உறவினர் பார்வைக்கு வைக்கப்பட்ட பொருட்கள்
இலங்கையின் வடமேற்கே இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 1998 ஆம்
ஆண்டு விடுதலைப்புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக்
கூறப்படுகின்ற லயன் எயார் விமானத்தின் சிதைவுகளில்
இருந்து மீட்கப்பட்டுள்ள தடயப் பொருட்களில் 12 வரையிலான
பொருட்கள் பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சட்ட
வைத்திய அதிகாரி டாக்டர் பிரசன்ன தசநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
இரணைதீவு கடற்பரப்பில் வீழ்ந்திருந்த இந்த விமானத்தின்
சிதைவுகள் கடந்த வருடம் மே மாதம் பயங்கரவாதப்
புலனாய்வு பிரிவினரால், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன்
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகங்களில்
விமானத்தில்
பயணஞ்செய்தவர்களின் உடைமைகள், பெண் ஒருவரின் தேசிய அடையாள
அட்டை, செயற்கைப் பல் ஒன்று உட்பட பல பொருட்கள்
மீட்கப்பட்டிருந்தன. பொதுமக்களினால் அடையாளம் காணப்படுவதற்காக இந்தத் தடயப்
பொருட்கள் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவுக்கருகில்
இரண்டு தினங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றைப்
பார்வையிட்டவர்களில் சிலர் தமது உறவினர்கள் இந்த
விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறி, அவர்களுடைய உடைமைகள் என
தெரிவித்து சில பொருட்களை அடையாளம் காட்டியுள்ளதாக சட்ட
வைத்திய அதிகாரி பிரசன்ன தசாநாயக்க தெரிவித்தார். 'உறவினர்களின் உடைகள்
எனக் கூறி, சேலைகள் காற்சட்டைகள் போன்ற
உடைகளையும் பிரயாணப் பைகள் மற்றும் பொருட்களையும் சுமார்
பத்து பன்னிரண்டு பொதுமக்கள் அடையாளம்
காட்டியிருக்கின்றார்கள். இந்தப் பொருட்களின் சரியான அடையாளம்
குறித்து விசாரணைகள் நடத்தப்படவேண்டியிருக்கின்றது.
நீதிமன்றத்தின் பொறுப்பில் சட்டமா அதிபர் மற்றும் இந்த விமானம் தொடர்பாக
விசாரணைகள நடத்தி வருகின்ற பயங்கரவாதப்
புலனாய்வு பிரிவினரே இதுபற்றிய முடிவெடுக்க வேண்டும்.
அடையாளம் காணப்பட்ட பொருட்கள், அடையாளம் காட்டியவர்களின்
சாட்சியங்களுடன் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்' என்றார்
இந்த லயன் எயார் விமானம் தொடர்பாக
பகுப்பாய்வு விசாரணைகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி டாக்டர்
பிரசன்ன தசாநாயக்க. பலாலி விமானத்தளத்தில் இருந்து கொழும்பு இரத்மலானை
விமான
நிலையத்தை நோக்கி கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம்
திகதி 48 பயணிகளுடன் புறப்பட்ட இந்த அன்ரனோவ் ரக லயன்ஸ் எயார்
விமானம் பத்து நிமிட நேரத்தில் விமானத் தளத்தின்
கண்காணிப்பு திரையில் இருந்து மறைந்துபோனது. இந்த விமானத்தில் உக்ரேன்
நாட்டவர்கள் உள்ளிட்ட 7 விமானப்
பணியாளர்களும் இருந்தனர். இந்த
விமானத்தை விடுதலைப்புலிகளே வன்னிப்பிரதேச வான்பரப்பில்
வைத்து சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பதினைந்து
வருடங்களின் பின்னர், பயங்கரவாதப்
புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம், இந்த விமானம்
இரணைதீவு கடற்பரப்பில் வீழ்ந்திருந்ததாகக் கண்டறியப்பட்டு,
இரண்டு தினங்கள் விமானத்தின் பாகங்கள் மற்றும் தடயங்களை மீட்கும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறு மீட்கப்பட்ட தடயப்
பொருட்களே சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின்
பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
Thanks:BBC
No comments:
Post a Comment