உணவில் உப்பின் அளவை பதினைந்து சதவீதம் குறைத்தால் உலக அளவில் அடுத்த பத்து ஆண்டுகளில் எண்பது லட்சம் பேர் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம், அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக்கொள்வதுதான் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
நன்றி BBC தமிழோசை.உலக சுகாதார நடவடிக்கைகள் முன்னுரிமை தரும் விஷயமாக உப்புக் குறைப்பை ஐ.நா. மன்றம் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பின் அளவை கண்காணித்து ஒழுங்குசெய்வதற்கு செயல்திறன் மிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில்ஏற்கனவே கலந்துள்ள உப்புதான் நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமாவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே ஒருவர் தானாக முன்வந்து உப்பை குறைப்பது என்பது அவ்வளவாகப் பலன் அளிக்காது, தாம் உருவாக்கும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லி உற்பத்தி நிறுவனங்களை வற்புறுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
பிரிட்டனில் உள்ள வாரிக் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் இணைந்து இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதிக உப்பு இருந்தால்தான் உணவு சுவையாக இருப்பதாக நாம் உணர ஆரம்பித்துவிடுவோம். அது நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரித்துக்கொண்டேபோக வழிவகுத்துவிடும் என இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்ஸிஸ்கோ கப்பூசியோ கூறுகிறார்.
உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும், இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றின் காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது.
No comments:
Post a Comment