இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது.
300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமச்சீர் உணவு, இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் என பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய சிறுநீரகவியல் கூட்டமைப்பு கூட்டத்தில், நாகசாகி பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை சமர்பித்தனர்.
மூன்று மாதங்களாக அதிக உப்பை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் மற்றும் உறக்க கோளாறு இருக்கும் நோயாளிகளிடம் அவர்களின் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி பின் அவர்களை கண்கானித்தனர்
அதன்பிறகு சராசரியாக, இரண்டு முறை சிறுநீர் கழிப்பது, ஒரு முறையாக குறைந்தது.
இந்த மாற்றம், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்தது.
சிறுநீர் கழிக்கச் செய்யும் உணர்வு
***********************************
மாறாக, 98 பேர், வழக்கத்தை காட்டிலும் அதிகப்படியான உப்பை உட்கொண்டார்கள். எனவே இரவு நேரத்தில் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தது
அதிக அளவில் உப்பு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவை ஆனால் இந்த விளைவு முதியவர்களுக்கு உதவும் என இந்த அய்வை மேற்கொள்ளும் பேராசிரியர் மாட்சூ டாமஹீரோ தெரிவித்தார்.
"எளிய உணவுமுறை மாற்றத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்க்கை தரத்தை மாற்ற இயலும் என்பதை இந்த ஆய்வு சாத்தியமாக்கியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நாக்டுரிய நிபுணர் பேராசிரியர் மார்கஸ் டிரேக், பொதுவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு காரணமல்ல என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொள்ளும் குடிநீரின் அளவு, சிறுநீர்ப்பை மற்றும் ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பிகளின் பிரச்சனைகள் ஆகியவற்றில் மருத்துவர்கள் கவனம் செலுத்துவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த பிரச்சனைக்கான அனைத்து காரணத்தையும் சரி செய்வது எப்படி என்ற பயனுள்ள ஆய்வு நம்மிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரவில் சிறுநீர் கழிக்க எழும்பும் பிரச்சனை பாதியளவிலான 50வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களை பாதிக்கின்றது.
இது வயது முதியவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது; அவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது இரவில் தூக்கித்திலிருந்து எழும்புகிறார்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் போது தூக்கம் கலைகிறது அதனால் மன அழுத்தம், உடல் சோர்வு மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது.
வயதாவதால் ஏற்படும் பக்க விளைவா?
*******************************************
வயதாகும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் இரவில் அதிக முறை சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது.
வயது அதிகமாக ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பிகளும் அளவில் பெரிதாகின்றன.
அதிக அளவு உடைய பிராஸ்டேட் சுரப்பி, உடலை விட்டு வெளியேறும் போது சிறுநீர் கடந்து செல்லும் குழாயை உரசுவதால் அது சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டுகிறது.
ஆனால் இது முழுமையான காரணம் அல்ல.
பிற உடல்நல பிரச்சனைகளான நீரிழிவு, இதய கோளாறுகள் அல்லது உறங்கும் போது மூச்சுத்திணறல் என்பது போன்ற உறக்கம் தொடர்பான கோளாறுகள் ஆகியவை நாக்டுரியாவின் காரணமாக இருக்கலாம்.
எந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?
************************************************
பிரிட்டனில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாள் ஒன்றிற்கு 6 கிராம் உப்பிற்கு (2.4கிராம் அளவு சோடியம்) மேல் எடுத்துக் கொள்ள கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது
1-3வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2 கிராமிற்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்; 7-10 வயது குழந்தைகள் 5 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்
11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 6 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்.
எந்தெந்த உணவில் உப்பின் அளவு அதிக காணப்படுகிறது?
ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்களில் நாம் நினைக்கும் அளவைக் காட்டிலும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும்.
உணவுப் பொருட்களை வாங்கும் போது 100கிராம் உணவில் எத்தனை அளவு உப்பு கலந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
100கிராம் உணவில் 1.5 கிராம் அளவில் உப்பு இருந்தால் அது அதிக அளவாக கருதப்படுகிறது; இது, உணவு பாக்கெட்டுகளில் சிவப்பு நிற கோடிட்டு இருக்கும்.