இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு அவலமா என்று கேட்கத் தோன்றுகிறது மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலையை எண்ணி!
உணவு,உடை, உறையுள் எனும் அடிப்படைத் தேவைகளுக்கு முதல், இருப்பதற்கு இந்த உலகில் ஒரு துண்டு நிலம் கூட இல்லாது நடுக்கடலில் தத்தளித்து மீன்களுக்கு இரையாகிப் போகின்ற சமூகமாக இன்று ரோஹிங்யா முஸ்லிம்கள் மாறியிருக்கிறார்கள்.
பௌத்த கடும்போக்கு கோட்பாடுகளைக் கொண்ட மியன்மார் அரசு தமது நாட்டில் 15 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே வாழ்ந்து வரும் ரோஹிங்யா இன முஸ்லிம்களின் குடியுரிமையை 1980 களில் பறித்ததிலிருந்து இன்று வரை அந்த மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.
குடியிருக்க நிலமில்லை...உண்ண உணவில்லை... இருக்க இருப்பிடமில்லை... என தினமும் அந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லில் வடிக்க இயலாதவை.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌத்த கடும்போக்காளர்கள் அவ்வப்போது கலவரங்களை உண்டுபண்ணி ரோஹிங்யா முஸ்லிம்களை உயிரோடே கொளுத்திவிடும் நிலை இருக்கிறதே அது அதைவிடவும் கொடுமை.
ஏன் இந்த மக்கள் கடலில் தத்தளிக்கிறார்கள்?
மேற்சொன்ன கொடுமைகளை தினம் தினம் அனுபவிப்பதை விட வேறு ஏதாவதொரு தொலைதூர நாட்டில் போய் அகதிகளாக வாழ்ந்தாலாவது நிம்மதியாக இருக்க ஓர் இடமும் மூன்று வேளை சாப்பாடும் கிடைக்குமே என்ற நப்பாசைதான் இன்று ரோஹிங்யா முஸ்லிம்கள் நடுக்கடலில் தத்தளிக்கக் காரணம்.
இந்த மக்களின் அவல நிலையைப் பயன்படுத்தி இரக்கமற்ற கொடூரர்கள் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். உங்களை வேறு நாட்டில் நிம்மதியாக வாழ அழைத்துச் செல்கிறோம் என ஆசை வார்த்தை காட்டி சுமார் 100 டொலர் பணத்தையும் பெற்றுக் கொண்டு படகுகளில் அழைத்து வந்து நடுக்கடலில் விட்டுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள்
இப்படிப் படகுகளில் அழைத்துவரப்பட்ட சுமார் 8000 பேர் தற்சமயம் கடலில் பயணித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச தொண்டு நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் தமது நாட்டில் வறுமை காரணமாக வாழ முடியாது ரோஹிங்யா மக்களுடன் இணைந்து கொண்ட பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குகிறார்கள்.
ஏலவே இவ்வாறு மியன்மாரை விட்டு வெளியேறிய பலர் தாய்லாந்தின் காட்டுப் பகுதி ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். சுமார் 700 பேர் வரை இந்தோனேஷியாவைச் சென்றடைந்திருக்கிறார்கள். மலேசியாவில் 300 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக இறுதியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மீதிப் பேர் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
30 வயதான சாலிம் ஒரு மீன் வியாபாரி. 2014 சனத்தொகைக் கணக்கெடுப்பில் அவர் ரோஹிங்யா இனத்தவர் என முத்திரை குத்தப்பட்டதால் அவருக்கு மியன்மார் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு தொடர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் ஒருவாறு படகில் ஏறி இப்போது தாய்லாந்தை வந்தடைந்திருக்கிறார்.
கதீஜா பீபிக்கு 20 வயதுதான் ஆகிறது. தனது கணவன் மற்றும் பிள்ளைகளோடு அவளும் படகில் பயணித்து தாய்லாந்தை வந்தடைந்திருக்கிறாள். மியன்மாரில் உணவு, கல்வி, மருந்து வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே தாம் இப்படியான உயிராபத்துமிக்க பயணத்தை தேர்ந்தெடுத்ததாக கதீஜா பீபி கூறுகிறாள்.
இப்படி உயிர்தப்பி கரை தட்டியவர்கள் ஏராளமான கதைகளைச் சொல்கிறார்கள்.
ஆனால் கரைக்கு வராமல் நடுக்கடலிலேயே மாண்டு மீன்களுக்கு இரையானவர்களின் கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் அல்ல இரத்தம்தான் வரும்.
இந்த படகுப் பயணம் மிகவும் ஆபத்தானது. 100 பேர் பயணிக்கும் படகில் 300 பேரை ஏற்றுவார்கள். உடுத்திருக்கும் உடையைத் தவிர வேறு எந்த உடைமைகளையும் படகில் ஏற்ற முடியாது.
ஏன் மேலதிக உணவைக் கூட எவரும் கொண்டு வர முடியாது. சுமார் 30 நாட்கள் தொடராக கடலில் பயணிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு தலையசைத்தால் மாத்திரமே இந்தப் படகுகளில் இடம் கிடைக்கும். இன்றேல் மியன்மாரிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.
இப்படி படகு பயணித்துக் கொண்டிருக்கையில் உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படும். அடுத்தவர்களிடமிருக்கும் உணவைப் பறித்துச் சாப்பிட பலரும் முண்டியடிப்பார்கள். இது படகுக்குள் பெரும் கலவரத்தையே உண்டுபண்ணும். ஈற்றில் பலசாலிக்குத்தான் வெற்றி. இப்படி நடுக்கடலில் உணவுக்காக நடந்த சண்டையில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக உயிர்தப்பி வந்தவர்கள் சொல்கிறார்கள்.
சில சமயங்களில் அவ்வழியால் வரும் இந்தோனேசிய, தாய்லாந்து மீனவர் படகுகள் இவர்களது பரிதாபத்தைக் கண்டு உணவுகளைக் கொடுத்தாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் நடக்கும் சண்டையிலும் பலசாலிகள்தான் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு ஆயிரக் கணக்கான ரோஹிங்யா மக்கள் கடலில் தத்தளிக்கும் செய்தியை பி.பிசி. மற்றும் அல் ஜஸீரா ஆகிய பிரபல ஊடகங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் வெளியிட்ட போதுதான் அவர்களது அவலம் முழு உலகுக்குமே தெரியவந்தது.
உடனே சில நாடுகள் மனிதாபிமான நோக்கில் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வான் வழியாக விநியோகித்தன.
ஹெலிகொப்டரிலிருந்து வீசப்படும் உணவுப் பொருட்கள் கடலில் வீழ்ந்தால் கூட உயிரைக் கூட துச்சமென மதித்து கடலில் பாய்ந்து அவற்றைப் பொறுக்கிச் சாப்பிடுகின்ற நிலையை கண்டபோது என் கண்கள் பனித்தன. அவ்வாறான காட்சிகள் சிலவற்றை இங்கு பிரசுரிக்கப்பட்ட படங்களில் நீங்கள் காணலாம்.
இப்போது தமது கடற்பகுதியில் தவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தற்காலிக புகலிடம் தர மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
அகதிகளை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தாய்லாந்தும் கூறியுள்ளது. அகதிகளுக்கு உதவுமாறு இந்த நாடுகள்மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகின்றது. ஆனாலும் அதில் நிபந்தனைகளும் இருக்கின்றன.
தாம் குடியேறிகளை தேட மாட்டோம் என்றும், அவர்கள் கரைக்கு வந்தால், அவர்களுக்கு ஒருவருடத்துக்குள் வேறு இடங்களில் மீளக்குடியேற்ற, சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற நிபந்தனையில், அவர்களை அனுமதிப்போம் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹனிபா அமான் கூறுகிறார்.
இதேவேளை கடலில் நிர்க்கதியாகியுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளைத் தேடிக் கண்டுபிடித்து மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக் கூறியுள்ளார்.
கடலில் படகுகளில் நிர்க்கதியாகியிருக்கும் குடியேறிகளில் பெரும்பாலானவர்கள் மியன்மாரையும் வங்கதேசத்தையும் சேர்ந்தவர்கள். படகுகளில் உள்ள குடியேறிகளை தங்களின் நாடுகளுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று மலேஷியாவும் அதன் அண்டை நாடுகளும் முன்னர் மறுத்துவந்திருந்தன.
ஆனால் குடியேறிகளின் நிலைமை மோசமடைந்துவருகின்ற சூழ்நிலையில், அந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.
குடியேறிகள் தற்காலிகமாக தங்கள் நாடுகளில் தங்குவதற்கு அனுமதி வழங்குவதாக மலேஷியாவும் இந்தோனேஷியாவும் இணங்கியுள்ளன.
மியன்மார் அதிகாரிகளுடனும் மலேஷிய மற்றும் இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவருகின்றனர்.
ஆனாலும் இதனிடையே படகுகளில் வரும் ரோஹிஞ்சா குடியேறிகளை தங்கள் நாட்டுக்குள் குடியேற அனுமதிக்கப் போவதில்லை என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
இப்படி இந்த மக்கள் விடயத்தில் கடைசி நேரத்திலாவது சில நாடுகள் இரக்கம் காட்ட முன்வந்திருப்பது ஆறுதல் தருகிறது.
ஆனாலும் இவர்களது பிரச்சினைக்கு நிரந்ரத் தீர்வு காணப்படாத வரை இவ்வாறான
அவலங்கள் தொடரவே செய்யும். இந்த மக்களுக்காக பிரார்த்திப்போம்.!
நன்றி:விடிவெள்ளி
அவலங்கள் தொடரவே செய்யும். இந்த மக்களுக்காக பிரார்த்திப்போம்.!
நன்றி:விடிவெள்ளி
No comments:
Post a Comment