சாதனை என்பது ஒரு இலட்சியத்தை இலக்காகக் கொண்டு, கடின உழைப்பின் மூலம் அதனை அடைதலைக் குறிக்கும். செய்வதற்கு இலகுவல்ல எனப் பொதுவாக நினைக்கும் ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும் விதத்தில் செய்து முடிக்கும் போது அது சாதனையாக மாறிவிடுகின்து. சாதனைகளை எல்லோராலும் இலகுவில் செய்துவிட முடியாது. ஒரு சாதனையைப் படைப்பதற்கு மன உறுதி, நீண்டகாலத் திட்டமிடல், இடைவிடாப் பயிற்சி, தியாகம் எனப் பல விடயங்கள் ஒருசேர அமைய வேண்டும். இவ்வாறு சாதனை புரிபவர்கள் எல்லோராலும் பேசப்படுகிறார்கள்.
அந்தவகையில் பேருவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்நாட்களில் சாதனையை நோக்கிய நடைப் பயணமொன்றை மேற்கொண்டு வருகிறார். இருபத்து ஐந்தே வயதான ஷஹ்மி ஷஹீத் இலங்கையின் பெரும்பாலான கரையோரப் பாதைகளை ஊடறுத்து சுமார் 1500 கிலோமீற்றர்கள் வரையிலான தூரத்தை நடை பயணமாகக் கடந்து நாட்டைச் சுற்றிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 13ம் திகதி (ஜூலை) காலை வேளையில் பேருவளையிலிருந்து ஆரம்பித்த அவரது நடைப் பயணத்தில் தெற்குத் திசையில் சென்று காலி, மாத்றை, அம்பாந்தோட்டை வழியாக மொணராகலை, சியம்பலாண்டுவை, பொத்துவில் ஊடே கிழக்கு மாகாணத்தை அடைந்து தற்போது தனது பயணத்தின் 18ம் நாளில் ஓட்டமாவடியைத் தாண்டி திருகோணமலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளியேறி முல்லைத்தீவு, கிளிநொச்சி வழியாக யாழ்ப்பானத்தை அடைந்து பின்பு அங்கிருந்து மன்னார், அனுராதபுரம், புத்தளம் ஊடாகக் கொழும்புக்கு வந்து பேருவளையில் நிறைவு செய்ய உள்ளார்.