தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 October 2011

கடாபி கொல்லப்பட்டார்


லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கர்னல் முவம்மர் கடாபி தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல வார காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.
நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக்கோரிவருகிறது.
கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த ராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு முன் “என்னை சுடாதே” என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
கொண்டாடும் கடாபி எதிர்ப்பு படைகள்
கொண்டாடும் கடாபி எதிர்ப்பு படைகள்
முவம்மர் கடாபி, 1969 ஆம் ஆண்டு ரத்தமில்லா ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியைப் பிடித்தபோது அவர் லிபியாவின் மீட்பராக பார்க்கப்பட்டார். 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாபி, சக ராணுவத்தினரால் சகோதரத் தலைவர் என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நல்லபெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்தபுதிதில் தன்னை மக்கள் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.
1942 ஆம் ஆண்டு பிறந்த கடாபியின் சரியான பிறந்த நாள் எது என்பது முறையாக பதிவு செய்யப்படவில்லை. Bedouin பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் பெருமைப்பட்டார். உதாரணமாக தனது விருந்தாளிகளை நாடோடி கொட்டகையில் வரவேற்பது முதல், தனது வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது சாமானிய பின்புலத்தை அவர் மறக்காமல் காட்சிப்பொருளாக்குவார்.
ஆனால் அவரது ஆட்சியில் நாட்டில் அரசியல் கட்சிகள் எதையும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையற்ற அவரது தலைமையிலான ஆட்சியில் எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்கள் ஒன்று சிறை சென்றார்கள். இல்லாவிட்டால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.
ஆட்சியில் இருந்த கடாபி
ஆட்சியில் இருந்த கடாபி
ஆரம்பம் முதலே அவர் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தார். மத்திய கிழக்கு பிரதேசத்திலும், உலக அரங்கிலும் அவருக்கு ஆதரவிருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.
அவருக்கும் மேற்குலகுக்குமான மோதல் எண்பதுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. வெளிநாடுகளில் செயற்பட்டுவந்த ஆயுத குழுக்கள் பலவற்றை அவர் ஆதரித்தார். பாலத்தீன விடுதலை குழுக்களிலிருந்து, அயர்லாந்து ஆயுத குழுக்கள் வரை இவரது ஆதரவு பட்டியலில் இடம்பிடித்தன. இதனால் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று மேற்குலக நாடுகள் அவரை பல தசாப்தங்களாக திட்டிவந்திருக்கின்றன.
லண்டனில் இருக்கும் லிபிய தூதரகத்திற்கு வெளியே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியாவுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.
நான்காண்டுகள் கழித்து, ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரத்தின் மேல் வான்பரப்பில் அமெரிக்க ஜம்போ விமானம் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சர்வதேச அரங்கில் கர்னல் கடாபி தீண்டத்தகாதவராக மாறினார்.
கடாபி பதுங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழி
கடாபி பதுங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழி
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்கியத்தைத் தொடர்ந்தும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தும் அவர் சர்வதேச நாடுகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக அங்கீகரிக்கப்பட்டார். மேற்குலக நாடுகளுடனான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் இத்தகைய சாதகமான மாற்றங்களை அவர் தனது உள்நாட்டு அரசியலில் முன்னெடுக்கவில்லை. விளைவு, வட ஆப்ரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும் வலுப்பெற்ற சீர்திருத்த கோரிக்கைகளின் தாக்கம் லிபியாவில் வலுவடைந்தபோது கடாபியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. தனது ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்ற கடாபி, கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த ஊரான சித்ரில் சென்று தஞ்சம் புகுந்தார். இறுதியில் அங்கேயே கொல்லப்பட்டார்.
நன்றி BBC தமிழோசை

20.10.2011

No comments:

Post a Comment