பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீரியபெத்த பெருந்தோட்டத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் அந்தக் கிராமம் முற்று முழுதாக மண்ணில் புதையுண்டது. நேற்றுக் காலை 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் ஏழு லயன் குடியிருப்புக்களைக் கொண்ட 140 வீடுகள் நிலத்தினுள் புதைந்ததாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. அதேநேரம், புதையுண்டவர்களில் 10 சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்தது.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான மூவர் சிகிச்சைகளுக்காக பதுளை அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட சுமார் 250 இற்கும் அதிகமான மக்கள் அரசாங்க அதிகாரிகளினால் பொது இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லயன் குடியிருப்புக்களை மூடி சுமார் 10 அடி உயரம் வரை மண்மேடு காணப்பட்டதனால் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட பகீரத பிரயத்தனத்தினால் காலை சுமார் 11.45 மணியளவிலேயே முழுமையான மீட்புப் பணிகளில் களமிறங்க முடிந்தது. மீட்பு பணிகளில் நேற்றைய தினம் சுமார் 500 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக இராணுவப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர தெரிவித்தார்.
மனிதர்கள் நெருங்கமுடியாத பகுதிகளில் விமானப் படையினர் ஹெலிக்கொப் டர்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். “எவ்வித முன்னறிகுறியுமின்றி ஒரே நொடியில் மண்மேடு சரிந்து விழுந்ததனால் எமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தப்பி ஓடக்கூட காலஅவகாசம் எமக்கு இருக்கவில்லை” என அனர்த்தத்திலிருந்து தப்பி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் கூறினார். இதேவேளை “காலை 7 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதால் பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளிகளும் மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை” என அப்பிரதேசத்திலிருந்து உயிர்தப்பிய மற்றொருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மூன்று தினங்களாக அங்கு அடைமழைபெய்து வந்த போதிலும் நேற்றைய தினம் மழை கூடுதலாகப் பெய்யவில்லையென பிரதேசவாசியொருவர் கூறினார். ஹல்துமுல்லையில் நேற்றுக் காலை இடம்பெற்ற பாரிய அனர்த்தத்தை கேள்வியுற்றதும் இயலுமானவரை மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உயிர்களை காப்பாற்றுமாறும் உயிர் தப்பியோருக்கு தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment