தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

25 August 2013

ஷஹீதான தனது மகள் அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தை முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார்.

எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சர்வாதிகார இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தையும், இஃக்வானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பொதுச் செயலாளருமான முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார். தனியார் தொலைக்காட்சி சானலின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட எர்துகானிடம்,
அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார். முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு எழுதிய கடிதம்: நேசத்துக்குரிய என்னருமை மகளே! எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா
பெல்தாகியே! நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்ல வரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன். நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய். இந்த உம்மத்தை மீளெழுச்சி பெறச் செய்யும் வழிகளையும் அது தன் சொந்த நாகரீகத்தை மீளவும் புதிதாய் அடைவதற்கான புதிய
திசைகளையும் அமைதியாக தேடினாய். உன்னுடைய வயதை ஒத்தவர்கள் ஈடுபட்டிருந்த செயற்பாடுகளில் நீ ஈடுபடவில்லை. பாரம்பரிய
கல்வி முறை உமது அபிலாஷைகளை, உனது நலன்களை நிறைவேற்றாதபோதிலும், எப்போதும் நீதான் வகுப்பில் முதலாவதாக வந்தாய். உனது இந்த சொற்ப வாழ்நாளில் உனக்கருகே இருந்து அன்பை சுவாசிக்க முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கவும் உனக்கருகே இருந்து கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவும் எனது நேரம் இடம் தரவில்லை. கடைசியாக நாம் சாவதானமாக அமர்ந்திருந்த றாபியா மைதானத்தில் வைத்து
நீ என்னிடம் ஆதங்கப்பட்டாய்:
"எங்களுடன் இருந்து கொண்டே நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்." நாம் பரஸ்பரம் சந்தோஷமாயிருந்து அனுபவிப்பதற்கு இந்த வாழ்வு நமக்கு இடம் தராது என நான் சொன்னேன். நாம் அருகருகே இருந்து பரஸ்பரம் மகிழ்வுறும் இன்பம் சுவனத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தேன். நீ
ஷஹீதாவதற்கு இரு நாட்களுக்கு முன்பு உன்னை நான் மணமகள் ஆடையுடன் கனவில் கண்டேன். அதில் வர்ணிக்க முடியா அழகுடன் பளிச்சிட்டுக் கொண்டிருந்தாய். நீ எனக்கருகில் தூங்கிக் கொண்டிருந்த வேளை, "இந்த இரவு உனக்கு திருமண நாளா?" என்று நான் உன்னிடம் இரகசியமாகக் கேட்டேன். ஆனால், மாலையில் அல்ல, பகல் நேரத்திலே என்றுஎனக்கு நீ சுவனத்து திருமண
நாளை அறிவித்துவிட்டு விடை பெற்றுவிட்டாய். வியாழனன்று பகல் நேரத்தில் உன்னுடைய ஷஹாதத் செய்தி கேட்டபோது என் கனவின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். அல்லாஹ் உனது ஷஹாதத்தை ஏற்றுக் கொண்டான் என்ற நற்செய்தியையும் நீ சொல்லித்தான் சென்றாய். நாம் சத்தியத்திலே இருக்கிறோம். நமது எதிரி அசத்தியத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நீ மேலும் அதிகரித்து விட்டாய். உனது
கடைசிப் பிரியாவிடையில் இருக்கக் கிடைக்கவில்லை. அந்தப் பிரியாவிடையை எனது இரு கண்களால் பார்க்க கிடைக்கவில்லை. உனது நெற்றியில் கடைசி முத்தமொன்றை தரமுடியாமல் போய்விட்டது. உனக்கு இமாமத் செய்யும் கண்ணியத்தையும் பெற முடியவில்லை. இவை எல்லாம் என்னை வாட்டி வதைக்கிறது. அல்லாஹ் மீது ஆணையாக, என்னருமை மகளே என்னை தடுத்தது வாழ்க்கை மீதான அச்சமோ அநியாயக்காரனின் சிறை
பற்றிய பயமோ அல்ல. நீ எதற்காக உனது இன்னுயிரை நீத்தாயோ, அந்தத் தூதினை முழுமைப்படுத்தும் பேராசைதான் என்னைத் தடுத்தது. அந்தத் தூதுதான் நாம் வெற்றி பெறப் போகின்ற – இலக்குகளை நிறைவேற்றப்போகின்ற – புரட்சியை முழுமைப்படுத்தும் பணியாகும். நீ தலைநிமிர்ந்து முன்னோக்கி சென்ற நிலையிலே உனது உயிர் பிரிந்திருக்கிறது. ஏமாற்றத்தின் தோட்டாக்களை உன் மீது பாய்ச்சிய அந்தக்
கொடிய அநியாயக்கார்களை நீ மிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலே உன்னை ஷஹாதத் வந்தடைந்திருக்கிறது. இந்தக் கவலை எவ்வளவு உயர்ந்தது. எவ்வளவு தூய்மையான உள்ளம் இது. நீ அல்லாஹ்வை உண்மைப்படுத்தினாய், அல்லாஹ்வும் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஷஹாதத்தை கண்ணியப்படுத்துவதற்காக நமக்கு முன்னால் அவன் உன்னைத் தெரிவு செய்திருக்கிறான்.
கடைசியாக, பாசம் நிறைந்த என்னருமை மகளே! என் ஆசானே! நான் உனக்கு பிரியாவிடை சொல்ல வரவில்லை. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லவே வந்தேன். அன்பு நபியின் நீர்த்தடாகத்தில் அவர்களின் தோழர்களுடன் மிக விரைவில் நாம் நீரருந்துவோம். ஆட்சியதிகாரமும் வல்லமையும் கொண்டவனிடம் உண்மையின் சிம்மாசனத்தில் மிக விரைவில் உட்காருவோம். அந்த சந்திப்பில்தான் நமது பேராசைகள்
நிறைவேறப்போகின்றன. அன்றுதான் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பருக முடியும். அதன் பிறகு நமக்கு தாகமென்பதே கிடையாது. இவ்வாறு முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு உருக்கமாக எழுதியிருந்தார்.







thanks:Jaffna Muslim

No comments:

Post a Comment