இஸ்ரேல் – காசா எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் எத்தனை மனிதாபிமானமற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள்? என்பதை தெளிவுப்படுத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (28-ம் திகதி) நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக அடக்குமுறை தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களில் ஒருவர், சுமார் 12 வயது மதிக்கத்தக்க பாலஸ்தீனச் சிறுவனை கைது செய்வதற்காக மலைப்பகுதியில் விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.
இடது கை உடைபட்டு கட்டுடன் கழுத்தில் தொங்கிய நிலையில் ஓடும் அந்த சிறுவனை முகமூடி அணிந்திருக்கும் அந்த ராணுவ வீரர் ஒரு இடத்தில் மடக்கிப் பிடிக்கிறார்.
அவரிடம் இருந்து திமிறியப்படி தப்பிச்செல்ல முயற்சிக்கும் சிறுவனின் கழுத்தை தனது இரு முழங்கைகளால் நசுக்கி அவனை மூச்சுத்திணற வைக்க அவர் முயல்வதைக் கண்டு சிறுவனின் தாயும், சகோதரியும், உறவினர்களும் பதறியபடி ஓடி வருகின்றனர்.
அவன் சின்னப் பையன். ஒருகை வேறு உடைந்திருக்கிறது, அவனை விட்டு விடுங்கள் என அவர்கள் கதறுவதை பொருட்படுத்தாத அந்த ராணுவ வீரர், சிறுவனிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை கண்ட அவனது 15 வயது சகோதரி அவரது கையைப் பிடித்து கடித்து விடுகிறார்.
பின்னர், அவரை சுற்றிவளைக்கும் சில பெண்கள் சிறுவனை அவரிடம் இருந்து பலவந்தமாக மீட்கின்றனர். தனது முயற்சி பலிக்காததை நினைத்து திகைத்துப்போய் நிற்கும் அவரை காப்பாற்ற துப்பாக்கியுடன் அங்கு விரைந்துவந்த சக வீரர் ஒருவர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்.
போகிறபோக்கில், வெறுப்புடன் ஒரு கையெறி குண்டை அவர் வீசிவிட்டுச் செல்லும் இந்தக் காட்சியை உள்ளூர் மனித உரிமை ஆர்வலரும், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினருமான பிலால் தமிமி என்பவர் வீடியோவாக பதிவு செய்து பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
பிரபல செய்தி நிறுவனமான ‘ரியூட்டர்ஸ்’ மூலம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை இரண்டே நாட்களில் சுமார் 50 ஆயிரம் மக்கள் பார்த்துள்ளனர். பேஸ்புக் மூலம் பகிரப்பட்ட இந்த மனித உரிமை மீறல் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
அந்த வீடியோ பதிவு, உங்கள் பார்வைக்கும்…
தமிழில் அத தெரன