தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

02 October 2012

ஹஜ்ஜின் சிறப்புகள்

எம். ஷம்சுல்லுஹா

அமல்களில் சிறந்தது

"செயல்களில் சிறந்தது எது?" என நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. "அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது"
என்றார்கள். "பின்னர் எது?"
என்று கேட்கப்பட்டது. "அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவது" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்கப்பட்டது. "ஏற்றுக் கொள்ளப்படும்
ஹஜ்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26


பெண்களின் ஜிஹாத்
 "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக்
கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத்
செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், "இல்லை. எனினும் (பெண்களுக்கு)
சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்" என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520
 அன்று பிறந்த பாலகர்
 "உடலுறவு மற்றும் பாவமான செயல்களில்
ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ்
செய்தால் அவன் அவனது தாய் அவனைப்
பெற்றெடுத்த நாளில் இருந்ததைப்
போன்று (பாவமறியாத பாலகனாக)
திரும்புவான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரி 1521
சுவனமே பரிசு
 "ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள
பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர
வேறு கூலியில்லை" அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்

 அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில்
இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே!
உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக
உங்கள் வலது கையை விரியுங்கள்"
என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக்
கொண்டு, "அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?"
என்று கேட்டார்கள். "நான் நிபந்தனை விதிக்கப்
போகின்றேன்" என்று கூறினேன். "என்ன
நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?"
என்று கேட்டார்கள். "எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்" என்று நான் பதிலளித்தேன். "அம்ரே!
நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள
பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது.
நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள
பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது.
நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத்
தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத்
தெரியாதா?" என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்:
முஸ்லிம் 173,இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்

 "அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ்
செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின்
சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன்
அவர்களை அழைத்தான். அவர்கள்
பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள்
பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்" என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார் (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில்
அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின்
மீதிருந்தார். திடீரென அவர்
தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து
விட்டார்.
அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள்,
"அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால்
குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள்.
அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்.
அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில்
அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்"
என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

 ரமளானில் ஒரு ஹஜ்
 உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப்
பெண்ணை நோக்கி, "நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத்
தடையாக அமைந்தது எது?" என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்,
"எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான
இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும்
சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்)
செல்வதற்காக இன்னோர்
ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச்
சென்றிருக்கின்றனர்" என்று பதிலளித்தார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில்
உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்"
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:
முஸ்லிம் 2201

அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
"பரட்டைத் தலையர்களாக,
புழுதி படிந்தவர்களாக நிற்கும்
எனது அடியார்களைப் பாருங்கள்"
என்று அரஃபா பெருவெளியில் நிற்கும்
மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம்
கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள் 
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ்
அடியானை அதிகமாக
நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை.
(அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த
அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள்
என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

 அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும் 
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின்
துஆவாகும். நானும் எனக்கு முந்தைய
நபிமார்களும் சொன்னதில் சிறந்தது,
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க
லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ
அலா குல்லி ஷையின் கதீர்' ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி), நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம்,
ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும்
ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும்.
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய
ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய
ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என
அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – 

ஹஜ் முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத்
ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

 தல்பியாவின் சிறப்பு

 எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால்
அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள
கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும்
தல்பியா கூறுகின்றன. இந்தக்
கோடியிலிருந்து அந்தக்
கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு 

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள்
தொழுகின்றாரோ அவர் ஓர்
அடிமையை உரிமை விட்டவர் போலாவார்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

 சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத் 

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள்
கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும்
ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார்
இதை முத்தமிட்டாரோ அவருக்காக
அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

 நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்
போது தலையை மழித்தார்கள். அவர்கள், "இறைவா!
தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ
கருணை புரிவாயாக!" என்று கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்
கொள்பவர்களுக்கும்" என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "இறைவா!
தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ
கிருபை செய்வாயாக!"
என்று பிரார்த்தித்தார்கள். "அல்லாஹ்வின்
தூதரே! முடியைக் குறைத்துக்
கொள்பவர்களுக்கும்" என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், "முடியைக் குறைத்துக்
கொள்பவர்களுக்கும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

 ஜம்ஜமின் சிறப்பு அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும்.

உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520 மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில்
(மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச்
சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167,
இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

 மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில்
தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம்
தொழுகைகளை விடச் சிறந்ததாகும்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190 மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு யார் தனது வீட்டில் உளூச்
செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில்
ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா
செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692
thanks:tntj.net

No comments:

Post a Comment