ஊர் செய்திகள்
date
26 August 2013
சிரிய இரசாயன தாக்குதல்: தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் ஆலோசனை
சிரிய இரசாயன தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகள் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் பராக் ஒபாமா தனது ஆலோசகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூடனும் நேற்று முன்தினம் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சிரியா தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்களும் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது பற்றி ஆலோசித்ததாக அந்த செய்திக் குறிப்பில் விபரிக்கப்படவில்லை. அதேபோன்று இந்த விடயத்தில் தீர்மானம் எட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் கால எல்லையை நிர்ணயித்ததா? என்பது பற்றியும் தெளிவுபடுத்தப் படவில்லை. ஆனால் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு ஒபாமா தீர்மானித்தால் பென்டகன் அதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செய லாளர் சக் ஹேகல் நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு தயாராக இருக்கும்படி ஜனாதிபதி ஒபாமா கோரினால் நாம் அனைத்து திடீர் முடிவுகளுக்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த வகையான தேர்வாக இருந்தாலும் நாம் அதற்கு தயாராகவே இருக்கிறோம். அதனை செயற்படுத்துவோம் என்று ஹேகல் வலியுறுத்தினார். எனினும் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் நடத்தப்பட்ட இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறு ஒபாமா கோரியுள்ளார். இந்த தாக்குதலில் சுமார் 1300 பேர் அளவில் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. “நட்பு நாடுகள், தாக்குதல் சம்பவத்தை நேரில்கண்ட ஆதாரங்கள் மற்றும் கொல்லப்பட்டோரது பிரேத பரிசோதனைகளை கொண்டு அமெரிக்க உளவு பிரிவு சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை திரட்டி வருகிறது" என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, சிரிய வெளியுறவு அமைச்சர் லபித் அல் முவல்லம்மை கடந்த வியாழக்கிழமை தொடர்புகொண்டு இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பகுதிகளில் ஆய்வு நடத்த ஐ. நா. நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார். “இந்த விடயத்தில் சிரிய அரசுக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதியை முடக்கிவைத்து தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, அங்கு சோதனை நடத்த உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என்று கெர்ரி வலியுறுத்தினார். இதனிடையே பிரிட்டன் பிரதமர் கெமரூனின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட தகவலில், சிரியாவில் இராசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு கடுமையாக பதிலளிக்க பிரிட்டன் பிரதமருக்கும், ஒபாமாவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை டமஸ்கஸ ¤க்கு அருகில் சிரிய அரசினால் தனது சொந்த மக்கள் மீதே நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர் என்று மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார். டேவிட் கெமரூன் இது தொடர்பில் கனடா பிரதமர் ஸ்டிபன் ஹாப்பருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் சிரியாவின் தற்போதைய நிலவரத்திற்கு சரியான பதிலடிகொடுக்க இரு தலைவர்களும் இணங்கியதாக கெமரூனின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியிருந்தால் அவர் சிகப்பு எல்லையை தாண்டிவிட்டதாக தொடர்ந்து எச்சரித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது சிரியாவுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 1980 களில் சதாம் ஹுஸைனின் ஈராக் அரசு, குர்திஷ் கிளர்ச்சியாளர் பகுதியில் ஈரான் படைகளுக்கு எதிராக நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாக வரலாற்றில் இடம்பிடிக்கும். எனினும் சிரிய அரசு இந்த தாக்குதலை நிராகரிப்பதோடு, கிளர்ச்சியாளர்கள் மீது அது பலி சுமத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக சக் ஹேகல் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கை அமெரிக்கா மத்திய கிழக்கில் மேலுமொரு நீண்ட யுத்தத்திற்கு முகம்கொடுக்கவேண்டியதாக இருக்கும் என ஒபாமா கூறியிருந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே ஐ. நா. துணைச் செயலாளர் ஏஞ்சலா கெய்ன் சனிக்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ. நா. நிபுணர்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் அவர் கோர உள்ளார். இதற்காக சிரியா அரசுப் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று பான் கீ மூன் ஏற்கெனவே வலியுறுத் தியுள்ளார்.
நன்றி:தினகரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment