பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த கிரிஸ் ஹோல்ம்ஸ்(31) என்பவர் ஸ்டாண்ஸ்டெட் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கேக் தயாரித்து விற்கும் தொழிலையும் பகுதி நேரமாக செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வழக்கம் போன்று வேலை நேரத்தில் விமான நிலையத்திற்கு சென்ற இவர்,
அழகான அட்டைப் பெட்டியை தனது உயரதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்த பெட்டியின் உள்ளே செவ்வக வடிவில் ஒரு பெரிய கேக் இருந்தது. கேக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிற 'ஐசிங்' கின் மீது கருப்பு நிற கிரீமால் தனது ராஜினாமா கடிதத்தை கிரிஸ் ஹோல்ம்ஸ் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தார். அதில், நிர்வாகத்திற்கு சமீபத்தில் தந்தையான பின்னர் வாழ்க்கை எவ்வளவு விலை
மதிப்பு மிக்கது என்பதை நான் உணரத் தொடங்கியுள்ளேன். இந்த வாழ்க்கையில் என்னை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் எனது மனமகிழ்ச்சிக்கும் உகந்த வகையில் நேரத்தை செலவிட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த காரணத்திற்காக எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன். இனி எனது நேரத்தையும், ஆற்றலையும் குடும்பம் மற்றும் எனது கேக்
தொழிலை கவனிப்பதற்காக செலவிட முடிவு செய்துள்ளேன் என்று எழுதியுள்ளார். தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போதே ராஜினாமா செய்ய முடிவு செய்த கிரிஸ் ஹோல்ம்ஸ், அதை புதுமையாக செய்ய யோசித்து, யோசித்து ராஜினாமா கடிதத்தை கேக் வடிவில் தற்போது சமர்ப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment