தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

22 October 2012

கரையொதுங்கும் மீன்களில் நச்சுத்தன்மை இல்லை,உணவிற்கு உகந்தவையாகும்:தேசிய நீரியல் வளஆராய்ச்சியாளர்

கிழக்கில் கரையொதுங்கும் மீன்களில்
நச்சுத்தன்மை இல்லை. ஒட்சிசன்
குறைபாட்டினாலேயே அவை இறந்துள்ளன. இந்த
முடிவு இரசாயனப்
பகுப்பாய்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் இயக்குநர்
கலாநிதி கா.அருளானந்தன் அறிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்பகுதிக்
கடற்கரைகளில் மீனினங்கள் பெருமளவில்
கரையொதுங்கும் நிலையில் அது தொடர்பில்
பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட
போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்
மேலும் தெரிவிக்கையில்:
ஜுலை மாதம் ஆரம்பமாகிய தென்மேல்
பருவப்பெயர்ச்சிக் காற்றின் காலம்
முடிவடைந்து நவம்பர்,டிசம்பர் மாதமளவில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம்
ஆரம்பமாகவுள்ளது.
எனவே தற்போது அந்த இரண்டுக்கும் இடையில்
உள்ள காலமே இடைப்பருவப்பெயர்ச்சிக் காற்றுக்
காலமாகும். தென்மேல் பருவப் பெயர்ச்சிக்
காலத்தில் கடல் நீரோட்டமானது அரேபியன் தீவிலிருந்து இலங்கையின்
தெற்கு,கிழக்கு கடற்பகுதியூடாக வங்காள
விரிகுடாவை அடையும்.
இதேபோல் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தில்
மீண்டும்
திசைமாற்றமடைந்து வந்து பாதையூடு கடல் நீரோட்டம் திரும்பிச் செல்லும். இவ்வாறு கடல்
நீரோட்டம் திசைமாற்றம் அடையும்
காலமே தற்போதய இடைப் பருவப் பெயர்ச்சிக்
காற்றுக்காலம். இந்தக் காலத்தில் ஆழ்கடலிலுள்ள குளிர் நீர்
கடற்கரையை நோக்கிவரும். இதனால் கரையோர
நீரின் வெப்பம் குறையும். அப்படி குறைந்த
வெப்பத்திலுள்ள நீர் "அல்கே பிளம்ஸ்' எனப்படும்
மிக நுண்ணிய தாவரங்களைத் தோற்றுவிக்கும்
அளவுக்கு அதிகமாக கரையோரத்தில் பல்கிப் பெருகும்""அல்கே பிளம்ஸை' உட்கொள்ள
கடலிலுள்ள சிறிய மீன்கள்
கரையை நாடும்.கூடவே அச்சிறிய மீன்களைத்
தேடி உண்ண பெரிய மீன்களும் வந்துவிடும்.
ஆனால் இந்த நுண்ணிய தாவரங்கள்
ஒளித்தொகுப்பில் ஈடுபடுவதற்காக நீரிலுள்ள ஒட்சிசனை முற்றாக உறிஞ்சிக் கொள்ளும். வந்த
மீன்கள் சுவாசிக்க ஒட்சிசன்
இன்றி உயிரிழந்து விடுகின்றன.
அத்தோடு நின்றுவிடாமல் குறுகிய
ஆயுள்காலம் கொண்ட இந்த அல்கே பிளம்ஸ்கள்
இறந்த நிலையில் கடலின் அடியில் சென்று பிரிகையடைகின்றன.
பிரிகைக்குத் தேவையான
ஒட்சிசனை கடலுக்கு அடியிலுள்ள
நீரிலிருந்தும் உறிஞ்சிக் கொள்கின்றன.
எனவே கடலுக்கு அடியிலுள்ள பெரிய இன
மீன்களும் சுவாசிக்க ஒட்சிசன் இன்றி உயிரிழக்கின்றன.
இதுவே தற்போது நிகழ்ந்துள்ள மாற்றத்துக்குக்
காரணம். இது ஒவ்வொரு வருடமும் இந்தக்
காலப்பகுதியில் நடைபெறுகின்றது. இந்த
முறை வழமையைவிட அதிகளவான மீன்கள்
கரையொதுங்குகின்றன. எனவே சுனாமிக்கான
அறிகுறி என்றோ அனர்த்தங்கள் நிகழப்
போவதாகவோ யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் மேலும்
தெரிவித்துள்ளார். வழமையாகப் பிடிக்கப்படும் மீனினங்கள்
கரையொதுங்குவது சுனாமிக்கான
அறிகுறி அல்லவென அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

thanks:virakesari

No comments:

Post a Comment