பல காலம் தொடர்ந்து இருக்கும் உடல் பருமனால் ஏற்படக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் முன்பு எண்ணப்பட்டதை விட மோசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் எடையுடன் ஒருவர் எவ்வளவு காலம் இருக்கிறாறோ அவ்வளவுக்களவு அவரின் ஆயுட்காலம் குறையும் என்றும் - பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபயாம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல் ஒருவரின் ஆயுட்காலத்தில் கூடுதல் பருமனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, முதல் முறையாக இதில் ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும். அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சென்னையின் நிலைமை
மேற்கத்திய நாடுகளில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகவே உடல் பருமன் என்பது ஒரு உடல் ஆரோக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது.
ஆனால் உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், அதிக அளவு நொறுக்குத் தீனி உண்பது போன்றவற்றால் வளரும் நாடுகளிலும் உடல் பருமன் பிரச்சனை தற்போது அதிகமாகிறது.
சமீபத்தில் சென்னை நகரில் சி பி எஸ் ஈ பள்ளிக் கூட மாணவர்களிடம் நடத்திய ஆய்வின் போது, மாணவர்களில் நான்கில் ஒருவர் கூடுதல் எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் போதிய அளவுக்கு வெளிக்கள விளையாட்டுகளில் பங்கேற்காமையும் நொறுக்குத் தீனி அதிகம் உண்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்று தமிழகத்தில் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை எம் வி நீரிழிவு நோய் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சத்யவாணி தமிழோசையிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment