சாதனை என்பது ஒரு இலட்சியத்தை இலக்காகக் கொண்டு, கடின உழைப்பின் மூலம் அதனை அடைதலைக் குறிக்கும். செய்வதற்கு இலகுவல்ல எனப் பொதுவாக நினைக்கும் ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும் விதத்தில் செய்து முடிக்கும் போது அது சாதனையாக மாறிவிடுகின்து. சாதனைகளை எல்லோராலும் இலகுவில் செய்துவிட முடியாது. ஒரு சாதனையைப் படைப்பதற்கு மன உறுதி, நீண்டகாலத் திட்டமிடல், இடைவிடாப் பயிற்சி, தியாகம் எனப் பல விடயங்கள் ஒருசேர அமைய வேண்டும். இவ்வாறு சாதனை புரிபவர்கள் எல்லோராலும் பேசப்படுகிறார்கள்.
அந்தவகையில் பேருவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்நாட்களில் சாதனையை நோக்கிய நடைப் பயணமொன்றை மேற்கொண்டு வருகிறார். இருபத்து ஐந்தே வயதான ஷஹ்மி ஷஹீத் இலங்கையின் பெரும்பாலான கரையோரப் பாதைகளை ஊடறுத்து சுமார் 1500 கிலோமீற்றர்கள் வரையிலான தூரத்தை நடை பயணமாகக் கடந்து நாட்டைச் சுற்றிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 13ம் திகதி (ஜூலை) காலை வேளையில் பேருவளையிலிருந்து ஆரம்பித்த அவரது நடைப் பயணத்தில் தெற்குத் திசையில் சென்று காலி, மாத்றை, அம்பாந்தோட்டை வழியாக மொணராகலை, சியம்பலாண்டுவை, பொத்துவில் ஊடே கிழக்கு மாகாணத்தை அடைந்து தற்போது தனது பயணத்தின் 18ம் நாளில் ஓட்டமாவடியைத் தாண்டி திருகோணமலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளியேறி முல்லைத்தீவு, கிளிநொச்சி வழியாக யாழ்ப்பானத்தை அடைந்து பின்பு அங்கிருந்து மன்னார், அனுராதபுரம், புத்தளம் ஊடாகக் கொழும்புக்கு வந்து பேருவளையில் நிறைவு செய்ய உள்ளார்.
சிரமம் எனக் கருதி அருகில் உள்ள பள்ளிவாசலுக்கே மோட்டார் வண்டியில் செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பயணத்தை ஆச்சரியமாகவே பார்க்கவேண்டி உள்ளது. இப்பயணம் ஒரு நாளைக்கு 30, 35 கீலோமீற்றர்கள் நடப்பதினூடாக 50 நாட்களில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
"சுதந்திரமான இலங்கையில் எந்தவொரு பிரஜையும் அல்லது தனி நபரும் தான் விரும்பிய இடங்களில் எவ்விதத் தடையுமின்றி பாதுகாப்பாய் நடமாடலாம்" என்ற செய்தியை நோக்கமாக எடுத்துக் கொண்டே ஷஹ்மி இந்நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் எமது நாடு பற்றி உலகிற்கு மிகச் சிறந்ததொரு தகவலை அறிவிப்புச் செய்கிறார். இது இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய செய்தியாகும். அதே போன்றே அவரது இப்பயணம் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. முடியாது என்று நாம் பின்வாங்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் துணிந்து முயற்சித்தால் முடியும் என ஆக்கலாம் என்ற நம்பிக்கையை இளையவர்கள் மனங்களிலே விதைக்கச் செய்கின்றது. இதனால் இன்னும் பல சாதனைகள் உருவாகலாம்.
ஷஹ்மி இந்நடைப்பயணத்தில் தனது ஊரான பேருவளைப் பிராந்தியப் பேச்சு வழக்கையும் ஊரூராக எடுத்துச் செல்வது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும். அவர் செல்கின்ற இடங்களிலெல்லாம் பேருவளைத் தமிழ் உச்சரிப்பைப் பிரயோகிப்பதனால் அது அவ்வவ்விட மக்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுப்பதுடன் மொழியையும் (பாசை) வளமடையச் செய்கின்றது. அதுமட்டுமல்லாது அவர் தான் சார்ந்த கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் தன்னோடு கொண்டு செல்வதால் தன் சமூகம் பற்றிய புரிந்துணர்வையும் பிரதிபலிக்கச் செய்கின்றார்.
மேலும் இப்பணத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் பயணத்தில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் ஆபத்தெனக் கருதப்படும் காட்டுப்புறப் பாதைகளிலும் தன்னை எந்தவொரு வாகனம் பின்தொடர்வதையோ அல்லது துணைக்கு யாராவது வருவதையோ விரும்பாத அவர் அவ்வாறான இடங்களில் தனியாகவே பயணத்தை மேற்கொள்கிறார். அதே போன்றே பயண அனுபவங்களை காணொளியாகப் பதிவு செய்து தனது YouTube தளமான "Show me the view" என்ற பக்கத்தில் பதிவேற்றியும் வருகிறார்.
ஷஹ்மியின் இப்பயணத்திற்கு கிழக்கு மாகாணத்தில் கிடைத்த மிப் பெரும் வரவேற்பு அவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. வரும் நாட்களில் அவர் உங்கள் ஊரையும் கடந்து செல்லும் போது அதே போன்ற உற்சாகத்தை உங்களிடமிருந்து எதிர்பார்த்த வண்ணம் தனது நடைப் பயணத்தைத் தொடர்கிறார். அவரது YouTube தளமான "Show me the view" பக்கத்தை Subscribe செய்வதனூடாகவும் நீங்கள் அவரது முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடிவதுடன், எதிர்கால முயற்சிகளுக்கு ஒத்துழைபை வழங்க முடியும்.
ஷஹ்மியின் இந் நடைப் பபயணத்தில் அவருக்கு உறுதுணையாக "SYMI HOLDING" நிறுவனம் பின்னாலிருந்து பணியாற்றி வருகின்றது. இவர்களது பூரண அனுசரணையிலேயே இச்சாதனைப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன் ஷா அல்லாஹ் இன்னும் சொற்ப நாட்களில் ஷஹ்மி என்ற இளைஞர் இலங்கை வரலாற்றில் தனது பெயரைப் பதிப்பார். அதற்கான மன உறுதியையும் தேகாரோக்கியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக. அவர் இதுபோன்று இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த அவரை வாழ்த்துகிறேன்.
Fasly Hameed
Source:https://www.facebook.com/kaviththolan
No comments:
Post a Comment