தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

09 February 2017

பார்வை இழப்பு- வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்


வயதாகும்போது பார்வைக் குறைபாடுகள்

வயதாகும்போது பெரும்பாலானோருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு பல்வேறு நோய்கள் காரணமாக உள்ளன. கற்றரக்ட் எனப்படும் கண்புரை நோய் சத்திரசிகிச்சை மூலம் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதாகும்.


கண்ணில் பிரஷர் எனப்படும் குளுக்கோமா, நீரிழிவினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு மற்றும் இங்கு தொடர்ந்து பேச இருக்கும் வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய் ஆகியன அவ்வாறல்ல. அவற்றை முற்று முழுதாகக் குணமாக்குவது சாத்திமல்ல.


ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதாலும் தொடர்ச்சியான சிகிச்சைகளாலும் ஓரளவு குணமாக்குவதுடன், நோய் மேலும் மோசமடையமல் தடுக்கவும் முடியும்.
வயது சார்ந்த மக்கியூலா சிதைவு (age related macular degeneration- ARMD)

மக்கியூலா என்பது எமது கண்ணில் உள்ள ஓரு சின்னஞ்சிறு பகுதியாகும் இதன் விட்டம் 5 மில்லிமீற்றர் அளவு மட்டுமே. இருந்தபோதும் எமது பார்வைக்கு அவசியமான கலங்களான  rods and cones  மிகவும் செறிவாக நிறைந்துள்ள பகுதி இதுவாகும். நுணுக்கமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதி இதுவாகும். வாசிப்பது எழுதுவது முகங்களை இனங் காண்பது போன்ற நுண்ணிய விடயங்களுக்கு அவசியமானதாகும்.


விழித்திரையின் மிகுதிப் பெரும் பகுதி பரந்த பார்வைக்கு உரியதாகும். குறித்த ஒரு பகுதியை என்றல்லாது முழுக் காட்சியையும் உள்வாங்குவதாகும். எனவே மக்கியூலா சிதைவு நோயின் போது பார்வை முழமையக இல்லாது போகாது.

மக்கியூலா பகுதியில் உள்ள கலங்கள் சேதமடைவதற்குக் காரணம் விழித்திரை மற்றும் மக்கியூலாவின் பின் பகுதியில் இருந்து அதற்கான போசனைப் பொருட்களை வழங்குவதுடன் அதிலிருந்து கழிப்புப் பொருட்களையும் அகற்றும் பகுதியான retinal pigment epithelium (RPE) சேதமடைவதே ஆகும்.

இதனால் வெளியோறாத கழிவுப் பொருளான drusen என்பது விழித்திரையில் படிந்து விழித்திரைக் கலங்களான rods and cones  ற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே பார்வை பாதிக்கப்படக் காரணமாகும்.

தடுப்பது எப்படி

இவ்வாறு பாதிப்புகள் ஏற்படாதிருக்க தடுப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை.
புகைத்தல் ஒரு முக்கிய  காரணமாகச் சொல்லப்படுகிறது. புகைத்தானது சுவாசப்பையை பாதிப்பதும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததே. எனவே புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான சாத்தியம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. எனவே பிரசர் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும், பிரஷர் வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகும்.
பழவகைகள்;, விதைகள் உட்பட ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்
குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும். இருந்தபோதும் இது பரம்பரை நோயாகக் கொள்ள முடியாது.
யாருக்கு வரும்

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயை 60 வயதிற்குக் கீழ்பட்டவர்களில் காண்பது அரிது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் வருவதாகச் சொல்லப்படுகிறது. வயது கூடக் கூட இது அதிகரிக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
75 வயதிற்குப் பின்னர் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகத் ஏற்படுகிறதாம்.

அறிகுறிகள்

மிக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுகிற நோய் என்பதால் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பதில்லை.
இருந்தபோதும் 60 வயதை அண்டியவர்கள் சில சாதாரண அறிகுறிகளைக் கவனத்தில் எடுப்பது அவசியம். வாசிப்பதற்கு வழமையை விட அதிக வெளிச்சம் தேவைப்படுவது, பத்திரிகை மற்றும் புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவற்றதாகத் தோன்றுவது, வண்ணங்கள் வழமையைவிட மங்கலாகத் தோன்றுவது, முகங்களை அடையாளங் காண்பது சிரமமாக இருப்பது போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கலாம்.
அலட்சியம் பண்ணாதீர்கள்


மற்றொரு அறிகுறி முக்கியமானது. பொருட்களைப் பார்க்கும் போது அவற்றில் மாற்றங்கள் தெரியலாம். முக்கியமாக நேர் கோடுகள் வளைவாகவோ தாறுமாறாகவோ தோன்றலாம். உதாரணமாக நிலத்தில் பதித்துள்ள மாபிள் கல்லுகளுக்கு இடையே உள்ள கோடுகள் நெறிந்து முறிந்தோ வளைவாகவோ தோன்றுவது பிரத்தியேக அறிகுறியாகும்.


பார்வையில் கரும்புள்ளிகள் தோன்றலாம். மக்கியூலாவில் உள்ள கலங்கள் தொடர்ந்து சிதைவடையும்போது அவை அளவில் பெரிதாகும்.
பார்வை மோசமாகப் பாதிக்கப்படும்போது மாயத் தோற்றங்கள் ஏற்படலாம். இல்லாத பொருள்கள் இருப்பது போன்ற பிரமைத் தோற்றங்கள் வேறெந்த நோயால் பார்வை பாதிப்புற்றாலும் தோன்றலாம். இந்த நிலை பொதுவாக 18 மாதங்கள் வரை செல்லும்போது படிப்படியாக இல்லாது ஒழிந்துவிடும்.

சிகிச்சை

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயில் இரண்டு வகைகள் உண்டு ஈரலிப்பான மக்கியூலா சிதைவு நோய் (Wet ARMD ).  வரட்சியான மக்கியூலா சிதைவு நோய் (Dry ARMD) என்பனவே அவை.
பெரும்பாலானவர்களைப் பாதிப்பது Dry ARMD ஆகும். இது படிப்படியாக மோசமாகிப் பார்வையைக் கடுமையாகப் பாதிக்க பல வருடங்கள் செல்லலாம். இதற்கெனச் சிறப்பான சிகிச்சை முறைகள் இல்லை. ஆயினும் பாதிப்பு அதிகமாகாதவாறு தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கபடும்.
மாறாக Wet ARMD  மிகக் குறைந்தவர்களையே பாதிக்கிறது. ஆயினும் ஒரு சில மாதங்களுக்குள் பார்வையை கடுமையாகப் பாதிக்கும். இருந்தபோதும் இதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. புதிய மருந்துகளும் அறிமுகமாகின்றன. ஆயினும் அவற்றை இங்கு விபரிப்பது சாத்தியமானதல்ல.

இறுதியாக

மக்கியூலா சிதைவு நோயிற்கு தெளிவான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே ஒழுங்கான கால இடைவெளியில் கண் மருத்துவரைக் காண்பதன் மூலமே அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கலாம்.
அதிலும் முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், குடும்பத்தில் இந்த நோயுள்ளவர்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
வருமுன் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

நன்றி:
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)


No comments:

Post a Comment