உக்கிர சண்டை நடக்கவில்லை
அங்கே உக்கிரமான துப்பாக்கி சண்டை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அங்கே ஒரே ஒருவர் தான் அமெரிக்க படையினரை எதிர்த்து துப்பாக்கியால் சுட்டதாகவும், அதுவும் கூட இவர்கள் அங்கே போய் இறங்கிய உடன் அது நடந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் ஆயுதங்கள் எவையும் இருக்கவில்லை என்பதையும் இப்போது இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அப்டாபாத்தில் தங்கியிருந்து சி.ஐ.ஏ. கண்காணித்தது
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அப்டாபாத்தில் இருந்த ஒரு ரகசிய வீட்டில் இருந்தபடி ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீட்டை பல நாட்களாக கண்காணித்து வந்தார்கள் என்று தற்போது அமெரிக்க ஊடக தகவல்கள் குறிப்புணர்த்துகின்றன.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், இது அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிளவை அது மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஒசாமா பின் லேடன் மீது தாங்கள் நடத்த இருக்கும் தாக்குதல் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு தாங்கள் முன்கூட்டி தகவல் தரவில்லை என்று கூறியிருந்த அமெரிக்க அதிகாரிகள் அப்படி தெரிவித்திருந்தால், அந்த தகவலை பாகிஸ்தானியர்கள் கசியவிட்டிருப்பார்கள் என்பதால் தான் அவர்களுக்கு முன்கூட்டி தகவல் தரவில்லை என்றும் காரணம் கூறியிருந்தார்கள்.
அமெரிக்கர்களின் இந்த கருத்தால் எரிச்சலடைந்த பாகிஸ்தான், இனிமேல் இப்படியானதொரு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யும் என்று எச்சரித்திருக்கிறது.
பாகிஸ்தான் உளவுத்துறையின் விபரங்கள்
இந்த பிரச்சினையில் பாகிஸ்தானின் உளவுத்துறை கொஞ்சம் ஜாக்கிரதையுடனே பேசி வருகிறது.
ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த வீட்டு வளாகம் குறித்து தாங்கள் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டதாகவும், ஆனால் அங்கே ஒசாமா பின் லேடன் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும் அந்த அமைப்பு கூறிவருகிறது.
ஆனால் இந்த கூற்று நம்பக்கூடியதா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அங்கே ஒசாமா பின் லேடன் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன் என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
யேமன் நாட்டில் பிறந்ததாக கூறப்படும் ஒசாமா பின் லேடனின் மனைவி தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அந்த வீட்டில் தான் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாகவும், இந்த கால கட்டத்தில் அந்த வீட்டின் மேல் மாடியை தாண்டி தான் வேறு எங்கும் செல்லவில்லை என்று அவர் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
"புதிய தாக்குதலுக்கு ஒசாமா திட்டமிட்டிருந்தார்!"
இதற்கிடையே, இந்த வீட்டிலிருந்து அமெரிக்கர்களால் எடுத்துச்செல்லப்பட்ட தகவல்களின்படி அமெரிக்க ரயில் சேவைகள் மீது அல்-கயீதா தாக்குதல் நடத்த பரிசீலித்து வந்ததை குறிப்புணர்த்துவதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான திட்டமிடல் எந்த அளவுக்கு நடந்திருந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.
நன்றி BBC தமிழோசை
No comments:
Post a Comment