தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 November 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பயணம் எவ்வாறு அமையும்? (காணொளி இணைப்பு)

நாட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்பட்டு வந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையும் ஒன்று. பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்வதற்கு உரியதாக அமைக்கப்பட்டுள்ளதே தெற்கு அதிவேக நெடுஞ்சாலை.

இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்ப டவுள்ளது. ஜப்பானிய சமாதானத் தூதர் யசூசி அகாசி மற்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கே.அரசரட்ணம் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீதி மக்களுக்கு எவ்வாறான பயனுடையதாக இருக்கும் என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்று சற்று நோக்குவோமாயின்,

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரையான சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்டதாக அமைந்துள்ளது. கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ செல்கின்றது.

காலியிலிருந்து 100 கிலோமீற்றர் பாதுகாப்பாக பயணிக்க முடியாத எந்தவொரு வாகனங்களுக்கும் இவ்வீதியில் பயணிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வீதியில் செல்வதற்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் நுழைவாயிலில் கட்டணம் செலுத்திய பின்னரே உள் நுழைய முடியும்.

இவ் வீதியினூடாக கொட்டாவையிலிருந்து காலி நகருக்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் செல்லக்கூடியதாக இருக்கும் என்று போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.அரசரட்ணம் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் போன்ற குறிப்பாக 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள் மற்றும் அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற்படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத அனைத்து வாகனங்களுக்கும் இவ்வீதியில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக பாதசாரிகள் எவரும் நடந்து செல்வதற்கு முற்றாக தடைவிதிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு மீறி நடந்து செல்பவர்களுக்கு எதிராக 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன் இந்த வீதியில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மாத்திரமே நுழைவாயில்கள் அமைக் கப்பட்டு பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி, கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை பயணிக்கும் வாகனங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 400 ரூபா 700 ரூபா, 1500 ரூபா மற்றும் 2000 ரூபா என்ற அடிப்படையில் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன. இதில் கார், கெப் ரக வாகனம், 9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங்கள், எக்ஸல்2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபாவும் 9 ஆசனங்களுக்கு அதிகமான வேன் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ் வண்டிகளுக்கும் 700 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

அத்தோடு 22 க்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரெக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இதேவேளை ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா அறவிடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிடப்படும் கட்டணங்கள் வாகனங்கள் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்றவாறு அறவிடப்படும். இந்த வீதிகளில் பொது மக்கள் நுழையாத வகையில் வீதியின் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் வீதி தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

எனினும் பொதுமக்களின் பார்வைக்காக கடந்த 19, 20 ஆம் திகதிகளில் வீதி திறந்து வைக்கப்பட்டதுடன் பல விளையாட்டு மற்றும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 27 ஆம் திகதி இந்த வீதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதையடுத்து சட்டவிரோதமாக வாகனங்கள் செல்லுமாக இருந்தால் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறிய ரக வாகனங்கள் உள்நுழைவதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த வீதியூடாக பயணிக்கத் தகுதியுடைய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதியே சிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுவதாக போக்குவரத்துப்பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே. அரசரட்ணம் தெரிவித்தார்.

தெற்கு அதிவேக மார்க்கத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் எட்டு இடங்கள் காணப்படுவதுடன் அவை கொட்டாவை, கஹதுடுவ, களனிகம, வெலிபன்ன, குறுந்துஹா, தாபம, தொடங்கொடை, பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீதியின் போக்குவரத்துக் கடமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 உத்தியோ கத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஷேடமாக பயிற்சியளிக்கப் பட்டவர்களே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெற்கு அதிவேக வீதியை ஹம்பாந்தோட்டை வரை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல் கொத்தலாவல ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்டத்தின் கீழ் அடுத்த வருடம் மாத்தறை வரையில் இந்த தெற்கு அதிவேக வீதி நெடுஞ்சாலை நிர்மாணிக்கப் படவுள்ளது. காலி முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்காலத்தில் ஆங்காங்கே சிசிடி எனப்படும் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைத்தல், வேகம் என்பவற்றை கண்காணி க்கவென விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாவை தொடக்கம் பின்னதுவ வரையான 8 நுழைவாயில்களிலும் பாதுகாப்பு கமரா பொருத்தப்படவுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கண்காணிப்புப் பணிப்பாளர் பி.டி.கே.பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்புக் கமராக்களை அவதானிக்க சிறப்புப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் போக்குவரத்துக் குற்றச் செயல்களை இனங்காண பாதுகாப்பு கமராக்கள் பெரிதும் துணைபுரியும் என பண்டார கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதியில் 22 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிதி உதவிகளை சர்வதேச ஜப்பான் வங்கி,ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 80 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி வீதியில் சொகுசு பஸ் சேவையொன்றை நடத்த இலங்கை போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் எம்.டி பந்துசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 27 ஆம் திகதி இந்த வீதி திறந்து வைக்கப்படும் என்றும் அன்று முதல் இரண்டு பஸ் வண்டிகள் காலியிலிருந்து கொட்டாவ வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள பஸ் வண்டிகள் ஒரு மணித்தியாலத்தில் காலியிலிருந்து கொட்டாவ வரை பயணிக்கும் எனவும் அதற்கான கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும்அவர் தெரிவித்தார். அவை சொகுசு பஸ்கள் என்பதால் பஸ்ஸின் அனைத்து ஆசனங்களிலும் பயணிகள் பாதுகாப்புப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 22 பாலங்கள் காணப்படுகின்றது.

இவ்வீதியில் வாகனம் ஓட்டும் சாரதிகள் கையடக்கத்தொலைபேசி பாவித்தால் அவர்களுக்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி திடீரென விபத்துக்கள் ஏற்பட்டால் 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமைகளில் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் என்று போக்குவரத்துப்பிரிவுப்பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அது மாத்திரமன்றி மழைக்காலங்களில்வேகத்தை கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும் என்பதுடன் மிகவும் அவதானமாக செல்லுமாறும் கேட்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார் சைக்கிள்களும் ஈடுபடுத்தப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Thanks:virakesari

No comments:

Post a Comment