களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ‘மில்பர் கபூர் மன்றம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பலவிதமான தேவைகளுக்கும், குறைபாடுகளுக்கும் நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை நீடித்து வருகின்றது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு தான் இம்மன்றத்தை ஸ்தாபித்து இருப்பதாக அதன் ஸ்தாபகரும், தலைவரும், பேருவளை நகர சபைத் தலைவருமான மில்பர் கபூர் இன்று ( 10 ஆம் திகதி ) தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இம்மாவட்ட முஸ்லிம்களைத் தேசிய மட்டத்தில் முன்னணியில் பிரகாசிக்கக் கூடியவர்களாகக் கட்டியெழுப்புவதும், எவரிலும் தங்கியிராது சுயமாக முன்னேற்றமடைந்தவர்களாக அவர்களை மேம்படுத்துவதும் இம்மன்றத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் மேம்பாட்டைப் பிரதான நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மில்பர் கபூர் மன்றம் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு பெந்தொட்ட பீச் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது. களுத்துறை மாவட்டம் மிகவும் பெரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். இங்கு களுத்துறை, பேருவளை, மக்கோன, தர்காநகர், பாணந்துறை, அட்டுலுகம, வெலிப்பன்ன, வியங்கல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இம்மாவட்ட முஸ்லிம்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் பல குறைபாடுகளுக்கும் தேவைகளுக்கும் முகம் கொடுத்தவர்;களாக இருக்கின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படாத நிலமை நீண்ட காலமாக தொடர்கின்றது.
அவ்வெற்றிடத்தை நிரப்பி களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் மேம்படுத்துவதை பிரதான இலக்காகக் கொண்டு தான் இம்மன்றம் அமைக்கப்பட்டு இருக்கின்றது இதன் மூலம் எதுவித சுயலாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அமைப்பின் ஊடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் சகல மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தேவையான நிதி உள்ளிட்ட உதவி ஒத்துழைப்புக்கள் சமூக நலன்விரும்பிகள், தனவந்தர்கள், கொடைவள்ளல்கள் போன்றோர் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
இந்த வகையில் எமது மன்றத்தின் முதலாவது வேலைத்திட்டமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள சகல கால்பந்து விளையாட்டுக் கழகங்களையும் அழைத்து, அச்சங்கங்களின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினோம். இக்கலந்துரையாடலில் இம்மாவட்டத்திலுள்ள 32 கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. இவ்வளவு தொகைக் கால்பந்து விளையாட்டுச் சங்கங்கள் வேறு மாவட்டங்களில் இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் எமது மாவட்ட விளையாட்டுக் கழகங்களை அபிவிருத்தி செய்வதை முக்கிய பணிகளில் ஒன்றாக நாம் கருதுகின்றோம்.
இக்கலந்துரையாடலின் போது அக்கழகங்களின் பிரதிநிதிகள் தமது தேவைகளையும், குறைபாடுகளையும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் முன்னணியில் திகழும் ‘சுப்பர் சன் கால் பந்து விளையாட்டுக் கழகத்தை’ மேம்படுத்துவதற்காக 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கினேன். அத்தோடு இக்கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கு ஜேஸிகள், பந்து உள்ளிட்ட ஏனைய அடிப்படை உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் இவ்விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு வீரர்களது ஆரோக்கியம் குறித்து விளையாட்டுத் துறை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வந்து விசேட மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கும் நாம் தீர்மானித்திருக்கிறோம். அத்தோடு மாவட்டத்தில் உள்ள சிறிய விளையாட்டு மைதானங்களை எமது மன்றத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.
இதேவேளை இம்மாவட்டத்திலுள்ள 32 விளையாட்டுக் கழகங்களையும் உள்ளடக்கி இவ்வருட முடிவுக்குள் மாபெரும் சமாதான கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றையும் இம்மாவட்டத்தில் நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளோம். இதில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும். அதேநேரம் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள, ஆனால் எதுவித தொழில் வாய்ப்பும் அற்ற விளையாட்டு வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பகுதி நேர தொழில் வாய்ப்புக்களையாவது பெற்றுக் கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம்.
இவ்வாறு இம்மாவட்ட விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்ற நாம் விளையாட்டு வீரர்களில் இருந்தும் சில சேவைகளை எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக இரத்ததான முகாம்களை நடாத்துதல், அனர்த்தங்களின் போது அவசர உதவிகளுக்கான ஒத்துழைப்புக்களை நல்குதல் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக நாம் அளிக்கின்ற உதவி ஒத்துழைப்புக்கள் மூலம் தேசிய மட்டத்தில் எமது வீரர்களை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ள இளம் யுவதிகளுக்கு முன்பள்ளி கற்கை நெறியை எமது மன்றத்தின் அனுசரணையோடு நடாத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு சமையல் கலை, தையல் பயிற்சி, சிறுவர் உளவள மேம்பாடு ஆகிய துறைகளிலும் பயிற்சிகளை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதேநேரம் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும் தேவைகளையும் இனம் காண்பதையும,; வறிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்விக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதையும் நோக்காகக் கொண்டு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை எமது மன்றம் அடுத்த இரு வாரங்களுக்குள் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அக்கலந்துரையாடலின் அடிப்படையில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்படும்.
அதேநேரம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. சாதாரண தர / உயர் தர பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கென முன்னணி ஆசிரியர்களைக் கொண்டு விசேட கருத்தரங்குகளை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம். இம்மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கான சகல நடவடிக்கைகளும் பாடசாலை அதிபர்கள் வழங்கும் யோசனைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.
மேலும் இம்மாவட்ட மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவசக் கிளினிக்குகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், நடமாடும் மருத்துவ முகாம்கள் என்பன நடாத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் இம்முகாம்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். நாம் முன்னெடுக்கும் இந்த அனைத்துச் சேவைகள் மூலமும் எமது மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றோம்.
இது ஒரு பாரிய வேலைத்திட்டம். எமது சமூகத்தின் மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் அடிப்படை இலக்காகக் கொண்டு தான் நாம் இதனை முன்னெடுக்கின்றோம். எம்மால் மாத்திரம் இப்பணியில் முழுமையான வெற்றியை அடைய முடியாது. ஆகவே இவ்வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பலாபலன்களைப் அடைந்து கொள்வதற்காக எம் சமூக மேம்பாட்டில் ஆர்வமும் அக்கரையும் கொண்ட சகலரையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். எமது இவ்வேலைத்திட்டத்திற்குக் கால எல்லை குறிக்கப்பட்டிருக்கிறது. இக்கால எல்லைக்குள் எமது வேலைத்திட்டங்களின் பிரதிபலனாக சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுமாயின், இவ்வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்தோடு ஏனைய மாவட்டங்களுக்கும் எமது மன்றத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Thanks: sonakar .com
No comments:
Post a Comment