தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

18 February 2016

கூகுள் 'லூன் பலூன் விழவில்லை, தரையிறங்கியது'


இலங்கையில் அதிவேக இணைய வசதியை வழங்கும் பொருட்டு கூகுள் நிறுவனத்தினால் வான் பரப்பில் பறக்கவிடப்பட்டிருந்த பெரிய பலூன் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட் கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கூறுகின்றார்.
அந்த பலூன் திட்டமிட்டபடி உரிய இடத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தரையிறக்கப்பட்ட இந்த பலூனில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் நல்ல நிலையில் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அதில் மீளவும் ஹீலியம் வாயுவை நிரப்பி இரத்மலானையிலிருந்து பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகவேக இணைய வசதியை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்தினால் “லூன்” என்ற பலூன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதலாவது பரீட்சார்த்த நாடாக இலங்கையை தெரிவு செய்த கூகுள் நிறுவனம், அரசாங்கத்தின் அனுமதியுடன் லூன் திட்டத்தின் கீழ் குறித்த பலூனை பறக்கவிட்டது.
வானில் உலாவரும் இந்த பலூன் மூலம் அதிவேக இணைய வசதியை கிராமிய மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு வழங்குவது கூகுளின் திட்டமாக உள்ளது.


                  
"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.
இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை  இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது  அனைவரும் அறிந்ததே.

04 February 2016

கொழும்பு காலி முகத்திடலில் 68 வது சுதந்திர தினம்


இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
முப்படை, இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இம்முறை தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இலங்கையின் 68வது சுதந்திர தின தேசிய விழாவானது “ஒரே நாடு – பெரும் சக்தி” என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அனைத்து இன மக்களினதும் அடையாளங்களை மேம்படுத்தும் வகையில் கொழும்பு காலி முகத்திடலில் “சுதந்திர இதயத்துடிப்பு” எனும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
காலை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சமமாக நடத்தப்படவுள்ள மாலை நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
சுதந்திர தினம் மற்றும் தேசிய நிகழ்விற்கு ஆசி வேண்டி இன்று காலை சமகாலத்தில் சகல மதஸ்தலங்களிலும் விசேட பூசை, ஆராதனைகள் நடத்தப்படவுள்ளன. 68வது சுதந்திரதின மரியாதை அணிவகுப்பில் 03 ஆயிரத்து 986 இராணுவ வீரர்கள் 02 ஆயிரத்து 102 கடற்படை வீரர்கள், ஆயிரத்து 238 விமானப்படை வீரர்கள், 927 பொலிஸார் மற்றும் 664 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்பர்.
தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரிய, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் மேல் மாகாண ஆளுநர் கே.சீ. லோகேஷ்வரன், மேல் மாகாண முதலமைச்சர் ஈ.ஏ.ஜ.டீ.டீ. பெரேரா உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் நடத்தப்படவுள்ள சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிதிகள் மற்றும் நிகழ்வினை பார்வையிட வருவோரின் வசதி கருதி மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் சில வீதிகளில் குறுகிய நேரத்திற்கு போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு காலை 7.30 மணிக்கு மலர்மாலை அணிவிப்பதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
காலை 8 மணி முதல் அதிதிகள் காலி முகத்திடல் நோக்கி வர இருப்பதனால் நிகழ்வுக்காக அழைக்கப்பட்டோர் மற்றும் பார்வையிட வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை தவிர்க்கும் வகையில் காலை 8 மணிக்கு முதல் காலி முகத்திடலை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதிதிகள் மற்றும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளோர்க்கு காலி முகத்திடல் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் ஏனைய பொது மக்கள் லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கூடாகவும் காலி முகத்திடலை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன தரிப்பிடங்களுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்கு சமகாலத்தில் கொழும்பு பொல்வத்தை தர்மகீர்த்தியாராமை விகாரை, கொழும்பு 13, ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோயில், மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலய வுல்பண்டல் மாவத்தை கிறிஸ்தவ மெதடிஸ்த தேவாலயம் ஆகியவற்றில் பூசை வழிபாடுகள் நடைபெறும்.
தேசிய நிகழ்வில் காலை 8 மணிக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் ஆசனங்களில் அமரச் செய்யப்படுவர்.
காலை 8.33 மணிக்கு மேல் மாகாண முதலமைச்சர் அவரது பாரியாருடனும், காலை 8.35 மணிக்கு மேல் மாகாண ஆளுநர், பாரியார் சகிதமும் வருகைதருவர்.
அதனைத் தொடர்ந்து காலை 8.36 மணிக்கு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்சா பாரியார் சகிதம் காலை 8.37 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பாரியார் சகிதமும் காலை 8.39 மணிக்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், பாரியார் சகிதமும், காலை 8.40 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பாரியார் சகிதமும் நிகழ்வுக்கு வருகை தருவர்.
முற்பகல் 8.41 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாரியார், 8.45 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியாரும் வருகைதருவர்.
இன்று காலை 8.50 மணிக்கு மங்கள மேள முழக்கத்திற்கும் சங்கொலிக்கும் மத்தியில் ஜனாதிபதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கெடுக்கும் 100 பாடசாலை மாணவிகள் தேசிய கீதம் பாடுவர். காலை 9 மணிக்கு ஜயமங்கள கீதம் பாடப்படும்.
காலை 9.11 மணிக்கு ஜனாதிபதிக்கான 21 மரியாதைப் பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதும் காலை 9.15 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்துவார். அதனையடுத்து காலை 9.45 மணியளவில் படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும்.
காலை 11.30 மணிமுதல் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டுச் செல்வர். நண்பகல் 12 மணிக்கு இலங்கை கடற்படையினர் தேசத்திற்காக தீர்க்கப்படும் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்களுடன் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு நிறைவுபெறும்.

03 February 2016

கார்னியா கண் குறைபாடு: இலங்கையின் உலக சாதனை; இந்தியாவில் மட்டும் ஏன் வேதனை?


கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.
ஆனால் இலங்கையின் அண்டைநாடான இந்தியா இதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் கார்னியா கிடைக்காமல் பார்வையின்றி தவிக்கும் நிலைமை இந்தியாவில் இன்னமும் நீடிக்கிறது. இதன் பின்னணி காரணிகளை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எம் ராதாகிருஷ்ணன்.
கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.
உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும்கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.
உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும்போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு.
சுற்றுச்சூழலிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.
மிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும்.
பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.

பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச்சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை. கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது.
இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது.
தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலோ, இன்னமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித கருவிழிப்படலங்கள் கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலைமையே இன்றுவரை தொடர்கிறது.
இந்தியாவில் தினந்தோறும் இயற்கையில் மரணமடையும் பல்லாயிரக்கணக்கானவர்களின் கருவிழிப்படலங்களை உரிய முறையில் அறுவடை செய்து பயன்படுத்தினால் கருவிழிபடல பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை ஒரே வாரத்திற்குள் நீக்கிவிட முடியும் என்று கூறும் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஆனால் அதற்குத் தேவையான அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தார்.