தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 December 2013

பள்ளிவாசல்களை மிரட்டும் அசரீரி

விடிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒலிக்கின்ற
‘அதான்’ (பாங்கு) ஒலியைக் கேட்டு நேரகாலத்துடன் கண்விழித்து,
தமது கடமைகளை அதிகாலை வேளையிலேயே ஆரம்பித்ததாக சிங்கள
தலைவர்கள் கூட பெருமையுடன் கூறிய காலமொன்று இருந்தது.
இன்று… பள்ளிகளில் ‘பாங்கு’ சொல்வதற்கும் தொழுவதற்கும்
தடைபோடுமளவுக்கு நாகரிகம் பின்னோக்கி கூர்ப்படைந்திருக்கின்றது. இனவாதம் நமது தேசத்தின் வெட்கக்கேடாக
வளர்ந்து கொண்டிருக்கின்றது அல்லது வளர்த்து
விடப்பட்டிருக்கின்றது.
வரலாற்றை மீள் வாசிப்புச் செய்கின்ற போது, இனவாதிகளும்
அவர்களது மத சகிப்புத்தன்மையில்லா மனநிலையும்
சிறுபான்மை இனங்கள் மீதான கட்டுங்கடங்கா காழ்ப்புணர்வும் இன்னும்
கூர்ப்படையாமல் ‘கரப்பான் பூச்சி’ போல
மாற்றமின்றி அப்படியேதான் இருந்து கொண்டிருக்கின்றன
என்பதை நம்பும் காலம் வெகுதொலைவில் இல்லை. தார்ப்பரியத்தை சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றலுள்ள சிங்கள
சகோதரர்கள் கூட முகம் சுழிக்கும்
அளவுக்கு சிறுபான்மை இனங்களின் - அதிலும் குறிப்பாக
முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதான சம்ஹாரமும்
இனவெறுப்பு பிரசாரமும் கொதிநிலைக்கு வந்திருக்கின்றது.
ஒரு சாக்கடையை மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்து செல்வது போல் அன்றேல் மாட்டுச்சாணம் காலில் படாமல் விலகிச் செல்வது போல்
இனவாதத்தை கடந்து செல்வதைத் தவிர
வேறு வழியில்லை என்பது போன்றதொரு மாயை நம்மையெல்லாம்
சூழ்ந்திருக்கின்றது. தொடர் நாடகங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடர்நாடகம் போல இனவாதத்தின் காட்சிகள்
தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன - முடிவின்றி.
இவ்வார காட்சி தெஹிவளை,
கொஹுவலை பள்ளிவாசல்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும்
கல்லெறிதல் பற்றியது. கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும்
கொஹூவலை பிரதேசங்களில் இருக்கும் மூன்று பள்ளிவாசல்கள்
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இப்
பள்ளிவாசல்களின் பரிபாலன சபையினர் பொய் சொல்லவில்லை என்றால்
இந்தச் செய்தி நம்பகரமானது. அதன்டிபடி, தெஹிவளை அத்திட்டிய
மஸ்ஜிதுல் ஹிபா, கொஹுவலை தாருல் ஷாபி தெஹிவளை தாருல் அர்கம் ஆகிய பள்ளிவாசல்களில் அல்லது தொழுகை நடத்துமிடங்களில்
இனிமேல் தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலிஸ் உடையணிந்தவர்கள்
வந்து கடுந்தொனியில் கட்டளையிட்டுச் சென்றிருக்கின்றனர். இப் பள்ளிவாசல்களை பௌத்த சாசன அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்
அதுவரைக்கும்
தொழுகை நடத்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய கிட்டத்தட்ட தொழுகைகள் கைவிடப்பட்டிருந்த நிலையில்,
கொஹு வலை கடவத்தை வீதியில் அமைந்துள்ள தாருல்
ஷாபி பள்ளிவாசல் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபரின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் றிசாட்,
“பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக
உருவாக்கப்பட்ட வக்பு சபையே இலங்கையில்
பள்ளிவாசல்களை நிர்வகிக்கின்றது. எனவே அவற்றை புத்தசாசன அமைச்சில் பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம் கிடையாது. எனவே இவ்வாறான
நடவடிக்கைகளை எடுப்பதானது முஸ்லிம்களிடையே மீண்டும்
ஒருவித அச்சத்தையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது தடுக்க வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதிக்கான
அமைச்சருமான ஹக்கீம் இது குறித்து ஜனாதிபதியின்
நேரடி கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார். ஹக்கீம்
இது பற்றி தன்னிடம் எடுத்துக்கூறும் வரை தனக்கு இச்சம்பவம்
தொடர்பில் எதுவுமே தெரியாது எனவும், புறநகர்ப்பகுதியில்
குர்ஆன் மத்ரசா ஒன்றில் தொழுகை நடத்துவது பற்றிய முறைப்பாடு கிடைத்தது குறித்தே தான்
கேள்விப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இது விடயமாக கவனம் செலுத்துவதாக
அமைச்சருக்கு அவர் உறுதியளித்திருக்கின்றார். இதற்கிடையில், வழமைபோல ஆச்சரியம்
ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. அதாவது – மேற்குறிப்பிட்ட
பள்ளிவாசல்களில் ‘தொழுகை நடத்த வேண்டாம்’ என பொலிஸார்
எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை என்றும் அவ்வாறான
அதிகாரம் எதுவும் பொலிஸாருக்கு கிடையாது எனவும் பொலிஸ்
பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அடித்துக் கூறியுள்ளார்.
சீருடையில் வந்தோர்

இந்தச் சம்பவங்களை கோர்வையாக நோக்க வேண்டியிருக்கின்றது.
பள்ளிவாசலுக்கு சீருடைதாரிகள் வந்ததாக நிர்வாகம்
முறையிட்டுள்ளது, கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு எத்தி வைத்திருக்கின்றனர்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று பாதுகாப்பு தரப்பு
கூறுகின்றது. இப்படித்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பல
நடவடிக்கைகளுக்கு யாரும்
உரிமை கோருவதில்லை அல்லது அப்படி எதுவுமே நடக்கவில்லை
என்றும் கூறப்படுவதுமுண்டு. கடைசியில் அப்படி ஒன்றும்
நடக்கவில்லை, எல்லாம் அசரீரி அல்லது மாயத் தோற்றம்
என்று கழிவிரக்கம் கொள்வதைத் தவிர அம்மக்களுக்கு வேறுவழி இருப்பதில்லை. முஸ்லிம்களுக்கு தொழுகை என்பது அவர்களின் மார்க்கத்தின்
அடிநாதமாக இருக்கின்றது.
நேரம்
தவறாது தொழுகையை நிறைவேற்றுமாறு அவர்களது மார்க்கம்
கட்டாயப்படுத்தியிருக்கின்றது. சனத்தொகைப் பரம்பலும்
மேற்குறிப்பிட்டது போன்ற சில காரணங்களுமே பள்ளிவாசல்கள் தோற்றம் பெறுவதை தவிர்க்கவியலாததாக ஆக்கியிருக்கின்றது. இதுதவிர, பள்ளிவாசல்கள் ஒருக்காலும் சிங்கள மக்களை மதம்
மாற்றுவதற்காகவோ தமிழ்
மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காகவோ
உருவாக்கப்படுவது கிடையாது. ஆனால் அப்படியான
ஒரு கருத்துநிலையை பேரினவாதிகளே கிளப்பி
விட்டிருக்கின்றார்கள். தமிழர்களுக்கு பாடம் புகட்டிவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்ற கடும்போக்குவாதம், முஸ்லிம்களையும்
ஒன்றுக்கும் இயலாதவர்களாக மாற்றிவிட
ஒரு மனக்கணக்கு போட்டிருக்கின்றது. அதன் தொடர்
விளைவுகளாகத்தான் - ஹலாலும் பர்தாவும் பள்ளிவாசல்களும்
காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தெஹிவளை பள்ளிவாசல்கள் அச்சுறுத்லுக்கு உள்ளாகியுள்ளதாகவும்
சீருடைதாரிகள் வந்து தொழ வேண்டாம் என்பது கூறியதாகவும்
பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறியது உண்மை என்றால், அப்படி ஒன்றும்
நடக்கவில்லை எனும் பொலிஸ் தரப்பின் மறுப்புரையில் லொஜிக்
பிழைக்கின்றது. மறுபுறத்தில் பொலிஸ் பேச்சாளர் மிகச் சரியான,
உண்மைக்குண்மையான அறிக்கையையே வெளியிட்டுள்ளார் என்றால், பள்ளிவாசல் நிர்வாகிகள் பொய் சொல்லியிருக்கின்றார்கள்
என்றே அர்த்தமாகும். அவ்வாறு இல்லை, இரண்டும் சரியே என்று இரண்டும் கெட்டான்
நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றால், சீருடையில் வந்தவர்கள்
யார்? என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும். உண்மையில்
அவ்வாறு வந்தவர்கள் பொலிஸ் காரர்கள்
என்பது கண்டுபிடிக்கப்பட்டால் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காக
தலைமையகத்திற்கு தெரியாமல் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதேபோல் அவர்கள் போலி பொலிஸ் உடையில் வந்த விசமிகள் என்றால்
அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து பகிரங்கப்படுத்த வேண்டும்.
இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள
இரு பொலிஸ் குழுக்களும் நிறைவேற்ற வேண்டுமென மக்கள்
எதிர்பார்க்கின்ற பணிகள் இவைதான்.

இலக்கின் ரிஷிமூலம்

கொழும்பின் புறநகர் பகுதிகளான வெல்லம்பிட்டிய, ராஜகிரிய,
தெஹிவளை பிரதேசங்களில் அதிகமான தமிழ், முஸ்லிம்கள்
வீடு காணிகளை வாங்கி குடியேறி இருக்கின்றார்கள். ஆனால்
அதனை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு கடும்போக்கு சிங்களவர்கள்
பக்குவப்படவில்லை. அந்த வகையில், ராஜகிரியவில் பள்ளிவாசல்
ஒன்றின் இருப்பு எதற்காக கேள்விக்குட்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகவே தெஹிவளை, கொஹுவலை பள்ளிகளும்
இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம். எது எப்படியிருப்பினும், அவரவர் தாம் விரும்பிய
மார்க்கத்தை கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கும் ஜனநாயக
நாடொன்றில், அதற்கு தடை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத
செயலாகும். பள்ளிவாசல்கள் ‘வக்பு’ சபையின் கண்காணிப்பின் கீழ்
இயங்குகின்றன. இவற்றை புத்தசாசன அமைச்சில் பதிய வேண்டும் என்ற
எந்தக் கடப்பாடும் முஸ்லிம்களுக்கு இல்லை. அப்படி என்றால் அது குறித்து அரசாங்கம் முன்கூட்டியே பகிரங்க அறிவித்தல்
ஒன்றை வெளியிட வேண்டும். அதுவும் முஸ்லிம் சமய கலாசார
திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதைவிட்டு விட்டு தொடர்ச்சியாக
பள்ளிவாசல்களை வீம்புக்கு இலக்கு வைத்தல் நல்லதற்கல்ல. அதற்காக எல்லாப் பிழைகளையும்
இனவாதிகளே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று கூறவரவில்லை.
முஸ்லிம்களின் பக்கத்திலும் தவறுகள், ஆவணப் பற்றாக்குறைகள்,
ஓட்டைகள் இருக்கலாம். உதாரணத்திற்கு நாட்டிலுள்ள
ஏதோவொரு பள்ளிவாசல் தொடர்பான எதேனும் ஒரு ஆவணத்தில்
பிடிகொடுக்கக் கூடிய விடயங்கள் ஏதாவது இருப்பதற்கு வாய்ப்புள்ளது. கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக்
கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்ற இனவாத
சக்திகளுக்கு இதுவே ஒரு துருப்புச் சீட்டாக அமைந்து விடும். அதேவேளை, மத்ரசாக்களிலும் தொழ முடியும்
என்பது முஸ்லிம்களின் உரிமை என்பதில் மறு கருத்தில்லை. அரச
தலைவரிடம் அமைச்சர் ஹக்கீம் கோரியிருப்பது போல் அதற்கான
அனுமதியும் கிடைக்க வேண்டும்தான். ஆயினும் சிங்களவர்கள்
செறிந்து வாழும் சூழலில் அமைந்துள்ள மார்க்க
போதனை பாடசாலை ஒன்றில் வெளியில் தெரியும்படி தொழுகை நடத்துவது இனவாதிகளின்
கண்களை குத்தவே செய்யும் என்ற யதார்த்தத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டியிருக்கின்றது. கொஹுவலை பகுதியிலிருந்தும் அவ்வாறான
ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது அரச தலைமையின்
காது வரைக்கும் சென்றிருக்கின்றதென்றால் பார்க்க
வேண்டியதுதானே! மத்ரசா ஒன்றில்
தொழுகை நடாத்துதவற்கு எதிராக பிக்கு ஒருவர் செய்த
முறைப்பாட்டை பாதுகாப்பு தரப்பினர் பரிசீலிக்க தொடங்கியுள்ளனர். இங்கு ‘மத்ரசா’
என்று கூறப்படுவது மேற்குறிப்பிட்ட பள்ளிவாசல்களில்
ஒன்றையா என்பதில் சிறிது மயக்கம் இருந்தாலும், பள்ளிகளில்
தொழுவதற்கே விடாதவர்கள் மத்ரசாக்களில்
தொழுவதை விரும்பமாட்டார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும்
கிடையாது.

வருத்தத்திலும் வருத்தம்

இந்த 3 பள்ளிவாசல்களிலும் தொடர்ச்சியாக தொழுகை நடத்தினால்
பிரச்சினை வரலாம் என்ற நல்லெண்ணத்திலேயே பொலிஸார் (என
நம்பப்படும் நபர்கள்) தொழ வேண்டாம் என கூறியதாகவும்
ஒரு கருத்து இருக்கின்றது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
இப்படிப் பொறுப்புடன் நடந்து கொண்ட அவர்கள்,
தொழுகை கைவிடப்பட்ட கொஹுவலை பள்ளிவாசல் தாக்குதலுக்கு இலக்காகாத வண்ணம் முன்கூட்டியே பாதுகாக்க
தவறிவிட்டனர் என்பது வருத்தத்திற்குரியது. அதைவிட வருத்தமான செய்தி ஒன்று இருக்கின்றது. கேட்டுக்
கேட்டுப் புளித்துப் போன சேதி. அதாகப்பட்டது –
கொழும்பிற்கு மிக அருகில் இருக்கின்ற 3 பள்ளிவாசல்களில்
தொழுகை நடத்துவது யாராலோ தடுக்கப்பட்டிருக்கின்ற போதும் 2
முஸ்லிம் அமைச்சர்களும் இரண்டு மூன்று மக்கள்
பிரதிநிதிகளும்தான் இதுபற்றி வாய்திறந்து ஏதோ பேசியிருக்கின்றார்கள்.
இரண்டு ‘டசினுக்கும்’ அதிகமான முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும்
முழு, அரை அமைச்சர்களில் மற்றைய எல்லாரும் ‘பிடில்’
வாசித்துக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் கோலோச்சும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இதில்
உள்ளடக்கம். தங்களின் கால் செருப்பு அறுந்ததில் இருக்கின்ற
கரிசனை அளவுக்குக் கூட, முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்கள்
பறிக்கப்படுவது குறித்த அக்கறை அவர்களிடம் இருப்பதாக இந்த
பழாய்ப்போன வாக்காளப் பெருமக்களுக்கு தெரியவில்லை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று தமிழில்
ஒரு பழமொழி உண்டு. இங்கு ‘கோயில்’ எனக்
குறிப்பிடப்படுவது எல்லா மத வழிபாட்டுத் தலங்களும்தான்.
ஏனென்றால் மனிதனை நல்வழிப்படுத்தும்
போதனை மையங்களாகவே எக்காலத்திலும்
அவை இருந்து கொண்டிருக்கின்றன. விகாரைகளும் கோவில்களும் தேவாலயங்ளும் பள்ளிவாசல்களும் இவ்வகையானவையே. இவற்றில்
நடக்கின்ற பிரித் வைபவத்தை, பூசைகளை, திருப்பலிகளை,
தொழுகைகளை நிறுத்துவதற்கோ தடை விதிப்பதற்கோ உத்தியோகபூர்வ
அதிகாரமோ தார்மீக உரிமையோ எந்த சக்திக்கும் இம்மியளவும்
கிடையாது. நாட்டில் மூடப்பட வேண்டிய அல்லது சட்ட வரைமுறைக்குள்
கொண்டு வரப்பட வேண்டிய விடயங்கள் வேறுபல இருக்கின்றன.
போலி மருத்துவ நிலையங்கள், சட்ட விரோத
கருக்கலைப்பு மையங்கள், விபசாரத்திற்காக நடத்தப்படுகின்ற
மசாஜ் நிலையங்கள், போதைப் பொருள் கடத்தல் நிறுவனங்கள் … போன்ற
இன்னும் ஏகப்பட்ட நாசகார வேலைகளை ஒழிக்க வேண்டியிருக்கின்றது.

வரலாற்றின் படிப்பினை
அதைவிட்டு விட்டு எந்த மதத்தினதும் வழிபாட்டிடத்திலான
வழிபாடுகளை தடை செய்வது மிகப் பெரிய சமூக எதிர்
விளைவுகளை கொண்டு வரும்.
தானுண்டு தன்பாடுண்டு என்று வாழ்ந்து வருகின்ற சகோதர
இனங்களுக்கு இடையில் பரஸ்பரம் வேண்டத்தகாத புதிய பிளவுகள்,
மனக்கசப்புக்கள், நம்பிக்கையீனங்கள் ஏற்படவும் காரணமாகிவிடும். 1990 களில் பள்ளிகளுக்குள் தொழுது கொண்டிருந்த
அப்பாவி முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர்.
காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வேறு சில இடங்களிலும்
இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின்
முதுகுகளை நோக்கி புலிகள் துப்பாக்கியால் உரக்கப்
பேசினார்கள். அதுகாலவரைக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை மானசீகமாக ஏற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் மக்கள்
அந்தப் பள்ளியில் முரண்பட்டனர். இறைவனை தொழுமிடத்திற்குள் புகுந்து மனிதம்
வேட்டையாடப்பட்டதை எக்காரணத்திற்காகவும் மன்னிக்க அவர்கள்
கடைசி வரையும் மறுத்துவிட்டனர். ஆக, பள்ளிவாசலிலான
தமது வழிபாடு அச்சுறுத்தலுக்குள்ளானமையே புலிகளை
முஸ்லிம்கள் நிராகரிக்க அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக
அமைந்து விட்டது. இதுதான் வரலாறு. இப்போது அதற்கு ஒப்பான ஒரு கைங்கரியத்தையே பேரினவாதமும்
முடுக்கி விட்டிருக்கின்றது. தொழுகை நடத்தும் இடங்கள்
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தொழுவதற்கு சிவப்புக்
கொடி காட்டப்படுகின்றது. இது இப்படியே போனால்… விடுதலைப் புலிகள் முஸ்லிம்களால்
எவ்வாறு வெறுத்தொதுக்கப்பட்டார்களோ அவ்வாறே சிங்கள
இனவாதிகளும் அதற்கு சூடம் காட்டுபவர்களும் நோக்கப்படுவார்கள்.
அதன் பின்னணியில், காலவோட்டத்தில் சிங்கள – முஸ்லிம் உறவிலும்
கீறல் விழும் என்பதை வரலாறுகளில் இருந்து கற்றுக் கொள்ள
வேண்டும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே !
-ஷேக்ராஜா
நன்றி :வீரகேசரி

No comments:

Post a Comment