இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த முதல் ஹிஜ்ரத் தொடர்பாக முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ள செய்தியைப் பார்ப்போம்.
அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள். மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுத்தனர்
இந்தக் காஃபிர்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து முன்கூட்டியே அவர்களை சரிக்கட்டி வைத்துக் கொண்டு, பிறகு அங்குள்ள மன்னரிடம் பேசுவதாகவும், காணிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நமக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்பதுதான் இந்த மக்கத்து காஃபிர்களின் திட்டம். அதேபோன்று கீழுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் நீங்கள் அரசவையில் உங்களது கோரிக்கை களை வையுங்கள். நாங்கள் அதற்குரிய ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.



