ஊர் செய்திகள்
date
25 March 2013
பர்மாவில் மத வன்முறை நீடிக்கிறது.
பர்மாவில் நடந்துவருகின்ற மதக்
கலவரங்களின் தொடர்ச்சியாக நாட்டின் மத்திய
பகுதியில் பள்ளிவாசல்களும் வீடுகளும்
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மெய்க்டிலா நகரத்தில் மட்டுமல்லாது வேறு பல
இடங்களிலும்
தற்போது வன்முறை பரவியுள்ளது. தலைநகர்
ரங்கூனிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள ஓ த கோன் நகரில் சுமார் 300
பேர் அடங்கிய கும்பல் ஒன்று பள்ளிவாசல்
ஒன்றைத் தாக்கியதோடு முஸ்லிம்கள் நடத்தும்
கடைகளையும் முஸ்லிம்களின் வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள்
வந்துள்ளன. மெய்க்டிலா நகருக்குள் கூடுதலான
பாதுகாப்புப் படையினர் வந்து சேர்ந்துள்ள
நேரத்தில் இந்த வன்சம்பவங்கள் நடக்கின்றன
என்பது குறிப்பிடத்தக்கது. மெய்க்டிலாவில் கடந்த புதன்கிழமை முதல்
நடந்துவருகின்ற மதக் கலவரங்களில்
இதுவரை குறைந்தது முப்பது பேர்
கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஊரில் நகைக்கடை ஒன்றில் பௌத்த
மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
ஆரம்பித்த ஒரு வாக்குவாதமும் தகராறும்
இத்தனை வன்முறைக்குமான தீப்பொறியாக
அமைந்துள்ளது. ஓ த கோன் நகரம் மட்டுமல்லாது,
மெய்க்டிலாவுக்கு 80 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ள டட்கோன் என்ற ஊரிலும் சென்ற வாரக்
கடைசியில் பள்ளிவாசல்
ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அருகிலுள்ள யமெந்தின் என்ற ஊரிலும்
பள்ளிவாசல் ஒன்றும் சுமார் ஐம்பது வீடுகளும்
தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன. இந்த வன்முறைகளின் பின்னணியில் யார்
இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்
தெரியவில்லை. ஓ த கோன், டட்கோன், யமெந்தின்
ஆகிய ஊர்களில் ஆட்கள் யாரும்
பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் இந்த வன்முறைகளுக்குக்
காரணமானவர்களாக குற்றம்சாட்டப்படும் ஆட்கள்
பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும்
கைதானவர்களில்
பௌத்தர்களே பெரும்பான்மையானவர்கள் என்றும்
பர்மீய அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார். இந்த வன்முறைகளின் விளைவாக
குறைந்தது ஒன்பதாயிரம் பேர்
தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற
நேர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மதக் கலவரங்கள் தொடர்பில் நாட்டின்
அதிபர் தென் சென்னும் எதிர்க்கட்சித்
தலைவி ஆங் சான் சூ சீயும் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில், மெய்க்டிலாவில்
சட்ட ஒழுங்கு திரும்ப வேண்டும் என்றும்,
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பும்
சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இப்படியான மதக் கலவரங்கள்
வராமல் தடுக்கும் வழிவகைகள்
பற்றி கருத்தரங்குகளும்
பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட வேண்டும்
என்றும் இத்தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட
மக்களை ஐநா தலைமைச் செயலரின்
பர்மா தொடர்பான சிறப்பு ஆலோகசகரான விஜய்
நம்பியார்
நேற்று ஞாயிறன்று சென்று சந்தித்திருந்தார். வன்முறை நிறுத்தப்பட வேண்டும் சட்டம்
மதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக
நல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்றும்
பர்மாவின் பௌத்த மற்றும் முஸ்லிம் மத
தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பர்மாவின் ரக்கீன் மாகாணத்தில் சென்ற வருடம்
ரோஹிஞ்சா இன முஸ்லிம்களுக்கு எதிராக
நடந்த வகுப்புவாத வன்முறையில் சுமார்
இருநூறு பேர் கொல்லப்பட்ட்டும்,
பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்
இருந்தனர். அந்த சம்பவங்களுக்குப் பின்னர் பர்மாவில்
பௌத்தர்கள் முஸ்லிம்கள் இடையில் உறவுகள்
மோசமடைந்து வந்திருந்தன.
Source:www.bbc.co.uk/tamil/global/2013/03/130325_burmaviolencespreads.shtml
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment