தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 June 2016

கண்ணியமிக்க இரவு..!


– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்சமாகும்.


“மகத்துவமிக்க இரவில் இதை நாம் இறக்கினோம்”

என இதை இங்கு குறிப்பிடப்படுவது அல்குர்ஆனையே குறிக்கும். இதற்கு முன்னைய அத்தியாயத்தில் முதல் முதல் அருளப் பட்ட இக்ரஃ அத்தியாயம் அமையப் பெற்றிருப்பது நல்லதொரு தொடர்பாகத் தென்படுகின்றது.

இந்தக் குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் உலகின் முதல் வானுக்கு அருளப்பட்டது. அதனையே இந்த வசனம் கூறுகின்றது. இந்த இரவு குறித்து, “இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்” (44:37) என்று குர்ஆன் கூறுகின்றது.

எனவே, அந்த இரவு முபாரக்கான இரவு எனவும், கத்ருடைய இரவு எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகு வானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத் துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)”. (2:185) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனவே, எவ்வித சந்தேகமுமின்றி அல்குர்ஆன் அருளப்பட்ட மகத்துவமான அருள்பொதிந்த இரவு ரமழான் மாதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடம் கிடையாது. “கத்ர்” என்றால் கண்ணியம், மகத்துவம் என்ற கருத்துக்கும் இடம்பாடுள்ளது. அதேநேரம், ஒரு காரியத்தைத் திட்டமிட்டுத் தீர்மானிப்பதையும் இது குறிக்கும். இந்தக் கருத்தில்தான் கழா கத்ர் என நாம் குறிப்பிடுகின்றோம். இந்த இரவுக்கு கத்ருடைய இரவு என ஏன் பெயர் குறிப்பிடப்பட்டது என்பது குறித்து இமாம் படீகவி(ரஹ்);

“இந்த இரவில் தான் அடுத்த வருடத்திற்கான உலக மனித செயற்பாடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன” எனக் குறிப்பிடுவதுடன் அதற்கு “அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது”.(44:4) என்ற வசனத்தையும் சான்றாகக் குறிப்பிடுகின்றார்கள். படைப்பினங்களைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கழா கத்ர் தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்த இரவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட “கத்ர்” மீண்டும் இந்த இரவில் தீர்மானிக்கப்படுவதாகவே கருத முடியும்” எனக் குறிப்பிடுகின்றார்.

கத்ருடைய இரவு என்பது மகத்துவமான இரவு என அர்த்தப்படுத்துவோர் “அல்லாஹ்வை மதிக்கவேண்டிய விதத்தில் அவர்கள் மதிக்க வில்லை” (6:91) என்ற வசனத்தை ஆதாரமாகக் கூறுவர். “வமா கதருல்லாஹ்” அல்லாஹ்வை அவர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தப்படுவது போல் கத்ருடைய இரவு என்பது மகத்துவமுடைய இரவு என அர்த்தப்படும் என்பர். இந்த இரு விளக்கமும் மறுக்கப்படக் கூடியவையல்ல.

அன்றைய இரவில் செய்யப்படும் நல்ல அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிக மகத்துவம் பெற்றதால் இவ்வாறு கூறப்படுவதாகவும் சிலர் கொள்வர். இதுவும் முரண்பட்ட விளக்கமாகக் கொள்ளத்தக்கதல்ல.

மகத்துவமிக்க இரவு என்றால் என்ன வென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

அந்த இரவின் சிறப்புக் குறித்த முதல் செய்தி இதுவாகும். அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். சுமார் 83 வருடங்களை விட சிறப்பு வாய்ந்ததாகும். ஏற்கனவே கூறிய அருள் பொதிந்த இரவு என்பதும் இதற்குப் பொருந்திப் போகின்றது. ஒரு இரவு 83 வருடங்களை விட அதிக சிறப்புப் பெறுவது என்பது மிகப்பெரிய அருளாகும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்பதற்கு அந்த இரவில் செய்யப்படும் நல்லமல்கள் அஃதல்லாத ஆயிரம் மாதங்கள் செய்யும் அமல்களை விடச் சிறந்ததாகும் என்ற கருத்தை முஜாஹித், அம்ரிப்னு கைஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

மற்றும் சிலர் “லைலதுல் கத்ர்” இல்லாத ஆயிரம் மாதங்களை விட அந்த இரவு சிறந்தது என்று குறிப்பிடுவர்.

இந்த ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை இந்த மாதத்திற்கு அல்லாஹ் வழங்கியதற்கு இந்த உம்மத்தின் ஆயுட்காலம் முன்னைய கால மக்களின் வாழ்வுக் காலத்தை விடக் குறைந்தது என்பது முக்கிய காரணமாகும்.

இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் வரும். எப்போது வரும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த இரவு எது என்பதை அல்லாஹ் மறைத்து விட்டான் என்றே கூற வேண்டும்.

“எனக்கு “லைலதுல் கத்ர்” காட்டப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதனை ரமழான் கடைசிப் பத்தின் ஒற்றைப் படையான இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

“நான் லைலதுல் கத்ரை அறிவிக்க வந்தேன். உங்களில் இருவர் சர்ச்சைப்பட்டுக் கொண்டிருந்தனர். அது எனக்கு மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அது உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்” (முஸ்லிம்)

“அந்த இரவு, நபியவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. அது எது என்பதை மக்கள் அறியாமல் இருப்பதே நல்லதாகும். எனினும் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைவதற்காகக் கடைசிப் பத்து பூராகவும் முயற்சித்துள்ளார்கள்” என ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே, அந்தப் மகத்துவ மிக்க இரவை அடைந்து கொள்வதற்காக ரமழான் மாதத்தின் குறிப்பாக இறுதிப் பத்து பூராகவும் முயற்சிக்க வேண்டும்.

இந்த உண்மையை அனைத்து உலமாக்களும் அறிந்திருந்தாலும் ரமழான் ஹதியாவைப் பிரதானமான இலக்காகக் கொண்டு 27ம் இரவு சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சிலர் இரவுத் தொழுகையைக் கூட விட்டு விடுகின்றனர். இந்த வழிமுறையால் பலரும் “லைலதுல் கத்ரை” இழக்கும் அபாய முள்ளது. எனவே, அந்த இரவை அடைந்து கொள்ள அனைவரும் முயலக் கடமைப் பட்டுள்ளனர்.

அந்த இரவில் நின்று வணங்குவது முன்னைய பாவங்கள் அனைத்தையும் அழித்து விடும். எனவே, இறுதிப் பத்து முழுவதும் முயற்சிசெய்து அந்தப் பாக்கியத்தை அடைய முயல்வோமாக.

வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். இங்கே அந்த இரவின் முக்கிய சிறப்பம்சம் கூறப்படுகின்றது. அந்த இரவில் மலக்குகளும் “ரூஹ்” எனப்படும் அவர்களது தலைவர் பரிசுத்த ஆவியான ஜிப்ரீல்(அலை) அவர்களும் இறங்குகின்றனர்.

அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் அடுத்த வருடத்திற்கான கட்டளைகளையும் சுமந்து வருகின்றனர். இதைத்தான் 44:4 வசனமும் கூறுகின்றது. அடுத்து “கத்ர்” உடைய இரவு என்பதும் இந்த அர்த்தத்திற்குப் பொருத்தமாகவுள்ளது.

“ஸலாம்” இது வைகறை வரை இருக்கும். என்று இந்த சூறா முடிவடைகின்றது. அந்த இரவு காலை வரை அமைதி பொருந்தியதாக இருக்கும் என்றும் அன்று இரவு முதல் பஜ்ர் வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நல்லடியார்களை மலக்குகள் காணும் போதெல்லாம் ஸலாம் கூறுவார்கள் (ஸஃபுல் ஈமான்) என்றும் இதற்கு விளக்கம் கூறப்படுகின்றது.

அந்த இரவில் மலக்குகளின் ஸலாத்தைப் பெற நாடுவோர், அந்த இரவைப் பயன்படுத்தி மறுமையில் ஸலாத்தை – பாதுகாப் பையும் அமைதியையும் – அடைய விரும்பு பவர்கள் அந்த இரவில் இஸ்லாம் கூறும் இனிய இபாதத்துக்களில் ஈடுபட்டு இறையருள் பெற இன்றே உறுதி பூணுவோமாக!

No comments:

Post a Comment