தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

15 December 2019

காய்ச்சலுக்கு அன்டிபயாடிக் ஒரு மருந்தாகுமா?


J





“டாக்டர் எனது மகனுக்கு இரண்டு நாட்களாக சரியான காய்ச்சல். பனடோல் கொடுத்தும் குறையவில்லை. என்ன அன்டிபயாட்டிக் கொடுக்கலாம்?” இது பொதுவாக பெற்றோர்களினால் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.
இன்று அபரிமிதமான அன்டிபயாடிக் பாவனையால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற
து. எனவே அதைப் பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்.
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். அதிலும் தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே வீட்டில் இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.
ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம் .

ஆனாலும் வெறுமனவே தலை சூடாக உள்ளது என்பது காய்ச்சலுக்குரிய அறிகுறி அல்ல. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது வெப்பமானி கொண்டு அதை உறுதிப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
பெரும்பாலான வேளைகளில் ஒரு நுண்ணங்கி தொற்றே காய்ச்சலுக்கு காரணமாகும். அதிலும் வைரஸால் ஏற்படும் காய்ச்சலே மிக அதிகம். சிலவேளைகளில் பாக்டீரியாக்களும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
வைரஸ்சால் காய்ச்சல் ஏற்படும் பொழுது அது இலேசான காய்ச்சலாகவும் காய்ச்சலுக்கு இடையில் குழந்தை நன்றாகவும் இருக்கும். ஆனால் டெங்கு வைரஸால் ஏற்படும் காய்ச்சலின்போது காய்ச்சல் சற்று அதிகமாக இருப்பது சாதாரணமானதானதாகும்.
உடலின் வெப்பநிலை அதிகரிப்பது நுண்ணங்கி தொற்றுக்கு உடலால் செயற்படுத்தப்படும் ஒரு பிரதிபலிப்பு என்பதால், காய்ச்சல் ஏற்படும் போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியாத ஒரு விடயம்.
1. குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது பெற்றோர்களால் செய்யப்பட வேண்டியவை.
குழந்தையின் உடல் வெப்பநிலையை கவனமாக அளந்து குறித்து வைக்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கு நிறைக்கேற்ற அளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும்.
3. காய்ச்சல் அதிகரிக்குமானால் இளம் சூடான துணியினால் குழந்தையின் நெற்றி மற்றும் முகத்தை துடைத்து விடலாம்.
தண்ணீரில் அவர்களை குளிப்பாட்டுவதன் மூலம் காய்ச்சலை குறைக்க முடியாது.
4. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் ஏற்படும் மற்ற அறிகுறிகளை கவனமாக அவதானிக்க வேண்டும்.
5. மூன்று மாதத்திற்கு குறைந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
6. காய்ச்சலுடன் குழந்தைக்கு பசி வருவது குறைவடைவதனால் அவர்கள் பொதுவாக உணவு உண்ண மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு நீராகாரங்களை சிறிதளவேனும் அடிக்கடி கொடுக்க வேண்டும்.
7. அவர்களுக்கு போதுமான அளவு உடை அணிவித்து அதிகளவு குளிராகவோ அல்லது சூடாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் அன்டிபயாடிக் கொடுக்க வேண்டுமா?
அன்டிபயாடிக் எனப்படும் மருந்து வகையானது பாக்டீரியாக்களின் தொழிற்பாட்டுக்கும், பெருக்கத்துக்கும் எதிராக தொழிற்படும் ஒரு மருந்தாகும். எனவே பாக்டீரியாக்களால் ஏற்படுத்தப்படும் நோய்களுக்கு அன்டிபயாடிக் இன்றியமையாதது.
ஆனாலும் பெரும்பாலான காய்ச்சல் வைரஸ்சினால் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்கு அன்டிபயாடிக் தேவையில்லை.ஏனென்றால் அன்டிபயாட்டிக்களால் வைரஸ்சுக்கு எதிராக தொழிற்பட முடியாது.
வைரஸ் காய்ச்சலானது இரண்டு அல்லது மூன்று நாட்களில் முற்றாக சரியாகிவிடும்.
எனவே காய்ச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் அன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து பெற்றோர்களும் வைத்தியர்களும் விடுபடவேண்டும்!
அளவுக்கு அதிகமாக அன்டிபயாடிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்.
அன்ட்டிபயாட்டிக் ஒரு மருந்து என்றாலும் அதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். உங்களது குழந்தைக்கு தேவையேற்பட்டாத பொழுது அன்டிபயாடிக் பயன்படுத்துவதால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகம்.
பொதுவாக அன்டிபயாடிக் குழந்தையின் குடலிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களையும் அழிப்பதனால் அவர்களுக்கு வயிற்றோட்டம் மற்றும் அஜீரணதன்மை ஏற்படும்.
ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் ஏற்படும் வாந்தி மற்றும் வயிறு வீக்கம் என்பன ஏற்படும்.
உங்களுக்கு மேலதிக செலவை ஏற்படுத்தும்.
இதைவிட மிக முக்கியமாக, பாக்டீரியாக்கள் பாவனையில் உள்ள அன்டிபயாடிக்கு இசைவாக்கம் அடைந்து எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்தும். அதாவது குறிப்பிட்ட அந்த அன்டிபயாட்டிக்கை பாக்டீரியாவுக்க
ு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்படும்.
அது அந்தக் குழந்தைக்கு மட்டுமன்றி எமது முழு மனித குலத்திற்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால் எங்களிடம் குறிப்பிட்டளவு வகையான அன்டிபயாட்டிக் மட்டுமே பாவனையில் உள்ளது. புதிதாக ஒரு அன்டிபயாடிக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லலாம். எனவே எதிர்ப்புத்தன்மை கூடிய பக்டீரியாக்கள் சூழலில் பெருகும் பொழுது அது மனித குலத்திற்கு ஒருநாள் பேராபத்தை ஏற்படுத்தலாம்.
இதுவே இப்பொழுது எமக்குள்ள பெரிய சவால்.
எனவே எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ வைத்தியரினால் அன்டிபயாடிக் பரிந்துரை செய்யப்படும் பொழுது அதற்குரிய காரணத்தை நன்றாக கேட்டறிந்து கொள்ளுங்கள்.
எனவே அன்ட்டிபயாட்டிக் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் எமது சந்ததியின் இருப்பை உறுதிப்படுத்துவதாக!!
Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

No comments:

Post a Comment