கோலாலம்பூர், மார்ச்.25-
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்
புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில்
திடீரென்று மாயமானது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக
விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.
தெற்கு சீனா கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது, அந்த
விமானத்துடனான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26
நாடுகளின் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தீவிரமாக
ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து
வந்தது. இந்த நிலையில்,
ஆஸ்திரேலியா அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள்
மிதப்பதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு போர்க்கப்பல்கள் விரைந்தன.
இதற்கிடையில், இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும்
விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், 17
நாட்களுக்கு பிறகு அந்த விமானம்
குறித்து நேற்று உறுதியான தகவல் கிடைத்தது.
அதன்படி, இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில்
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500
கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள்
நொறுங்கி விழுந்து மூழ்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகார
பூர்வமாக அறிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின்
சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ஆழ்ந்த துயரத்துடன் இந்த
தகவலை அறிவிப்பதாக குறிப்பிட்டார். "இன்மர்சாட் என்ற
இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த தகவலின்படி கடைசியாக அந்த
விமானம் தெற்கு இந்திய
பெருங்கடலின் மத்திய பகுதிக்கு மேல் பறந்தபோது கடலுக்குள்
விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக" அவர்
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன்
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகாயத்தில்
பறந்த அந்த விமானம் அதன் பிறகு கடலில்
விழுந்து மூழ்கி உள்ளது. விமானங்கள் இறங்கும் வசதி உள்ள
இடங்களுக்கு வெகு தொலைவான இடத்தில் விமானம்
விழுந்து இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்த அவர்,
விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரின் மன உணர்வுகளை மதித்து
நடந்து கொள்ளும்படி செய்தியாளர்களிடம்
வேண்டுகோள் விடுத்தார். கடந்த சில வாரங்களாக மனம் உடைந்த
நிலையில் உள்ள அவர்களுக்கு இந்த தகவல் மேலும் மோசமானதாக
அமையும் என்றும் ரசாக் குறிப்பிட்டார்.
மிகவும் சோகமாக காணப்பட்ட பிரதமர் ரசாக்,
செவ்வாய்க்கிழமை (இன்று) மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறி, தனது
பேட்டியை முடித்துக்கொண்டார். இதனால், இன்றைய
பேட்டியின்போது அவர் மேலும் சில விவரங்களை வெளியிடலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலுக்குள் விழுந்த அந்த விமானத்தில்
இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்)
வந்து கொண்டு இருப்பதால் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு
வருவதாக, இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம்
ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அது குறித்து அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எந்த நேரங்களில், எத்தனை தகவல்கள் அதுபோல் வந்தன
என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர். அனைத்து விவரங்களையும்
உலகம் முழுவதிலும் உள்ள புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கி இருப்பதாகவும், அதன்
அடிப்படையில் விமானம் விழுந்த இடத்தை கண்டறியும்
பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய பிரதமர் ரசாக் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, விமான
நிறுவனம் சார்பில் அதில் பயணம் செய்த அனைவருடைய
குடும்பத்தினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், "விமானத்தில்
இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைக்கும்
வாய்ப்பு இல்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிய
வந்திருப்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதாக"
குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் அறிய வந்ததும்
பீஜிங்கை சேர்ந்த பல பயணிகளின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மலேசிய விமானம் மாயமான நாளில் இருந்து அந்த விமானம் என்ன ஆனது?
தீவிரவாதிகள் அதை கடத்தி இருக்கலாமா? என்பது உள்ளிட்ட
பல்வேறு கோணங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. அவற்றில்
எதையுமே உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.
தற்போது இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த
தகவலின்படி மாயமான விமானம் குறித்த மர்மம் விலகி உள்ளது.
ஆனால், எதனால்-எப்படி அந்த விமானத்துக்கு இந்த கதி ஏற்பட்டது? என்பது
இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
விமானத்தில் பயணித்தவர்கள்
சீனர்கள் 153
மலேசியர்கள் 38
இந்தோனேசியர்கள் 7
அவுஸ்திரேலியா 6
இந்தியர்கள் 5
பிரான்ஸ் 4
அமெரிக்கா 3
நியுஸிலாந்து, உக்ரேன், கனடா, தலா 2
ரஷ்யா, தாய்வான், இத்தாலி, நெதர்லாந்து ,ஆஸ்திரியா தலா 1
பணியாளர்கள் 12
Thanks:மாலைமலர
No comments:
Post a Comment