மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம்
காணாமல் போன விவகாரத்தில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. காணாமல் போன
விமானத்தை, கடலில் தேடும் பணிகள் ஒரு புறம்
தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட
விமானத்தின் பயண திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்களும், அதில் பயணம்
செய்த பயணிகளின் பின்னணியும் தீவிரமாக
ஆராயப்பட்டு வருகிறது. விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில் கடற்பரப்பில்
பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமானதால், விமானம்
விபத்தில் சிக்கியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த
விமானத்தில் 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாக வந்த
தகவலை அடுத்து அது கடத்தப்பட்டிருக்கலாம்
என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த தகவலை மலேசிய ராணுவ அமைச்சரும்,
போக்குவரத்துதுறை (பொறுப்பு) அமைச்சருமான சாமுதீன் உசேன்
தெரிவித்தார். அதாவது, விமான பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த
ஆஸ்திரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் கோசல், இத்தாலியர்
லுய்கி மரால்டி ஆகிய இருவரும் விமானத்தில் பயணம்
செய்யவில்லை என்பதை அந்த நாடுகளின்
வெளியுறவுத்துறை அலுவலகங்கள் உறுதி செய்துள்ளன. தாய்லாந்தில் அவர்களது
பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாகவும்
அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களது பாஸ்போர்ட்டில் பயணம்
செய்த 2 பேர் யார், யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள்
இருவருக்கும் டிக்கெட் ஒன்றாக வாங்கப்பட்டுள்ளது மேலும்
சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விமானம், ரேடார் திரையில்
இருந்து மறைவதற்கு முன்பு, பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட
பாதையிலிருந்து விலகி சிறிது தூரம் பறந்து, மீண்டும்
புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகளும் ரேடாரில்
பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன
என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. தெரிவிப்புகளும், மறுப்புகளும்
காணாமல் போன விமானத்தில் உதிரி பாகங்கள் வியட்நாம் அருகில்
கண்டுபிடிக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளி வந்தன. ஆனால்,
வியட்நாம் அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. விமான
கதவு ஒன்று கடற்பரப்பில் மிதப்பதாக வந்த தகவலும்
தவறானது என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் காணாமல் போன
விமானத்தின் நிலை என்ன
ஆனது என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவல்களும்
கிடைக்கப் பெறவில்லை. இதனால், அந்த விமானத்தில் பயணம்
செய்தவர்களின் உறவினர்கள், ஏதேனும் நல்ல
செய்தி கிடைக்குமா என்ற நம்பிக்கையோடும், ஒரு புறம் கலங்கிய
மனநிலையோடும் விமான நிலைய வளாகத்தில் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே
விமானத்தில்
சென்ற ஒருவரின் உறவினர், விமானத்தில் பயணம் செய்த தன்னுடைய
உறவினருக்கு போன் செய்தபோது அந்த போன் ரிங் ஆனதாகவும் ஆனால்
யாரும் அந்த போன்காலை எடுத்து பேசவில்லை என்றும்
கூறியுள்ளார். இந்த தகவலை அவர் போலீஸாரிடம் கூறியிருப்பதால் விமானம்
கடத்தப்பட்டு பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பார்களோ என்ற
சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் சென்ற ஒருவருடைய போன்
ரிங் ஆவதாக சீன
தொலைக்காட்சியில் செய்திகள் பரவியதும் மற்ற உறவினர்களும்,
விமானத்தில் பயணம் செய்த தங்கள் உறவினர்களுக்கு போன்
செய்து பார்த்தனர். ஆனால் வேறு எவருடைய மொபைல் போனும் ரிங்
ஆகவில்லை. வியட்நாம் கடலில் விழுந்து இந்தவிமானம் மூழ்கியிருக்கலாம்
என்று நினைத்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக அதில் பயணம்
செய்த மொபைல்போன் ரிங் ஆவது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment