தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

13 April 2012

சுமாத்ராவில் பாரிய பூகம்பம்



* தெய்வாதீனமாக இலங்கை தப்பியது; சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 மணிக்கு வாபஸ்
* பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சிதறியோட்டம்
* முப்படை, பொலிஸார், சுகாதார சேவைகள் தயார் நிலையில் இருந்தன.

மகேஸ்வரன் பிரசாத், லக்ஷ்மி பரசுராமன்
எம். எஸ். பாஹிம், ஸாதிக் ஷிஹான்
இலங்கையின் திருகோணமலைக் கரையிலிருந்து 1100 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவுக்கருகில் கடலில் நேற்று பிற்பகல் பூகம்பம் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது.



இந்த பூகம்பம் சுமத்ரா தீவின் பண்டா அச்சே நகரிலிருந்து 495 கிலோ மீற்றர்க ளுக்கு அப்பால் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் 8.6 ரிச்டர் அளவில் இடம் பெற்றதாக ஐக்கிய அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மத்திய நிலையம் அறிவித்தது.
இந்த பூகம்பத்தின் அதிர்வை இலங்கையின் பல பிரதேசங்களிலும் வாழும் மக்கள் அதேநேரத்தில் உணர்ந்தனர். உயரமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததும் கண்ணாடி பொருட்கள் உடைந்து நொறுங்கியதும் அவதானிக்கப்பட்டது.
அத்தோடு வீடுகளிலும், கட்டிடங்களிலும் வெடிப்புகளும் ஏற்பட்டன. இப்பூகம்பத்தையடுத்து இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலைதீவு அடங்கலாக28 நாடுகளுக்கு சுனாமி முன்னெச்சரிக்கையை பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் விடுத்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் பதற்றத்துடன் அவசர அவசரமாக பாதுகாப்பு மிக்க உயரமான இடங்களை நோக்கி கால்நடையாகவும், வாகனங்களிலும் சென்றனர்.
இதனால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், மக்களும் பெரும்அல்லோலகல்லோல நிலைக்கு முகம் கொடுத்ததையும் அவதானிக்க முடிந்தது. என்றாலும் இந்த பூகம்பத்தினால் சுனாமி பேரலை ஏற்படுமாயின் திருமலையை 4.10 மணிக்கும், கொழும்பை மாலை 4.50 மணிக்கும், யாழ்ப்பாணத்தை 6.00 மணிக்கும் வந்தடையுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
இதேவேளை இப்பூகம்பம் ஏற்பட்ட பிரதேசத்தில் சுமார் 7 பின்னதிர்வுகள் சொற்ப நேரகாலத்தில் ஏற்பட்டன. அவை யாவும் 5 ரிச்டர் அளவுக்கு மேல்பதிவாகியது. என்றாலும் மாலை 4.15மணியளவில் 8.2 ரிச்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மற்றொருபூகம்பம் பதிவானதாகவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இப்பூகம்பத்தினால் எந்தப் பகுதியிலும் சுனாமி பேரலை ஏற்படவில்லை. அதனால் இலங்கை, இந்தியா, மாலைதீவு உள்ளிட்ட நான்கு நாடுகள் தவிர்ந்த அனைத்து நாடுகளும் சுனாமி முன்னெச்சரிக்கையை ஓரிரு மணித்தியாலயங்களில் நீக்கிக் கொண்டன. என்றாலும் இலங்கை சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் நேற்று மாலை 6.30 மணியளவியல் சுனாமி முன்னெச்சரிகையை முழுமையாக நீக்குவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது.
உணரப்பட்ட நில அதிர்வு
நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பூமியதிர்ச்சி உணரப்பட்டது. கொழும்பு நகரின் பல பகுதிகளிலுள்ள அலுவலகங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கதிரைகள் மற்றும்மேசைகள் அசைவுற்றதுடன், மேல்மாடிகளிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றிய பலர் கட்டடங்களைவிட்டு வெளியேறியிருந்ததைக் காணக்கூடியதாக விருந்தது. ஏழு தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகிய போதிலும் இலங்கையில் இரண்டு முறைகள் உணரப்பட்டன.
தெற்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் வீடுகளிலிருந்த பலர் நில அதிர்வை உணர்ந்ததுடன், கிழக்கு மற்றும்தெற்கு மாகாணங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள், தளபாடங்கள் அசைந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். திருகோணமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வீடுகள் சிலவற்றில் சிறிய பாதிப்புக்கள் ஏற்பட்டதாகவும் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். மலையகம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பலவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டன.
பாதுகாப்பாக மக்கள் வெளியேற்றம்
நில அதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டதுடன் மக்கள் வீடுகளிலிருந்தும், கட்டடங்களிலிருந்தும் உடனுக்குடன் வெளியேறினர். இந்தவேளையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஊடாக சுனாமி முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்கள் அவசர அவசரமாகபாதுகாப்பான உயரமான இடங்களை நோக்கி ஓடினர். இதன் விளைவாக வீதிகளெங்கும் வாகன நெரிசல் ஏற்பட்டது டன் மக்கள் அல்லோல கல்லோல நிலைக்கு உள்ளானதைக் காணக்கூடியதாக விருந்தது. கரையோர பிரதேசமெங்கும் மக்கள் மத்தியில் பதற்றத்துடன் அச்சநிலையும் சூழ்ந்திருந்தது. அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சம்மாந்துறை, மத்திய முகாம், மல்வத்தை போன்ற மேட்டுநிலங்களை நோக்கி அவசரமாக வெளியேறினர். வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் இந்த அல்லோல கல்லோல நிலையைக் காணக்கூடியதாகவிருந்தது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், சுனாமிக்குப் பின்னர் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகளின் அடிப்படையிலும் நேற்று மக்கள் விழிப்புடன் செயற்பட்டதைக் காணமுடிந்தது. எனினும், மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்பட்டதுடன், கரையோரப் பகுதிகளிருந்த மக்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் வீட்டிலிருந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள், அங்கவீனர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துக் கொண்டு அவசரஅவசரமாக வெளியேறினர்.
தமிழ், சிங்கள புத்தாண்டின் நிமித்தம் இறுதிநேரப் பொருட் கொள்வனவுக்காக நகர்களுக்கு வந்திருந்த மக்கள் சுனாமி எச்சரிக்கை தொடர்பான செய்தியைக் கேள்வியுற்றதும் பொருட் கொள்வனவைக் கைவிட்டு அவசர அவசரமாக வீடுகளுக்கு ஓடியதையும் காணக்கூடியதாகவிருந்தது.
தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த முப்படையினர் மற்றும் பொலிஸார்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர நிலமைக்கு முகம்கொடுக்கக்கூடிய விதத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அரசாங்கம் உடனடி உத்தரவு பிறப்பித்தது.
இதற்கமைய நாட்டிலுள்ள சகல இராணுவ, கடற்படை, விமானப்படை தளங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முப்படையினரும் பொலிஸாரும் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் முப்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார். விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் கடற்படை யினரும், பொலிஸாரும் விசேட சேவை யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திலும் உடனடியாக மக்களுக்கு இராணுவம் தமிழ்மொழியில் முன்னெச்சரிக்கையை வழங்கியதுடன், மக்களை கரையோரப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்று வதற்கும் நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, கரையோரப் பகுதி மக்கள் பதற்றமடையாமலும், வீதிகளில் குவிந்துநிற்காமலும், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பிராந்திய பொலிஸ் நிலையங்கள் ஊடாக அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன. இதுதொடர்பில் விரைந்து செயற்படுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் வெளியேறிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். சகல விமானப்படைத் தளங்களிலும் விமானங்களும், ஹெலிக்கொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக விமானப்படைப் பேச்சாளர் குரூப் கப்டன் அன்று விஜயசூரியதெரிவித்தார்.
கரையோர பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
இதேநேரம், கரையோர பிரதேசங்களின் மின்விநியோகம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. கடந்த சுனாமி அனர்த்த அனுபவத்தின் அடிப்படையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது.
கரையோர ரயில் மற்றும் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்
கரையோரப் பகுதிகளுக்கான சகல ரயில் சேவைகளும் நேற்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. &8!கீuஞி-மாத்தறை, கொழும்பு-புத்தளத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இடைவழியில் நிறுத்தப்பட்ட ரயில் வண்டிகளில் பயணித்தவர்கள் மாற்று வழிகளில் பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டப்பணிப்பாளர் விஜயசமரசிங்க தெரிவித்தார்.
இதுதவிர கரையோரப் பகுதிக்கான இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் சேவைகள் நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணிநேரம் இடைநிறுத் தப்பட்டிருந்தன. இதனால் பிரதானபஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் பெருமளவு மக்கள் நிறைந்திருந்ததைக் காணக்கூடியதாக விருந்தது. ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் சில ரயில்கள் பாதியிலே நிறுத்தப்பட்ட தாகவும் அறிவிக்கப்படுகிறது. சுனாமி முன்னெச்சரிக்கையையடுத்து மக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குச் செல்ல முற்பட்டதால் காலி வீதி உள்ளிட்ட கரையோர பிரதேச பிரதானவீதிகளில் பெரும் வாகன நெரிசல்ஏற்பட்டது.
இந்நிலையில் தென்பகுதிக்குச் செல்லும் மக்களுக்காக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்த இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. காலி வரை மக்களுக்காகப் பாதுகாப்பாகச் செல்ல இதனூடாக அவகாசம் கிடைத்திருப்பதாக நெடுஞ்சாலை பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல கூறினார். கட்டணம் இன்றி சகல வாகனங்களுக்கும் இப்பாதை யின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து
அனர்த்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் உடனடியான சேவைகளை வழங்குவதற்காக கரையோரப் பகுதிகளிலுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டதுடன், விடுமுறையில் உள்ளவர்கள் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால நேற்றுப் பிற்பகல் அறிவித்தார். இந்தப் பிரதேசங்களிலுள்ள சகல வைத்தியசாலைகளும் அனைத்து சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு
தெற்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்குமான பாதுகாப்பு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பான அறிவுறுத்தல்களை சுற்றுலா அதிகாரசபை அனைத்து கரையோர ஹோட்டல்களுக்கும் வழங்கியிருந்தது.

Thanks thinakaran.lk

No comments:

Post a Comment