அலெப்போ ஒரு விடுதலை தேசம் வீழ்ந்து விட்டது. மரண ஓலங்கள் காற்றில் கரைகின்றன. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள அலெப்போ முழுவதும் பீரங்கிகளின் புகை மூட்டங்கள். இடிபாடுகளுக்கிடையில் அமைதியாக உறங்கும் ஆத்மாக்கள். சுருண்டு விழும் பிஞ்சுகள். அபயக் குரலெழுப்பும் அப்பாவிப் பெண்கள்.
இப்படி ஒரு சோகக் காட்சி அரங்கேறும் தருணத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது. “இது டுவிட்டர் பக்கத்தில் நான் பதிவேற்றும் இறுதி ஒளிப்பதிவு.”
“உலகமே எங்களைத் திரும்பிப் பாருங்கள். போரை நிறுத்தச் சொல்லுங்கள். எறிகணைகளைத் தடுங்கள். நாம் வாழ விரும்புகின்றோம். வாழ்க்கையை விரும்புகின்றோம். இங்கே எல்லோரும் கொல்லப்படுகிறார்கள். எந்த நேரத்திலும் எங்களை மரணம் காவுகொள்ளலாம்” என எரிந்துகொண்டிருக்கும் அலெப்போவின் நிலையை உலகப் பார்வைக்குக் கொண்டு வருகிறார் லீனா ஷாமி.
இம்முறை ஜனநாயகத்தை வீழ்த்தும் போரில் வெற்றி பெற்றது ரஷ்யாவும் அதன் கூட்டணிகளுமே. நவீன ஸார் என தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் விளாடிமிர் புட்டினின் படையினர் அலெப்போ படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். வான் வழியாகவும் தரை வழியாகவும் அலெப்போவை அடிபணிய வைப்பதில் புட்டினின் கொலைவெறிப் படை இழைத்த கொடுமைகள் தெளிவான போர்க் குற்றங்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால், வல்லரசுகள் இழைக்கும் போர்க் குற்றங்களுக்குத் தண்டனை இல்லை என்பதே எழுதப்படாத சட்டமாகும். இது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நன்கு பொருந்தும். ரஷ்யச் செங்கரடிகள் மட்டுமன்றி, நான்கு தசாப்தங்களாக சிரியாவை அடக்கி ஆண்டு வரும் அலவி ஷீஆ அதிகார வர்க்கமும் லெபனானின் ஹிஸ்புஷ் ஷைத்தான்களும், ஈராக்கின் நவீன மங்கோலியர்களும் ஈரானின் பழைய நெருப்பு வணங்கிகளும் இன்றைய கொலைக்களத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
2011 இல் அறபுலகில் எகிறி எழுந்த வசந்தத்தின் எதிரொலி அதே ஆண்டில் சிரியாவிலும் கேட்டது. நான்கு தசாப்த அரசியல் அராஜகங்களை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கினர். அதிகாரக் கட்டிலை அசைத்துப் பார்க்கும் போராட்டம் ஆயுதப் பரிமாணம் பெற்றது. ஆனால், அது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அளவுக்கு பலப்படுத்தப்படவில்லை. அறபு நாடுகள் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கவில்லை. வல்லரசுகள் சிரியாவில் தமக்கு வாய்ப்பில்லை என்பதனால் கிளர்ச்சியாளர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து நாடுகளை கிளர்ச்சியாளர்கள் எதிர் கொண்டனர். ஒரு புறம் அமெரிக்காவுக்குச் சமாந்திரமான ரஷ்யப் படைப் பலம். இன்னொரு புறம் லெபனான் அரச படைகளை விட பலமான ஈரானின் கைக்கூலிகளான ஹிஸ்புல் லாஹ், ஈரான்-ஈராக்-சிரியா ஆகிய அரச படைகளை கிளர்ச்சியாளர்கள் ஐந்து ஆண்டுகள் தாக்குப் பிடித்தனர் என்பது உலக அதிசயம்தான்.
புரட்சியாளர்கள் எதனை வேண்டி நின்றார்கள்? மனித உரிமைகளை, ஜனநாயகத்தை, அரசியல் பன்மைத்து வத்தை, மூச்சுவிடும் சுதந்திரத்தை. ஆனால், அவர்கள் மீது குண்டு பொழியப்பட்டது. எறிகணைகள் வீசப்பட்டன. துப்பாக்கிகள் நீட்டப்பட்டன. ரவைகள் தீர்க்கப்பட்டன. அவர்கள் மட்டுமன்றி, அவர்களைச் சார்ந்திருந்த சுன்னி சமூகமும் அரச படையினரால் இலக்கு வைக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் சுன்னிப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். மக்கள் பட்டினியில் போடப்பட்டனர்.
குழந்தைகளின் உளவியலில் அதிர்ச்சி உருவாக்கப்பட்டது. திட்டமிட்டு உளவடுக்கள் உருவாக்கப்பட்டன. நவீன உலக வரலாற்றில் எங்கும் இல்லாதது போல் ஒரு நாட்டின் அரைப் பகுதி மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். கால்வாசிப் பேர் நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களின் தப்பியோட்டமே ஒரு பெரும் சோகக் கதை.
சிரியாவில் சுன்னி சமூகத்திற்கெதிரான ஈரானிய, ஈராக்கிய லெபனானிய சிரிய ஷீஆ அதிகார வர்க்கங்கள் இழைத்த கர்ண கொடூரங்களின் உச்சம் அலெப்போவில் தெரிகின்றது.
இன்று நடப்பதென்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 99 வீத நிலத்தை கிளர்சியாளர்களிடமிருந்து கைப்பற்றி விட்டதாக சிரிய இராணுவம் அறிவித்திருந்தது. 2 சதுர கி.மீ. பரப்பில் சுமார் இரண்டு இலட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். அவர் களை நோக்கி முன்னேறிவரும் அரச படையினர் கண்ணில் தெரிகின்ற அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர்.
இடிபாடுகளுக்கிடையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளைக் காப்பாற்றுவதா? நடுத்தெருவில் சுடப்பட்டு வீசிக்கிடக்கின்ற ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா? பக்கத்தில் பசியில் அழும் குழந்தைக்கு பால் கொடுப்பதா என்ற பரிதாப நிலைக்கு கிழக்கு அலப்போ மக்கள் ஆட்பட்டுள்ளனர். மிகுந்த திணறலான ஒரு கணத்தை அவர்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். உயிரைக் காப் பாற்றுவதற்கு அரச கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு அலெப்போவிற்குச் சென்றவர்கள் அங்கு கொல்லப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். கிழக்கு அலெப்போவிலுள்ள உறவினர்களுடனான அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவின் நிலைமை குறித்து ஆயிஷா எனும் பிரதேசவாசி பின்வருமாறு கூறுகிறார்.
சிரிய இராணுவம் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கின்றது. “அவர்கள் கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள்” எனும் மூன்று வார்த்தைகளே கொல்வதற்கான நியாயம். இங்கிருந்து எங்கும் அசைய முடிய வில்லை. மரணத்தை காத்திருந்து அடைய வேண்டிய அவலத்தை எதிர்கொண்டுள்ளோம். துப்பாக்கிகளின் சத்தம் இரவு பகலாய் கேட்ட வண்ணமுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று மரணமடைவதை விட இங்கிருந்து மரணத்தை எதிர்கொள்வது மேலானது.
மக்கள் இங்கிருந்து நகர்வதற்கு வீதிகளும் இல்லை. கட்டங்களின் இடிபாடுகளால் அவை நிரம்பி வழிகின்றன. கண்களுக்கு எட்டிய தூரம் முழுவதும் அழிவின் அடையாளங்களே தென்படுகின்றன. 2 இலட்சம் மக்கள் இங்கே சிக்கியுள்ளனர். அவர்கள் மீது ஒரு இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பல்முனைகளிலுமிருந்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. கிளர்ச்சியாளர்கள் இங்கிருந்து வெளியேறிய பின்னரும் மக்கள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றார் அவர்.
இதேவேளை, சிரிய அரச படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்து வருவதாக ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆயினும், அறிக்கை விடுவதற்கு மட்டுமே லாயக்கான அச் சபை இத்தனை கொடூரம் நடக்கையிலும் அமைதியாக இருக்கின்றது. ஈரான் இப்படுகொலைகளுக்குப் பின்னணியில் உள்ளதென்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.
அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிரிய அரச படையினர் ஆடும் கொலைத் தாண்டவத்தின் கண்சாட்சியாளர்களாக உள்ளனர். எஞ்சியிருக்கும் மக்களை வேட்டையாடுவதே சிரிய அரச படையின் ஒரே நோக்கம் என்கிறார் எல்லைகளைக் கடந்த மருத்துவக் கழகத்தின் செயற்பாட்டாளர் அபூ நஸ்ர்.
5 ஆண்டுகள் சிரிய மக்கள் மீது கொலைத் தாண்டவத்தைக் கட்ட விழ்த்த சிரிய அரச படையினரும் அதன் கூட்டணியினரும் தற்போது இறுதி வேட்டையில் இறங்கியுள்ளனர். உலகமே பார்த்துக் கொண்டிருக்க இத் தனை உயிர்கள் அழிக்கப்படுகின்றன.
அறபு நாடுகள் உள்ளிட்டு ஐ.நா. சபை வரை அனைவரும் ஒரு கேவலமான மௌனத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கேனும் எந்தத் திட்டமும் உலக நாடுகளிடமில்லை. ரயில் விபத்தில் இறந்தவர்களுக்குக் கூட இரங்கல் செய்தியனுப்பும் உலகத் தலைவர்கள் இத்தனை மக்கள் பட்டப் பகலில் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுவதை உணர்ச்சியின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களுக்கு இன்னும் உணவோ, மருந்துகளோ சென்று சேர்வதற்கான வாயில்களெல்லாம் அடைக்கப்பட்டே உள்ளன. மருத்துவசாலைகளும் எறி கணைத் தாக்குதல்களில் படுகாயம டைந்துள்ளதால், காயப்பட்ட மனிதர் களுக்கு ஒத்தடம் தரும் நிலையில் அவை இல்லை. மருந்துப் பொருட்க ளும் கணிசமாகத் தீர்ந்து விட்டது என் கிறார்கள் வைத்தியர்கள்.
வீதிகள் முழுவதும் மரணமே மக்களைக் காத்திருக்கின்றது. நிலமை இன்னும் மோசமடையலாம் என அஞ்சப்படுகின்றது. துப்பாக்கிகளால் மட்டு மன்றி, பட்டினியாலும் மக்கள் இறக்கும் ஆபத்து உள்ளது. மனித உரிமைப் பேரவைகள் காத்து வரும் கள்ள மௌனத்தின் அர்த்தமென்ன? அறபு நாடுகள் கையை விரித்து தமது கையாலாகாத் தனத்தைக் காட்டிவிட்டன. கிளர்ச்சியாளர்களிடமிருந்து அலெப்போ மீட்கப் பட்டுவிட்டதாய் அஸதும் அவனது அராஜகக் கூட்டணியும் எக்களிக்கின்றன.
ஆம் அலெப்போ வீழ்ந்து விட்டது. ஆனால், சத்தியம் வீழவில்லை. அசத்தியம் அதன் உச்சத்தில் ஒளிர்ந்தாலும் அது அணைவது நிச்சயம். அலெப்போ வீழ்ந்தது. ஆனால், விடுதலை வேட்கை வீழவில்லை. உண்மைக்காகப் போராடுகின்றவர்களும் வீழவில்லை.
வரலாறு நிலையான வெற்றியை யாருக்கென்று தீர்மானிக்கவே போகின்றது. அதுவரைக்கும் நம்பிக்கையே நமது பெரும் ஆயுதமாய் இருக்கட்டும்.
அராஜகத்தையும்
அடக்குமுறையையும்
எதிர்ப்போம் என்றவர்களுக்கு
என்ன கதி நேரும் என்பதை
உலகுச் சொல்லப் போகின்றான் அஸத்
ஆம், அவன் சொல்லி விட்டான்.
மண்டையோடுகள்,
மயான பூமிகள் மீதேனும்
எங்கள் மறுகாலனியத்தை நிறுவுவோம்
எனும் செய்தியை உலகிற்குச்
சொல்லப் போகின்றான் புட்டின்.
ஆம், அவன் சொல்லி விட்டான்.
இறைவனின் கட்சியென்று
நாமம் சூட்டிக் கொண்டாலும்
அலறித் துடிக்கும் குழந்தைகளின்
அழுகைக் குரலுக்கோ
கதறக் கதறக் குதறப்படும்
பெண்களின் அபயக் குரலுக்கோ
எங்கள் செவிட்டுச் செவிகள்
சாயாது எனும் செய்தியை உலகிற்குச்
சொல்லப் போகின்றது ஹிஸ்புல்லாஹ்
ஆம், அது சொல்லிவிட்டது.
எந்தப் பேரவலத்தையும் கைகட்டி,
வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதே
எமது தலைவிதி என்று
உலகிற்குச் சொல்லப் போகின்றார்கள்
அறபுப் பாலை நிலத்தின் குள்ளநரிகள்
ஆம், அவர்களும் சொல்லிவிட்டார்கள்.
இதற்கு மேலும் எஞ்சியிருப்பது என்ன?
சிரியாவின் மயான பூமியையும்
என் சிறிய வார்த்தைகளையும் தவிர
சிரியர்களே!
அலெப்போவின் அப்பாவிக் குழந்தைகளே!
என்னை மன்னிக்க வேண்டும்
என் எளிய சொற்களால்
உங்களுக்கோர் இரங்கல் உரை
எழுதியமைக்காக.
நன்றி:மீள்பார்வை
No comments:
Post a Comment