சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அவசர இராணுவ உதவிகளை வழங்க மேற்கு மற்றும் அரபு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. கட்டாரில் சனிக்கிழமை கூடிய சிரியாவின் நட்பு நாடுகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 11 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்த இந்த கூட்டத்தில் "களத்தில் இருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு
தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க" இணக்கம் காணப்பட்டது. இந்த கூட்டத்தின் இறுதி அறிக்கையில், சிரிய யுத்தத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈராக், ஈரான் போராளிகள் தலையிட்டுள் ளதற்கும் கண்டனம் வெளியிடப் பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிரிய மோதலில் இதுவரை 90,000 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வெளிநாட்டு ஆதரவு
பெற்ற தீவிரவாதிகளுடனேயே போராடி வருவதாக சிரிய அரசு கூறி வருகிறது. கடந்த சனிக்கிழமை கூடிய சிரிய நட்பு நாடுகள் குழுவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்குவதோடு மறுபுறத்தில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கான இராணுவ உதவிகள்
கிளர்ச்சியாளர்களின் இராணுவ கட்டளையகத்தினூடாக விநியோகிக்க மேற்படி சிரிய நட்பு நாடுகள் இணங்கியுள்ளன. ஏற்கனவே கிளர்ச்சியாளர்களுக்கு நேரடி இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவுக்கு எதிரான ஐ. நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து முடக்கி வந்ததற்கு பகரமாகவே சிரிய
நட்பு நாடுகளின் குழு தோற்றுவிக்கப் பட்டது. "ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி எமது பயணத்தை நிறுத்திவிடாது" என சனிக்கிழமை கூட்டத்தில் கட்டார் பிரதமர் வலியுறுத்தினார். சிரிய கிளர்ச்சியாளர்கள் அண்மைக் காலத்தில் அரச தரப்பு தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் தமக்கு புதிய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்
இது யுத்தத்தை திசைதிருப்பும் என்றும் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை கூறியிருந்தனர்.
Thanks:thinakaran
No comments:
Post a Comment