிப்பான நிலையில் நாம் அல்லாஹ்வின் உதவியுடன் கரைக்கு நாம் சென்ற படகுடனே வந்து சேர்ந்தோம். அல்லாஹ்வின் உதவியே கரை வந்துசேரக் காரணமாகும் என்றார். 13 மணி நேரம் கடலில் தத்தளித்த போது படகு உடலில் பட்டதனால் இவரது உடலில் காயம் காணப்பட்டது. இவர் நாகொட ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அனர்த்தம் நிகழ்ந்து ஒருவாரம் தாண்டிய போதும் இவர் இன்னும் கடற்றொழிலுக்காக செல்லவில்லை. சுனாமி அனர்த்தத்தின் போதும் இவர் பாதிக்கப்பட்டவர்.
இது இரண்டாவது அனர்த்தமாகும். இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். யூஸுப், நகர பிதா மில்பர் கபூர், பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பதியுதீன், நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் மஸாஹிம் முஹம்மத், அமைச்சர் ராஜித சேனாரத்ன, மாகாண சபை உறுப்பினர்
எம்.எம்.எம். அம்ஜாத், ஐ.தே. கட்சி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் மரிக்கார் உட்பட கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர். மீனவர்களின் பாதுகாப்புக் கருதியும் உடனடியாக மீண்டும் கடற்றொழிலை மேற்கொள்ளவும் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத் பாதுகாப்பு கவசங்களை (ஜெகட்களை) 200 மீனவர்களுக்கு வழங்கினார். மேல் மாகாண
கடற்றொழில் அமைச்சின் பங்களிப்புடன் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஜெகட்கள் வழங்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத்தின்
உடனடி நடவடிக்கை குறித்து மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மருதானை கடற்றொழில் சங்க தலைவரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். பாயிஸ் கருத்துக் கூறும்போது;- மருதானைப் பகுதி மீனவர்கள் தைரியசாலிகள். எந்த நேரத்திலும் உதவி ஒத்தாசை செய்பவர்கள். இந்த அனர்த்தத்தின் போது செயல்பட்ட விதம் முழு நாட்டினதும் பாராட்டைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. சிங்கள
மக்கள் முஸ்லிம்களை பாராட்டுகின்றனர். சிங்கள மன்னர்களுக்கு ஆபத்து வந்த போதெல்லாம் முஸ்லிம்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். இது வரலாறாகும். சிங்கள,- முஸ்லிம் மீனவர்கள் ஒற்றுமையாக தமது தொழிலைச் செய்கின்றனர். இந்த ஒற்றுமையை இந்த அனர்த்தத்தின்போது எல்லோரும் கண்களால் கண்டார்கள். சுனாமியின்போது கூட இப்படியான
நிலையே காணப்பட்டது. சிங்கள- முஸ்லிம் உறவை எச்சக்தியாலும் சீர்குலைக்க முடியாது. பேருவளை மீன்பிடித்துறை முகத்தில் இது போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் போது பயன்படுத்த அம்பியுலன்ஸ் வண்டி வசதி தேவை என்றும் அவர் கூறினார். எம். ஆர். எம். இர்சாதுடன் ஏ. ஜே. எம். ரிஸ்வான் எம். ஜே. எம். நவாஸ், எம். ரி. எம். ரில்வான், எம். எஸ். எம். ரிபாஸ், எம். எம். எம். இல்ஹாம் ஆகியோரும் கடலில்
தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மனிதாபிமான உணர்வுடன் நாம் இந்த மீனவர்களை காப்பாற்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கரைக்கு அழைத்து வந்தோம். எமது உயிரை விட அவர்களது உயிரை நாம் மதித்து இதைச் செய்தோம் என அவர்கள் தெரிவித்தனர். இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டாலும் கூட நாம் ஒரு தாய் நாட்டு
மக்களே. இவ்வாறான அனர்த்தங்களின் போது ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது கட்டாயமாகும். மருதானையை அடுத்துள்ள சிங்களக் கிராமமே பண்டாரவத்தையாகும். இப் பகுதியிலிருந்து கூடுதலான மீனவர்கள் சம்பவ தினம் கடலுக்குச் சென்றிருந்தனர். பல படகுகளில் சென்று காற்றில் சிக்கி கடலில் தத்தளித்த அத்தனை சிங்கள மீனவர்களையும் பாதுகாப்பாக
மீட்டு கரைக்கு கொண்டு வந்தது இந்த இளம் முஸ்லிம் இளைஞர்களே என கடற்றொழில் கூட்டுறவுச் சங்க தலைவரான சுனில் ரம்மியசிறி சில்வா குறிப்பிட்டார். மருதானை முஸ்லிம் மீனவர்களுக்கு அரச மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களது வீர துணிச்சலைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்றார். 50க்கு மேற்பட்ட மீனவர்களை மருதானை முஸ்லிம் இளைஞர்கள் காப்பாற்றிய சம்பவம் வரலாற்றில்
பதியப்பட வேண்டியதாகும். என மேல் மாகாண சபை முன்னாள் கடற்றொழில் அமைச்சரான ஏ. எம். யூஸுப் கூறினார். அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நாட்டில் இல்லாத போதிலும் அவரது அமைச்சு அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பு நகர பிதா மில்பர் கபூர் வழங்கிய பங்களிப்பு குறித்து மீனவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். யூஸுப், பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ. ஆர். எம்.
பதியுத்தீன், முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரை எமக்கு என்றும் மறக்க முடியாது என்றும் இவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தனர். தனது ஊர் மீனவர்கள் பாதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் உலர் உணவுப் பார்சல்களுடன் ஓடோடி வந்தவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரே என அவர்கள் கூறினர்.
தமிழ்:
பேருவளையிலிருந்து பி.எம்.எம். முக்தார்
www. vidivelli .lk/morecontent.php?id=2661
No comments:
Post a Comment