நம் கல்வி முறையில், எழுத்துத் தேர்வுக்கே முக்கியத்துவம். ஆனால், டிஸ்லெக்சியா குழந்தைகள், படிக்கவும் எழுதவும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களால் தேர்வுகளைச் சரியாகக் கையாள முடியாது. இப்படி மாணவர்களின் படிப்பையே ஆட்டுவிக்கும் டிஸ்லெக்சியாவை எதிர்கொள்வது பற்றிச் சொல்கிறார், குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர், எஸ்.சுப்ரமணியன்.
“கற்றலில் ஏற்படும் குறைபாடே, 'டிஸ்லெக்சியா'. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிரமப்படுவார்கள். புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. உதாரணமாக, 'walk' என்கிற வார்த்தையைச் சொன்னால், அதற்கான அர்த்தத்தை, ஸ்பெல்லிங்கை உடனே சொல்வார்கள். அதே 'walk' வார்த்தையை எழுதிக் காண்பித்து கேட்டால், அவர்களால் படிக்க முடியாது. அதற்காக, படிக்கத் தெரியாது என்று அர்த்தமில்லை. ஆங்கில எழுத்துக்களோ, தமிழ் எழுத்துக்களோ நன்றாகவே தெரியும். அந்த எழுத்துக்களைப் படித்து உள்வாங்கும் ரெஸ்பான்ஸை அவர்களால் கொடுக்கமுடியாது.
குறிப்பாக, டிஸ்லெக்சியா குழந்தைகள், தேர்வில் குறைவாக மதிப்பெண் வாங்கியிருப்பார்கள். அந்தப் பேப்பரில் எதுவுமே எழுத மாட்டார்கள். அதே குழந்தையிடம், கேள்வித்தாளை வாசித்துக் கேட்டால், அதற்கான பதில்களைச் சரியாகச் சொல்வார்கள். இதுதான் 'டிஸ்லெக்சியா'. இந்த முக்கியப் பிரச்னையைத் தவிர, வேறு சில பிரச்னைகளும் இருக்கலாம். கணக்குப் போடுவதில் இந்தக் குழந்தைகள் கொஞ்சம் தடுமாறலாம். அதாவது, 6 என்பதற்கு 9 போடுவது என நிறையக் குழப்பம் இருக்கும். வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கை சரியாகச் சொல்ல முடியாமல் தடுமாறுவாங்க. தெளிவான ஹேண்ட் ரைட்டிங் வராமல் கஷ்டப்படுவார்கள். இதுமாதிரியான கூடுதல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் சிரமப்படுவார்கள்.
எந்த வயதுள்ள குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா வரும் என நிறையப் பெற்றோருக்குச் சந்தேகம் இருக்கும். ஒரு குழந்தை, இரண்டரை வயதில் இருக்கும்போது, எழுத்துகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். அப்போதே அந்தக் குழந்தைக்கு பிரச்னை இருப்பதை ஓரளவுக்குக் கண்டுபிடிக்க முடியும். அவர்கள், அச்சில் இருக்கும் எழுத்துகளை தொடர்புப்படுத்த ரொம்பவே கஷ்டப்படுவார்கள். பள்ளியில் டீச்சர் ஒரு வார்த்தையை எழுதி, இது என்ன எனக் கேட்டால் எழுத்துகள் பற்றிய அறிவு இருந்தாலும், அந்தக் குழந்தையால் வார்த்தையாகச் சொல்ல முடியாது. அதில் இருக்கும் எழுத்துகளை தனித்தனியா எப்படி உச்சரிக்கணும் எனக் கேட்டாலும் அந்தக் குழந்தை திணறும். அதே குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், புத்தகத்தில் இருப்பதைப் படிக்கவும் சிரமப்படும். குழந்தையின் இதுபோன்ற கஷ்டங்களை பெற்றோர் உன்னிப்பா கவனித்தாலே கண்டுபிடித்துவிடலாம். டிஸ்லெக்சியா என்பது குறிப்பிட்ட செயலைச் செய்யமுடியாமல் போகும் பிரச்னையே தவிர, நோய் கிடையாது. இதற்கு ஆரம்பமும் முடிவும் கிடையாது. ஒருவருக்கு டிஸ்லெக்சியா இருந்தால் ஆயுள் முழுக்க அந்தப் பிரச்னைகளைச் சந்திப்பார். ஆனால் அந்தப் பிரச்னையைச் சமாளித்து வெளியே வருவதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துவிட்டால், இயல்பான வாழ்க்கையை வாழலாம்.
சரி, இது மாதிரியான அறிகுறிகளால் உங்க குழந்தைக்கு டிஸ்லெக்சியா இருக்கலாம் எனச் சந்தேகப்படறீங்களா? மற்ற குழந்தைகளை ஒப்பீடு செய்யும்போது, உங்க குழந்தை படிக்கச் சிரமப்படுகிறதா? உங்க குழந்தை வாசிக்க கஷ்டப்படுவதாக ஸ்கூல் டீச்சர் சொல்றாங்களா? உடனே பயமோ, பதட்டமோ அடையாதீங்க. ஒரே ஒரு கணிப்பில் நீங்களாகவே டிஸ்லெக்சியா என முடிவும் பண்ணாதீங்க. தொடர்ந்து குழந்தையைக் கண்காணியுங்க. அப்புறமும் சந்தேகம் இருந்தால், குழந்தை நல மருத்துவரை அணுகுங்கள். இதை, குழந்தை நல மருத்துவர், கிளினிக்கல் சைக்கலாஜிஸ்ட் அல்லது சைல்டு சைக்கியாட்ரிஸ்ட்டால் மட்டுமே துல்லியமா கண்டறிய முடியும். குழந்தைக்கு டிஸ்லெக்சியா என உறுதியானால், ஸ்பெஷல் எஜுக்கேட்டர்ஸ் உதவியோடு அதிலிருந்து மீண்டுவருவதற்கான வழிகளைக் குழந்தை நல மருத்துவர்கள் சொல்வார்கள்.
உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்சியா என டாக்டர்கள் சொல்லிவிட்டால், குழந்தையின் எதிர்காலமே போச்சு என முடிவுப் பண்ணாதீங்க. இது குறிப்பிட்ட திறன் சார்ந்த பிரச்னையே தவிர, குழந்தையின் அறிவுத்திறனை எந்த வகையிலும் பாதிக்காது. அவர்கள் எதிர்காலத்துக்கும் பாதிப்பும் இருக்காது. இந்தக் காலத்தில் டிஸ்லெக்சியா குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்த பயிற்சி அமைப்புகள் நிறைய இருக்கு. இங்கள்ள ஆசிரியர்கள் 'SPECIAL REMEDIAL EDUCATION' படித்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் கற்றுக்கொடுப்பதும் மாற்று வழியில் இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் IEP எனப்படும் Individualaised Education Program கொடுப்பதால், குழந்தையின் கற்கும் திறன் மேம்படும். என்னதான் ஸ்பெஷல் எஜுகேட்டர்கள் சொல்லிக்கொடுத்தாலும், அதை முறையா கிரகித்து கற்பதற்கு, அந்தக் குழந்தையின் குடும்பமும் சப்போர்ட்டா இருக்க வேண்டியது முக்கியம்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம்... 6 மற்றும் 9-க்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பது, b மற்றும் d-ஐ மாற்றிப் போடுவது போன்றவை இருந்தாலே, அது டிஸ்லெக்சியா என நிறையப் பெற்றோருக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தை இப்படி மாற்றி எழுதுவது என்பது, அந்த வயதுக்கான அறியாமையே தவிர, டிஸ்லெக்சியா கிடையாது. வளர வளரச் சரியாக எழுதுவார்கள். 10 வயதிலும் தொடர்ந்து எழுத்துக்களை, எண்களை மாற்றி எழுதினால், அது கவனிக்கவேண்டிய விஷயம்.
டிஸ்லெக்சியா பிரச்னை என்பது, உலகம் முழுக்கவே இருக்கு. சொல்லப்போனால், 'டிஸ்லெக்சியா' என்கிற வார்த்தையே தெரியாமல், மாற்று வழிகளைக் கண்டுபிடித்து முன்னேறியவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தாமஸ் ஆல்வா எடிசன், டாம் க்ரூஸ் இப்படிப் பல பிரபலங்களைச் சொல்லலாம். என்னையே எடுத்துக்கோங்க. நான் நல்லாப் பேசுவேன். ஆனால், எனக்கும் சின்ன வயதில் படிக்கவும் எழுதவும் பிரச்னை இருந்தது. கம்ப்யூட்டர் உதவியோடு நிறைய எழுதி எழுதிப் பழகி, என் குறைகளைச் சரிசெய்துகொண்டு என் துறையில் நல்ல நிலையில் இருக்கிறேன். அதனால், உங்க குழந்தைக்கு டிஸ்லெக்சியா என வருத்தப்பட்டு மூலையில் முடங்காமல், அதிலிருந்து மீட்டெடுக்கும் செயலில் இறங்குங்கள். காலம் ரொம்பவே மாறிவிட்டது. இந்த பிரச்னை உள்ள குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும் வழிகாட்டவும் நிறையப் பள்ளிகள் தயாராகிவிட்டன. பள்ளித் தேர்வுகளில் நிறைய மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விகள் வருகின்றன. இதுபோன்ற கேள்விகளை டிஸ்லெக்சியா மாணவர்கள் சுலபமாக எதிர்கொள்ளலாம். அதனால், கற்றல் குறைபாட்டைச் சரிசெய்துகொள்ளவும் முடியும்.
பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான். “வீட்டில் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கே. நல்லா வாய் பேசறே. எக்ஸாமில் மட்டும் பர்பார்ம் பண்றதில்லே. ஃப்ரெண்ட்ஸோடு நல்லா அரட்டை அடிக்கிறே, புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளைப் படிக்கச் சொன்னால் முழிக்கிறே. வேணும்னே பண்றே'' என்றெல்லாம் சொல்லி, உங்கள் குழந்தையை அடிக்கவோ, திட்டவோ செய்யாதீர்கள். ஏற்கனவே பிரச்னையில் இருக்கும் அந்தக் குழந்தைக்கு உங்களின் இந்தச் செயல்பாடு, கடும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும். அப்புறம், எவ்வளவு முயற்சி எடுத்தாலும் குழந்தையால் முழு மனதோடு ஒத்துழைக்க முடியாது'' என்றார் மருத்துவர் சுப்ரமணியன்.
குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா பிரச்னை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டவுடன், அவர்களை கனிவுடன் கையாண்டால், நிச்சயமா இதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்து சாதனையாளராக்க முடியும்.
டிஸ்லெக்சியா என்றால் என்ன?
டிஸ்லெக்சியா என்றால் என்ன?
இந்நிலையில், டிஸ்லெக்சியா என்றால் என்ன? அதை எப்படி கண்டுபிடிப்பது? போன்ற கேள்விகளுக்கும் அதற்கான தீர்வை நோக்கிய பாதையையும் விவரிக்கிறது இந்த காணொளி.
Source:vikadan
Bbc tamil
No comments:
Post a Comment