தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

08 September 2017

கொழுத்தப்படுவதும், கொல்லப்படுவதும்: மியான்மரில் ரோஹிங்கியா

 ‘அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவரின் கீழ் அமைதியாக நிகழ்த்தப்படும் ஓர் இனப்படுகொலை’.









“எங்கள் வீடு ராணுவத்தினரால் கொழுத்தப்பட்டது. நாங்கள் தப்பிக்க மலையை நோக்கி ஓடினோம். ஆனால் எனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டனர். நான் எனது மற்ற குழந்தைகளுடன் இங்கு தப்பி வந்திருக்கிறேன்” என்னும் இக்கதறல், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ஜமால் ஹூசைன் எனும் ரோஹிங்கியா அகதியினுடையது.


                                                   படம்: tribunalonmyanmar

செயற்கைக் கோள் புகைப்படங்களையும், ரோஹிங்கியா மக்களின் வாக்குமூலங்களையும் ஆராய்ந்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், “சேயின் கர் லீ(Chein Khar Li) என்ற ரோஹிங்கியா முஸ்லீம் கிராமத்திலிருந்த 700 கட்டிடங்கள் தீக்கரையாகி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வடக்கு ரக்ஹைனில் நடந்துக்கொண்டிருக்கும் அழிவு நினைத்துப் பார்ப்பதை விட மோசமாக இருக்கலாம்”எனத் தெரிவித்துள்ளது.



முஸ்லீம் கிராமத்திலிருந்த 700 கட்டிடங்கள் தீக்கரையாகி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

2,625 வீடுகளைத் தீவிரவாதிகள் கொழுத்தியுள்ளதாக மியான்மரின் அரச ஊடகமான குளோபல் நியூ லைட் கணக்குச் சொல்லியுள்ளது.

மூவாயிரம் பேரில் ஒருவராக நடந்தே பங்களாதேஷ் வந்தடைந்த மற்றொரு ரோஹிங்கியா அகதி ஜலால்அகமது,“எங்கள் கிராமத்திற்குள் 200 பேரோடு நுழைந்த ராணுவத்தினர், எங்கள் கிராமத்திலிருந்த அத்தனை வீடுகளையும் கொழுத்தினார்கள்” என்கிறார்.

மியான்மரில் ரோஹிங்கியாக்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்ஹைனில் ஆயுதக்கிளிர்ச்சியாளர்களின் தாக்குதலைக் காரணமாக வைத்துத் தற்போது மியான்மர் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களும் முற்றுகைகளும் ஹூசைன், ஜமாலைப் போன்று இதுவரை 146,000 ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பங்களாதேஷில் தஞ்சமடைய வைத்துள்ளது. இத்தஞ்சப்பட்டியலில் இம்முறை 400க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இந்துக்கள் சேர்ந்துள்ளனர். மியான்மரையும், பங்களாதேஷையும் பிரிக்கும் நாப் நதியில் மூழ்கி 19 குழந்தைகள், 18 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 46 ரோஹிங்கியாக்கள் இறந்துள்ளனர்.


மியான்மரையும், பங்களாதேஷையும் பிரிக்கும் நாப் நதியில் மூழ்கி 19 குழந்தைகள், 18 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 46 ரோஹிங்கியாக்கள் இறந்துள்ளனர். படம்: nytimes

இந்த வகையில் 1978, 1991-92, 2012, 2016 காலக்கட்டத்தைப் போல மீண்டும் கடந்த ஆகஸ்ட் 25 முதல் ரோஹிங்கிய இன மக்கள் ஓர் அதிபயங்கரக் கொலைக்காலத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ரோஹிங்கியாக்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

1982 மியான்மர்(பர்மா) குடியுரிமைச்சட்டத்தின் படி, தங்களுடைய முன்னோர்கள் 1823 க்கு முன்பே மியான்மரில் வசித்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்கினால் மட்டுமே முழுமையான குடியுரிமை எனப்படுகிறது. இது ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆண்டைக் குறிக்கின்றது. நூறாண்டுகளுக்கு முந்தைய ஆதாரம், நடைமுறையில் சாத்தியமற்றது என இச்சட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. 1824 முதல் 1885 வரை நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியபோர்களுக்குப் பின்னர், பர்மா எனும் மியான்மர் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணமாக மாற்றப்பட்டது.

12 ஆம் நூற்றாண்டு முதல் ரோஹிங்கியா மக்கள் ரக்ஹைனில் வாழ்வதாக ரோஹிங்கியா அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலக வரைப்படத்தில் நவீனக்கால பர்மா இடம்பெறுவதற்குப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னதாகவே ரோஹிங்கியா இனம் அராகானில்(ரக்ஹைன்) வாழ்ந்து வருவதாக அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் ஆர்மி என்ற ரோஹிங்கியா ஆயுதக் கிளிர்ச்சிக் குழுத் தெரிவிக்கின்றது.


                                                            படம் : indiatoday

ஆங்கிலேய ஆட்சியில் பங்களாதேஷிலிருந்து (பெங்கால் மாகாணம்) பர்மாவிற்கு விவசாயத் தொழிலாளர்களாகவும் ரோஹிங்கியாக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அன்றையைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பர்மா, அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக ஆளப்பட்டதால் இது உள்நாட்டில் நடந்த இடப்பெயர்வாகவே கருதப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.

இதை அத்தனையும் நிராகரிக்கும் மியான்மர், ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய வந்தேறிகள் மட்டுமே என வாதிடுகிறது. இதன் அடிப்படையில் ரோஹிங்கியா இன மக்களுக்கு மியான்மர் குடியுரிமை மறுக்கப்படுகின்றது. மற்றொரு வகையில் இச்சட்டம் ரோஹிங்கியா மக்கள் மீதானப் புத்த பெரும்பான்மையினரின் வன்முறைக்குச் சட்டவடிவிலான ஆதரவை வழங்குகிறது. ரக்ஹைன், பயங்கரங்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டதற்குப் பின்னால் இச்சட்டத்திற்கு மிக முக்கியப் பங்குண்டு. ரக்ஹைனில் உள்ள ரோஹிங்கியா மக்கள் மியான்மரின் பிற பகுதிகளுக்குச் செல்வது சாத்தியமற்ற ஒன்றாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் அனைத்தும் அவர்களுக்குச் சட்டரீதியாகவே அங்கு மறுக்கப்படுகின்றன. மியான்மரில் உள்ள 11 லட்சம் ரோஹிங்கியாக்களில் பெருமளவிலானோர் முஸ்லீம்களாகவும் சிறு எண்ணிக்கையில் இந்துக்களாகவும் உள்ளனர். உலகிலேயே அதிகம் துன்பப்படும் மக்களில் முதன்மையானவர்களாகக் குறிப்பிடப்படும் ரோஹிங்கியா இன மக்கள் நாடற்றவர்களாக அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.


உலகிலேயே அதிகம் துன்பப்படும் மக்களில் முதன்மையானவர்களாகக் குறிப்பிடப்படும் ரோஹிங்கியா இன மக்கள் நாடற்றவர்களாக அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.
படம்: opensocietyfoundations

கிளிர்ச்சிக் குழுவின் தாக்குதல்

மியான்மரில் ரோஹிங்கியாக்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்ஹைன் பகுதியில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட காவல் மற்றும் ராணுவ நிலையங்கள் மீது கடந்த ஆகஸ்ட் 25 அன்று அராக்கன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி திடீர் தாக்குதலினை நடத்தியது. இதில் 77 ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஏழு மியான்மர் ராணுவத்தினர் பலியாகியதாக மியான்மர் அரசு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக ரோஹிங்கியா வாழும் கிராமங்கள் முற்றுகை என்ற போர்வைக்குள் ராணுவத்தினராலும் புத்த பேரினவாதிகளாலும் தீக்கரையாக்கப்படுவதாக அங்கிருந்த தப்பி வந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மியான்மர் ராணுவம் வெளியிட்டுள்ள குறிப்பில், ஐந்து நாள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 370 பெங்காலில் தீவிரவாதிகள், 15 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெங்காலித் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்’ என அயலவர்கள் என்ற அடையாளத்தைச் சல்வேஷன் ஆர்மிக்கு சூட்டியுள்ளது மியான்மர் அரசு. கூடுதலாகச் சர்வதேச முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளுடன் சல்வேசன் ஆர்மிக்குத் தொடர்புள்ளதாக உலகிற்கு எச்சரிக்கைச் செய்தி விடுத்துள்ளது.

கடந்த மார்ச் 2017 யில் சல்வேசன் ஆர்மி என்ற ரோஹிங்கியா ஆயுதக் கிளிர்ச்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பர்மிய ஆட்சியாளர்களும் 1970 க்குப் பின் பர்மிய அரசாங்கங்களும் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராகப் படிபடியாக இனப்படுகொலையையும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களும் நிகழ்த்துகின்றன. மியான்மர் அரசு சொல்வது போல, எங்களுக்கு உலகிலுள்ள எந்தத் தீவிரவாத அமைப்புகளோடும் தொடர்பில்லை. மதரீதியாகவோ, இனரீதியாகவோ எந்த மக்கள் மீதும் எங்கள் தாக்குதல் நடத்துப்படுவதில்லை. சர்வதேச விதிகளின் படி எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை எங்களை ஒடுக்கும் பர்மிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் போரிடுவோம்” எனும் இக்கிளர்ச்சிக்குழு ரோஹிங்கியா மக்களுக்கான அங்கீகாரத்தை மியான்மர் அரசு அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

மியான்மரிலிருந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா குடும்பத்தில் பிறந்த அதா உல்லா(Ata Ullah), இக்கிளிர்ச்சிக் குழுவின் தலைவராக அறியப்படுகிறார். சவுதி அரேபியாவில் கல்விக்கற்ற அதா உல்லா அங்கு இஸ்லாமிய மதத்தலைவராகவும் இருந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு ரக்ஹைனுக்கு வந்தவர், நம்பிக்கை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். பின் அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் ஆர்மி என்ற கிளிர்ச்சிக் குழுவாக மாற்றப்பட்ட இவ்வியக்கம் அக்டோபர் 2016 யில் மியான்மர் காவல் மற்றும் ராணுவ அரண்கள் முதல் தாக்குதலினை நடத்தியது.

கொலைகளுக்குத் துணை நிற்கும் ஆங் சான் சூகி

மியான்மரின் ராணுவ ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தைப் பேசியவரும், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஆங் சூன் சூகி இன்று ராணுவத்தின் இனவாத/மதவாதச் செயலை ஆதரிக்கும் அரசமுகமாக உருவெடுத்திருக்கிறார். ஏனெனில் அவர் இன்று மியான்மரின் நடைமுறை தலைவராக உள்ளார். அன்றைய ராணுவ ஆட்சியில் இனவாத/மதவாதக் குகைக்குள் கிடந்த மியான்மர், இன்றைய ஜனநாயக ஆட்சியில் ஆயுதக்கிளர்ச்சிக்குழுவை ஒடுக்குவதன் பெயரிலும் அக்குழுவிற்கு ‘ஜிகாதி’ அடையாளத்தைக் கொடுப்பதன் மூலமும் ரோஹிங்கியா மக்கள் மீது நேரடியான போரை இப்போதைய உலக ஒழுங்கின் கீழ் நியாப்படுத்தலாம் என ராஜதந்திர வேடமிட்டுள்ளது. அதன் சூத்திரதாரியாக இருக்கும் ஆங் சன் சூகி, ‘மனித உரிமைப் பிரச்னைகள் இல்லாத நாடு எது என்று காட்டுங்கள்’ எனப் பத்திரிகையாளர் அமைதிகாணக்  கூச்சலிட்டார்.


ஜனநாயகத்தைப் பேசியவரும், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஆங் சூன் சூகி இன்று ராணுவத்தின் இனவாத/மதவாதச் செயலை ஆதரிக்கும் அரசமுகமாக உருவெடுத்திருக்கிறார்.
படம்: theindependent

ஐ.நா.விற்கு அனுமதி மறுப்பு


கடந்த அக்டோபர் 2016 யில் எல்லைக் காவல் அரண்கள் மீது ஆயுதக் கிளிர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைக் காரணமாக வைத்து இதே போன்று ரோஹிங்கியா மக்களின் கிராமங்களுக்குள் புகுந்த மியான்மர் ராணுவத்தினர் அம்மக்களைச் சுட்டுக்கொல்லுதல், கத்தியில் வெட்டிக்கொல்லுதல், கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சூறையாடல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதில் ஈடுபட்டதாகப் பங்களாதேஷூக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குழுவின் அறிக்கை உறுதிச்செய்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் 75,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.


படம்: voanews

இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 2017 யில் மியான்மரில் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திக்கரிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழு அமைப்பதற்கான இத்தீர்மானத்திற்கு மியான்மர் எதிர்ப்புத் தெரிவித்தது. மியான்மரோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவும், சீனாவும் இத்தீர்மானத்தில் விலகி நின்றன. மியான்மர் ஜனநாயக அரசிற்கு மேலும் காலம் அவகாசம் தேவை என்றது இந்தியா. சீனாவோ, ஒரே இரவில் தீர்க்கக்கூடிய பிரச்னையல்ல இது என மியான்மருக்குத் துணைநின்றது.

‘ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் மியான்மரில் உள்ள பல்வேறு இனங்களுக்கிடையே பெரும் விரோதப் போக்கு உருவாகக்கூடும்’ என்றார் ஆங் சான் சூகி. இதுநாள் வரை ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான ஐ.நா. குழுவிற்கு மியான்மர் அரசாங்கம் விசா வழங்க மறுக்கிறது. ரக்ஹைனை சுதந்திரமாகப் பார்வையிடுவதற்கு ஐ.நா.விற்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் மியான்மர் அரசு தடை விதித்துள்ளது.

அதே சமயம் கடந்த ஆண்டு முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அனான் தலைமையில் ஓர் ஆணையத்தை ஆங் சான் சூகி நியமித்தார். ரக்ஹைனில் புத்த மதத்தவருக்கும், ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கும்  இடையே உள்ள நீண்டகாலப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளைக் கொடுப்பதற்கான ஆணையமாக இது அமைக்கப்பட்டிருந்தது. ஆயுதக் கிளர்ச்சிக்குழுவின் தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிக்கையை வெளியிட்ட கோபி அனான், “தீவிரவாத போக்கை மேலும் வளர்க்கக்கூடாது என மியான்மர் விரும்பினால் ரோஹிங்கியா சிறுபான்மையினர் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்” எனப் பரிந்துரைத்துள்ளார்.
படம்: Bernat Armangue

இந்த ஆணையம் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாகவோ, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவோ எந்தவித விரிவான விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

கோபி அனான் ஆணையத்தின் அறிக்கை வெளிவருவதைச் சீர்குலைக்கும் நோக்கில்  ரக்ஹைனில் ராணுவத்தினரைக்  குவித்து மியான்மர் ராணுவம் பதற்றத்தைத் தூண்ட முயற்சித்தது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் ரோஹிங்கியா கிராமங்களில் கொலைகளையும், சூறையாடல்களையும் ராணுவம் நடத்தியதைத் தொடர்ந்தே தற்காப்புத் தாக்குதலை நடத்தினோம்” எனத் தனது டீவிட்டர் பக்கம் மூலம் அராக்கன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருந்தது.

உலகெங்கும் அகதிகளாக…

1970 முதல் மியான்மரிலிருந்து வெளியேறத் தொடங்கிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இன்றைய எண்ணிக்கைகளின் அடிப்படையில்,

பங்களாதேஷ்- 5 லட்சம்+

பாகிஸ்தான்- 3.5 லட்சம்+

சவுதி அரேபியா- 2 லட்சம்+

மலேசியா- 50 ஆயிரம்+

இந்தியா- 40 ஆயிரம்+



படம்: newsweek

‘மனிதாபிமானப் பேரழிவு’ என வருந்தியுள்ள ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்டரஸ், இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளார். இந்தோனேசியா, மலேசியா, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு மியான்மருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘நாங்கள் உங்கள் கவலைகளில் கூட்டாளிகளாக இருக்கிறோம்’ என மியான்மருக்கு ஆதரவு நல்கியுள்ளார்.








Source: roar tamil






No comments:

Post a Comment