ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட குழந்கைளில் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆஸ்த்மா மருந்து கொடுக்கப்பட்டால், அந்த மருந்து அவர்கள் வளர்ந்து பெரியவராகும்போது அவர்களின் உடல் உயரத்தை குறைக்கிறது என பூர்வாங்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
பின்லாந்தை சேர்ந்த 12000 குழந்தைகள் மத்தியில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் தொடந்து கொடுக்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலத்தில் உயரம் குன்றியிருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இந்த மருந்துகள் குழந்தைகளின் உயரத்தை ஒடுக்கும் என்று குறிப்புணர்த்தியிருந்தது.
பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு ஸ்டீரொய்ட்டு மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் ஆஸ்த்மா நோயின் அறிகுறிகளையும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சிறு குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் மட்டுப்படுத்துகிறது என்றும் ஆஸ்த்மா யு கே என்ற ஆஸ்த்மாவுக்கான அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள சிறுவர்களில் 11 பேரில் ஒருவர் ஆஸ்த்மாவால் அவதியுறுவதாகவும்; இதுவே சிறுவர்கள் மத்தியில் உள்ள பொதுவான நாள்பட்ட சுகயீனமாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.